டெல்லியை குலுக்கிய தொழிலாளர்கள் – விவசாயிகள், வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

டி.ரவிக்குமார்

பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடவும், வங்கிப் பணிகளில் தேவைக்கேற்ப  ஆட்கள் நியமனம், வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை, அனைத்து தற்காலிக, தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், வங்கி ஊழியர் பென்சன் திட்டத்தில் முன்னேற்றம், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரம் பாதுகாப்பு ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 4.4.2023 அன்று புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு நாள் தர்ணா போராட்டத்தை பிஇஎப்ஐ சங்கம் நடத்தியது.

நாட்டின் அனைத்து பகுதிகளில் பணி புரியும்  பொதுத்துறை, தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான வங்கி ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும், வணிக முகவர்களும் முன்னதாக பாராளுமன்ற தெரு பேங்க் ஆப் பரோடா கிளையிலிருந்து கோரிக்கை முழக்கமிட்டு பேரணியாக  சென்றனர்.

 சிஐடியுவின் அகில இந்திய தலைவர் ஹேமலதா, தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள வன்மையாக கண்டித்தும், போராடும் வங்கி ஊழியர்களுக்கு சிஐடியு சார்பாக வாழ்த்தியும் தர்ணாவை துவக்கி வைத்தார்.

சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென், அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் மரியம் தவாலே, பாராளுமன்ற உறுப்பினர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க செக்கரட்டரி ஜெனரல்  எஸ்.வெங்கடேச ரெட்டி,  அகில இந்திய நபார்டு ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் ராணா மித்ரா,  அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் சங்க சார்பாக சுனில்குமார், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் நவீன் சந்த், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார்,  AIBEA உதவித் தலைவர் ஜே.பி.சர்மா, NOBW சார்பாக மன் மோகன் குப்தா மற்றும்  AIBOA டெல்லி மாநிலத்  தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தர்ணா போராட்டத்தை வாழ்த்தி பேசினர். தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளையும், நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் எதிராக ஒன்றிய அரசு  எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் சுட்டிகாட்டி அவற்றிற்கெதிராக  ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்தபட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அந்த மகத்தான பணியின் ஒரு பகுதியாக நடைபெறும் தர்ணா போராட்டத்தை அனைத்து தலைவர்களும் வாழ்த்தினர்.

05/04/2023 அன்று புதுடெல்லி மாநகரம் செங்கொடிகளின் சங்கமமாக மலர்ந்தது. மாநகரில் எங்கு பார்த்தாலும் செங்கொடிகளுடன் விவசாயிகளும், தொழிலாளர்களும்  இந்திய தொழிற்சங்க மையமும் (CITU), அகில இந்திய விவசாயிகள் சங்கமும் (AIKS), அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் (AIAWU) இணைந்து நடத்திய மாபெரும் பேரணிக்கு அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர். பேரணியின் நிறைவு இடமான  புதுடெல்லி ராம்லீலா மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கமிப்பால் நிரம்பி வழிந்தது.

இந்தியாவின் அனைத்து மாநிலத்திலிருந்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பாக நடைபோட்ட இந்த மாபெரும் பேரணி பார்ப்பவர்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதாக அமைந்தது.

இந்த மாபெரும் பேரணி, பிஜேபி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலன்களுக்கெதிரான நடவடிக்கைகளை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களைப் பிளவுபடுத்தும் வகுப்புவாத சக்திகளுக்கெதிராக குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.  நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை நிலைநிறுத்தவும், பல்வேறு முகங்களைக் கொண்ட வகுப்புவாத சக்திகளின் பிளவுபடுத்தும் மற்றும் சீர்குலைக்கும் சூழ்ச்சிகளைத் முறியடிக்கவும், அதிகாரத்தில் உள்ள கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டணியால் பின்பற்றப்படும் பேரழிவு தரும் நவ தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தது.
ஏப்ரல் நான்கு அன்று சுயேச்சையான போராட்டம் நடத்துவதற்காக டெல்லியில் திரண்டிருந்த வங்கி ஊழியர்கள் அடுத்த நாள், தொழிலாளர்கள் விவசாயிகள் பேரணியிலும் கலந்து கொண்டது எதிர் கொள்ளவிருக்கும் ஒன்றுபட்ட போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

One comment

  1. விவசாய தொழிலாள வர்க்க இயக்கங்களுடனான வங்கி ஊழியர்களின் போராட்ட ஒற்றுமை வளர்வது மகிழ்ச்சி அளிக்கின்றது !

Comment here...