உத்தரவாதமான பழைய பென்ஷனுக்கான பெரு வெற்றியின் முதல் படி

சி.பி.கிருஷ்ணன்

2003 டிசம்பர் 22 அன்று புதிய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த தேதிக்கு முன்னால் வேலைக்கு விண்ணப்பித்து, 2004 ஜனவரி 1 க்கு பிறகு பணியில் சேர்ந்த காரணத்தால் புதிய பென்ஷன் திட்டத்திற்குள் கட்டாயமாக கொண்டு வரப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டத்தை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

மாநில அரசுகள் முன் கை எடுத்துள்ளன

நாடெங்கிலும் ”புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்; உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்து” என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு புதிய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த மறுத்து விட்டது. ஆனால் ஆட்சி மாறிய பிறகும் இன்று வரை அந்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டம் தொடர்கிறது. சமீபத்தில் ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சட்டிஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாசல் பிரதேசம் அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த முன் வந்துள்ளன. ஆனால் அதற்கு எதிராக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுக்கிறது. ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. புதிய பென்ஷன் திட்ட விதிகளில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்பப் பெற வழி இல்லை. எனவே இந்த அரசுகள் மற்றும் ஊழியர்கள் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது ஒன்றிய அரசு. “உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்தினால் கூடுதல் செலவாகும்; எனவே அதனை அமுல்படுத்த முடியாது” என்று ஆளும் பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டுகிறது.

நீதிமன்ற வழக்குகள்

இந்த சூழலில் குறிப்பிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்திற்கு திரும்பி செல்ல அரசு எடுத்துள்ள முடிவு, புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் பெரு வெற்றியின் முதல் படியாகும். 2003ஆம் ஆண்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்து, 2004ல் பணியில் சேர்ந்த காரணத்தால் புதிய பென்ஷன் திணிப்பினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற ஊழியர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடி வெற்றி பெற்றுள்ளனர். ஒரு நீதி மன்றத்தில் கூட அரசின் வாதம் எடுபடவில்லை. அவர்கள் அனைவரும் பழைய உத்தரவாதமான் பென்ஷன் திட்டத்தில் இணைந்து விட்டனர். மேலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் 2021 அக்டோபர் 21 ஆம் நாளே ஒன்றிய அரசிடம் இது சம்பந்தமாக கோரிக்கை வைத்துள்ளார். எனவே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை தற்போது செய்துள்ளது.

முதல் படி

வங்கி ஊழியர்களும் கடந்த இரண்டு இருதரப்பு பேச்சு வார்த்தையின் போதும் புதிய பென்ஷன் திட்டத்தை கை விட்டு அனைவருக்கும் உத்தரவாதமான பழைய பென்ஷன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக கோரி வருகின்றனர். அனைத்து ஊழியர்களுக்கும் உத்தரவாதமான பழைய பென்ஷன்  வென்றெடுப்பதற்கு முதல் படி தான் ஒன்றிய அரசின் அறிவிப்பு.

4 comments

  1. நல்ல செய்தி…. பென்ஷன் அப்டேஷன் குறித்தும் ஒரு கட்டுரை எழுதலாமே…

  2. கோடி கைகள் போராடி கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  3. வரவேற்க தகுந்த நடவடிக்கை.
    புதிய பென்ஷன் திட்டத்தில் திணிக்கப்பட்ட வர்கள் பணத்தை திரும்ப தர வழகயில்லை என்ற வாதம்……
    இதன் மூலம் நீர்த்துப் போகும்.
    ஆனால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய ஊழியர்கள் போராடித்தான் ஆக வேண்டும்! தானாக நடைபெறாது !

Comment here...