நாடாளுமன்றம் முன்பு தொழிலாளர்-விவசாயி கூட்டுப் போராட்டப் பேரணி

ப்ரல் 5, 2023

செப்டம்பர் 5, 2022 அன்று புது டில்லியில் ஒரு மாபெரும் தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்களின் கூட்டு மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு), அகில இந்திய கிசான் சபா (AIKS) மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

போலி வாக்குறுதிகள்

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, விவசாய உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பு என்று பற்பல வாய்ப் பந்தல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடியின் பாஜக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டும் இல்லாமல், அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் லாப வேட்டைக்குத் தீனி போடும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியது. விவசாயிகளின் வாழ்வுரிமையை, நிலங்களைப் பறித்து அவர்களை விவசாயக் கூலிகளாக மாற்ற சட்டம் இயற்றியது.

கூர்மையடையும் அசமத்துவம்

தேசத்தின், மக்களின் சொத்துக்களை கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு தாரை வார்த்து, வாராக் கடன் தள்ளுபடி, வரிச் சலுகை என்று வாரி வழங்கி அவர்களை மேலும் கொழுக்க வைக்கிறது. ஆனால், வரிக்கு மேல் வரி போட்டு விலைவாசியை விண்ணை முட்ட உயர்த்தி மக்களை ஓட்டாண்டி ஆக்கி வருகிறது. ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை தீவிரமாகக் கூர்மையடையச் செய்து வருகிறது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த தொழிலாளர் விரோத, விவசாய விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முற்றிலும் நிராகரித்து, மக்கள் நலம் சார்ந்த மாற்றுக் கொள்கைகளை உருவாக்குவதை வலியுறுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்கனவே வளர்ந்து வரும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் மற்றொரு மைல் கல்லாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

  • தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை வாபஸ் பெறு!
  • குறைந்த பட்ச மாதச் சம்பளம்  ₹ 26,000 மற்றும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ₹ 10,000 நிர்ணயம் செய்!
  • உழைப்போர் அனைவருக்கும் உத்திரவாதமான ஓய்வூதியம் வழங்கு!
  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைC2+50% வழங்கு!
  • மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் 200 நாட்கள் வேலை, குறைந்த பட்ச கூலி₹ 600 வழங்கு!
  • பொதுத் துறையை தனியார் மயமாக்காதே!
  • விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்து!
  • பணம் படைத்தவர்கள், கார்ப்பரேட் மீது கூடுதல் வரி, சொத்து வரி போடு!

மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது லட்சக் கணக்கான தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களை அணி திரட்டி மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர்-விவசாயி போராட்டப் பேரணி) பிரம்மாண்டமாக நடத்துவதற்கு மாநாடு அழைப்பு விடுத்தது.

போராட்ட ஆண்டு

ஏற்கனவே இந்தப் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. எப்படிப் பார்த்தாலும், இந்தியத் தொழிலாளி வர்க்கங்களின் அணி திரட்டல் என்பது இந்தப் பேரணி மூலம் முன்னெப்போதும் காணாத வகையில் பேரெழுச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் கூட்டுப் போராட்டப் பேரணி, 2023 ஆம் ஆண்டு ஓர் உறுதியான, பரந்துபட்ட மக்கள் போராட்டங்களின் ஆண்டாக இருக்கப் போகிறது என்பதை கட்டியம் கூறுகிறது.

One comment

Comment here...