சமத்துவம் சமைப்போம்…..

எஸ்.பிரேமலதா

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, புத்தாடைகளும், பூங்கொத்துகளும், ‘பெண் என்பவள் ஆணுக்கென கடவுளால் படைக்கப்பட்ட பரிசுப் பொருள்’ ரீதியிலான வாட்ஸ்அப் வாழ்த்துக்களுமாய் கொண்டாட்டங்கள் ஒருபுறம்.‘மனைவியை நேசிக்கறவங்க….” வகை விளம்பரங்களும், ஆடை அணிகலன் துவங்கி அழகு சாதனப் பொருட்கள் வரை தாராளமான தள்ளுபடிகளும், ‘உங்க ஹெல்த் மேல அக்கறை இருக்கா….’ எனக் கூவி அழைக்கும் மருத்துவமனைகளுமாய் கடைந்தெடுத்த வணிகமயத்தின் விற்பனை உத்திகள் மறுபுறம்.சமத்துவத்திற்கான பாதைஇவற்றிற்கு இடையே, தனக்கேயுரிய புரட்சிக் கனலை உயர்த்திப் பிடித்தபடியே, இந்த வருடமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது, மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம்.கொண்டாட்டங்களின் அடுத்த கட்டமாய் இறுகிக் கிடக்கும் ஆணாதிக்க சமூகத்தை அசைத்துப் பார்க்கும் வேலையை ஏற்கனவே சத்தமின்றி செய்யத் துவங்கி விட்டது இந்த நாள்.

 நுகர்வு கலாச்சாரத்தை முன்னிறுத்தும் வெற்று வியாபார  கூச்சல்களை எல்லாம் புறந்தள்ளி, சமத்துவத்திற்கான பாதை வகுக்கத் துவங்கும் காலமும் வெகு தொலைவில் இல்லை. “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ….” எனும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைப் போல், இந்த நாளுக்கான உன்னதமான போராட்டப் பிண்ணனியை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள் எதுவும் வெற்றி பெற இயலாது. ஏனெனில், மகத்தான இந்த நாள் நூற்றாண்டுகளாய் அடைகாத்து வருவது பெண்களின் பேரெதிர்ப்பால் ஆர்ப்பரிக்கத் துவங்கிய பெருந்தீ. பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரத்தில் 1917 மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கிய போராட்டம், அங்கு பெரும் வெடிப்பாக பரிணமித்து சோஷலிச சமூகத்திற்கான புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட அந்த நாளின் நினைவாகவே, மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்பது 1921ஆம் ஆண்டில் நடந்த உலக கம்யூனிஸ்ட் பெண்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவ சுரண்டல் அமைப்புகளையும், பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்தாக்கங்களையும் எதிர்த்து பெண்கள் சமரசமின்றி மேற்கொண்டு வரும் புரட்சிகர போராட்டங்களின் சின்னமே இந்த சர்வதேச மகளிர் தினம். குறிப்பாக, நமது இந்திய சமூகத்தில் பெண்களின் போராட்டமானது, உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமாகவும், சாதி மதங்களின் பெயரில் தேசத்தை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான போராட்டமாகவும், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போரட்டமாகவும், பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டமாகவும் விரிவடைந்து வருகின்றது.

பாசிச சக்திகளின் பிடியில் உண்மையான ஜனநாயத்திற்கும், சமத்துவத்திற்கும் பெரும் தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய இந்தியச் சூழலில், பெண் கல்வி, பெண்களின் சுயசார்பு போன்ற அடிப்படை வாழ்வுரிமைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. பெண் வெறுப்பு அரசியல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பூதாகரமாக அச்சுறுத்துகிறது. கோரிக்கை தினம்இத்தகைய சூழலில், பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்ட நாளாக இந்த மகளிர் தினத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், மியூசிகல் சேர், லெமன் ஸ்பூன் ரீதியிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து கேலிக் கூத்தாக மாற்ற முயல்கின்றனர் சிலர்.

இதற்கு மாற்றாக, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வங்கித் துறையில் பணிபுரியும் பெண்களின் பிரத்யேகப் பிரச்சனைகளையும், பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளையும் முன்வைத்து, இந்த வருடம் மார்ச் 8ஐ கோரிக்கை தினமாக அனுஷ்டித்துள்ளது. மேலும் பெண்கள் அமைப்புகளோடு இணைந்து முற்போக்கான நிகழ்வுகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் உலக அளவில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச மகளிர் தின முழக்கம் “EMBRACE EQUALITY” என்பதாகும். சமத்துவமான உலகைப் படைத்திடுவதற்கான அறைகூவல்.பெண்களின் சாதனைகளை கொண்டாடும் சமூகமாக, பெண்களின் ஆற்றலைப் போற்றும் சமூகமாக, பெண்களை சக மனிதராக பாவிக்கும் சமூகமாக, வன்முறைகளும், பாகுபாடுகளும் களைந்திட்ட சமத்துவ சமூகமாக புதியதோர் உலகம் செய்வோம். சமத்துவம் சமைப்போம்…..

2 comments

 1. அருமையான கட்டுரை.
  புரட்சிகரமான முறையில் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையை ஆசிரியர் அருமையாக முன் வைக்கிறார். வாழ்த்துகள்.
  கடைசி பகுதியில்,
  மியூசிகல் சேர், லெமன் ஸ்பூன் ரீதியிலான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து கேலிக் கூத்தாக மாற்ற முயல்கின்றனர் சிலர்
  என்று வரும் விமர்சனம் மிகவும் பொதுவான தாக்குதலாக விமர்சிக்கப் படுகிறது.
  பணியில் இருப்போர் அல்லது இல்லத்தில் கட்டுண்ட பெண்கள் பொது வெளியில் இப்படியான சங்கமத்தில் சந்திக்கும் போது ஆடல் பாடல் கொண்டாட்டங்கள் கூடாது என்று பார்ப்பது என்ன பார்வை, இந்தக் கொண்டாட்டங்களை மீறி பெண் சுதந்திரம், தனித்துவம், பாலின சமத்துவம் குறித்த குரல்கள் அவற்றில் ஒலித்த இடங்கள் உண்டு. காட்டடியாக நாம் புறக்கணித்தால், முற்போக்கு புரட்சிகர சிந்தனைகள் பக்கம் அவர்களை நாம் எப்போது திரட்டப் போகிறோம்?
  எல்லோரையும் உட்கொள்கிற, ஈர்க்கிற எழுத்துகள் இன்றைய தேவை என்பது என் பணிவான கருத்து.
  எஸ் வி வேணுகோபாலன்

 2. கொண்டாட்டங்கள் கோரிக்கைகள் என இரண்டு போக்கு பற்றியும் சரியாக முன் வைக்கப்பட்டுள்ளது.
  கோரிக்கைக்கான முன்முயற்சியாளர்களின் செயல்பாடே சரியான திசை வழியை முன்கொண்டு செல்லும்.
  வாழ்த்துக்கள்,தோழர் !

Comment here...