செம்பி: திரை விமர்சனம்

சி.பி.கிருஷ்ணன்

பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்த்து முடித்தபின் மனதில் ஒரு வித பாரமும், நம்பிக்கையும் ஒரு சேர படர்ந்தன. கொடைக்கானலில் ஒரு சிறு கிராமத்தில் பாட்டிதான் சிறு குழந்தை முதல் தனது பேத்தி செம்பியை நம்பிக்கையும் தைரியமும் ஊட்டி வளர்த்து வருகிறார். அவள் 6ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி. தாய் தந்தை இருவரும் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும்போது இறந்து விடுகின்றனர். ஒரு நாள் மலைத்தேனை சந்தையில் விற்று வர செம்பி தனியாக செல்லும்போது மூன்று கொடூரமான இளைஞர்கள் அவளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். எந்தவிதமான உறுத்தலும் இன்றி அதை கொண்டாடுவதும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறலை கேலி செய்வதும் பணக்கார இளைஞர்கள் எத்தகைய பாதையில் செல்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

குற்றவாளிகளில் ஒருவன் பணபலம் படைத்த எதிர்கட்சித் தலைவரின் மகன். அது சட்ட மன்ற தேர்தல் நடக்கும் காலம். விஷயம் தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் செம்பியின் பாதிப்பையே எல்லா பொதுக்கூட்டங்களிலும் மலிவான அரசியலாக்கி, அனுதாபம் தேடி ஆட்சியை பிடிக்க முயலுகிறார். கருத்துக் கணிப்பில் 232 தொகுதிகளை பிடிக்கும் அளவிற்கு அந்த பாதிப்பை வியாபாரம் ஆக்குகிறார். விஷயம் தெரிந்தவுடன் மகனைக் காப்பாற்ற ஆதாரங்களை அழிப்பது, விசாரணை செய்த ஆய்வாளரை கொல்லுவது, செம்பியும், பாட்டியும் பயணம் செய்யும் பேருந்தை கவிழ்ப்பது என்று எல்லா நாச வேலைகளிலும் ஈடுபடுகிறார். அதற்கெல்லாம் அல்லக்கையாக ஒரு வழக்கறிஞர். தங்கள் கட்டுப்பாட்டில் காவல்துறையை வைத்திருந்தும், அது துருப்பிடித்து போயிருப்பதால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நிற்கும் ஆளும் கட்சி.

இதையெல்லாம் மீறி பாதிக்கப்பட்ட செம்பிக்கு நியாயம் கிடைத்ததா, மூன்று கயவர்களும் தண்டிக்கப்பட்டார்களா என்பதுதான் படம்.

ஒரு பேருந்து கதை சொல்வது போல் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர். படத்தின் பெரும்பகுதி பேருந்தில்தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. செம்பியாக நடித்துள்ள சிறுமி நிலா, பாட்டியாக கோவை சரளா தத்ரூபமாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். பாதிப்புக்குள்ளான சிறுமியாக தனது வலியை கடத்துவதிலும், கயவர்களை காணும்போது தனது அதிர்ச்சியை வெளிப்படுத்துவதிலும், தன்னை பாலியல் கொடுமை செய்தவர்களை அண்ணா என்று அழைக்கும் குழந்தைத்தன்மையை வெளிப்படுத்துவதிலும் நிலாவின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய பேத்திக்கு நீதி கிடைக்க வேண்டும் எனபதில் காட்டும் உறுதி, மூன்று கோடி ரூபாய்க்கு குற்றவாளிகளிடம் சோரம் போய் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து பாட்டியை மிரட்டி வழக்கை வாபஸ் செய்ய நிர்பந்திக்கும் காவல்துறை ஆய்வாளரை புரட்டிப் போட்டு மிதிக்கும் வீரம், பேருந்தில் ஒரு கான்ஸ்டபிள் நடந்தவைகளை திரித்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க முயலும்போது விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் எதிர்த்து கேட்கும் துணிச்சல் இப்படி பல இடங்களில் கோவை சரளா மலை வாழ் பெண்களின் மன உறுதியை பிரதிபலிக்கும் விதத்தில் அபாரமாக நடித்துள்ளார். எதிர் கட்சித் தலைவராக நாஞ்சில் சம்பத், முதல்வராக பழ கருப்பையா, நீதிபதியாக கு ஞானசம்பந்தம் ஆகியோர் தங்கள் பங்கை கச்சிதமாக செய்துள்ளனர். பேருந்தின் நடத்துநராக தம்பி ராமையாவின் பங்கு முத்திரை பதிக்கும் வகையில் உள்ளது

வழக்கமாக சினிமாவில் காட்டப்படும் செயற்கைத்தனங்கள் எதுவும் இல்லாமல் சாமான்ய மக்கள் ஒவ்வொருவரும் எப்படி செம்பிக்கு உதவுகிறார்கள் என்பதை காட்டியதில்தான் இப்படத்தின் வெற்றியே அமைந்துள்ளது. துளியும் தொய்வில்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் 15க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை படம் பார்ப்பவர்கள் மனதில் பதிய வைப்பதில் இயக்குநர் சாதனை புரிந்துள்ளார். எப்படி முதலில் எதிர்ப்பவர்கள் கூட பின்பு உணமை அறிந்து மனம் மாறி உதவுகிறார்கள் என்பது எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.

காவல்துறையினர், நீதிமன்ற அலுவலர்கள் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் எவ்வாறு பணக்காரர்களின் ஏவலாட்களாக செயல்படுகிறார்கள் என்பதையும், பணம் எவ்வாறெல்லாம் பாயும் என்பதையும் மீண்டும் ஒரு முறை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதே சமயம் வீதி நாடகம் போன்ற வழி முறைகளில் மக்கள் பிரச்சனையை தொடர்ந்து பேசும் இளைஞர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

மக்கள்தான் ஹீரோக்கள்; அவர்களிடம் உண்மையை சேர்த்துவிட்டால் அவர்கள் கூட்டு முயற்சியில் பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்பதையும், தனி மனித சாகசமெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதையும் இந்தப்படம் அழுத்தமாக சொல்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு உண்மையின் பக்கம் நிற்க எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் அருமையாக காட்டப்பட்டுள்ளன. பேருந்தில் வரும் ஓர் இளம் வழக்கறிஞர் (அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன்), தற்போதுள்ள குறையுள்ள சமுதாயத்திலேயே, இருக்கும் சட்டங்களையும், தொழில்நுட்பத்தையும் எப்படி பாதிக்கப்படும் சாமான்ய மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதை துல்லியமாக காட்டுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, பெயரைக்கூட தெரிவிக்க விரும்பாத அவரின் உதவி மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

ஆய்வாளரை தாக்கியதற்காக தேடப்பட்டு வரும் மூதாட்டி கோவை சரளா, அந்த வழக்கிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பதை காட்டாதது போன்ற சிறு குறை, ஓடும் பேருந்துகளில் இடம் பெயர்வது போன்ற சினிமாத்தனமான காட்சி இருந்தாலும், உண்மைக்கு நெருக்கமான இப்படி ஒரு படத்தை அளித்ததற்கு இயக்குநர் பிரபு சாலமனை சிறப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இயற்கையையும், ஓடும் பேருந்தையும் காட்சிப்படுத்தியுள்ள எம்.ஜீவன்  தனது பங்கை செறிவாக ஆற்றியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு செறிவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, நீதியை நிலை நாட்ட வேண்டிய நீதித்துறை தோற்றுப்போகும்போது அவற்றை இயக்க வைப்பதில் பொது மக்கள் எத்தகைய பங்காற்றமுடியும் என்பதை இந்தப்படம் நமக்கு பாடமாக சொல்கிறது. ”சோகமே எனக்கு பிடிக்காது; எனவே நான் இத்தகைய படங்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவேன்” என்று சொல்லும் பலரை நம்மிடையே பார்த்திருப்போம். ஆனால் பாலியல் குற்றம் எங்கேயோ எப்போதோ நடக்கிறது என்று கடந்து போய்விட முடியாது. அது அன்றாடம் நடக்கும் கொடுமையாக மாறி வரும் சூழலில் இத்தகைய படங்களின் பங்களிப்பு மகத்தானது.  குறிப்பாக ஹதரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியில் இத்தகைய படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

4 comments

  1. I would repeat to stress what the critic of this movie has said on the last that Hathras rape case has finally delivered. This is similar to the chaotic traffic with no sense of discipline people who used to drive on the roads.
    The violations of driving on the platform, one-way route, jumping signal has become the norm of the daily routine and people driving has no sense towards the care of the pedestrians, other driving vehicles . What matters to them, driving or riding on vehicles is to reach the destination somehow.
    Two days before a 23 year old woman drove her car on the and killed 3 people who were sleeping on the pavement.
    The licensing system is the root cause of this evil, since without bribing the system one cannot have the license.
    We cannot confine to the licensing system alone, the roads are not even to drive. It has all the pot holes. Tar has been poured on an uneven surface and on these roads the drivers n riders manage to drive.
    We are pushed in to a inhuman system where people quench their thirst from the blood they draw without any qualms.
    We have become barbaric in our attitude, in our actions.
    The less privileged are the worst sufferers.
    In sum total we have become herds of the corporate shepherds.

  2. வெகு நாட்களுக்குப் பின் ஒரு தமிழ் படத்தைக் காணவேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. அருமையான விமர்சனம்.

  3. சபாஷ் தோழர்.உங்கள் பதிவு படம் பார்த்தது போல இருக்கு.படத்தில் சொல்லியிருப்பது போல ஊர் மக்களிடம் பிர்சனைகளை கொண்டுபோனால் அவர்கள் கூட்டு முயற்சியில் தீர்வு காண்பார்கள் ….. மம் இப்படி எல்லாம் நடக்கணும் என்று தான் எதிர் பார்க்கிறோம்…
    அருமையான பதிவு தோழர் CPK

Comment here...