டாக்டர் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர்: ஆளுமை மிக்க தலைவர்

ஜேப்பி

சுதந்திர இந்தியாவின் பாதையைச் செதுக்கியவர்களில் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். ஆனால், அம்பேத்கரைப் பலரும் தலித் சமூகத்தின் தலைவராக மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பியாக மட்டுமே சுருக்கி விட்டனர். காந்தி, நேரு போன்ற ஆளுமை பெற்ற பல தலைவர்களுக்கு நிகரான தலைமைப் பண்பும், உயரிய ஆளுமையும், சீரிய செயல் திறனும், கூரிய அறிவாற்றலும், பல் துறை ஞானமும் பெற்றவர் டாக்டர் அம்பேத்கர். சமூகவியல், சட்டம், மெய்யியல், வரலாறு, பொருளாதாரம், இதழியல், பெண்ணியம், தொழிலாளர் சட்டம், கல்வி, மதங்களின் ஒப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் அவருக்கு இருந்த புலமை அங்கீகரிக்கப் படவேயில்லை. தலித் மக்களுக்கு மட்டும் அல்ல இந்திய மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டிய ஒரு சிறந்த தலைவர் டாக்டர் அம்பேத்கர்.

சமூகப் பார்வை

இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு கிராமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பார்கள். இந்தியக் கலாச்சாரத்தின் ஆணி வேராக, முதன்மையான அங்கமாக இந்தியக் கிராமங்கள் உள்ளன. காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் இந்தியக் கிராமங்களைப் பற்றிய கண்ணோட்டங்கள் அவர்களை நமக்கு நன்கு அறிமுகம் செய்கின்றன எனக் கூறலாம். காந்தியின் பார்வையில் இந்தியக் கிராமங்கள் நம்பகத் தன்மையின் இருப்பிடம். நேருவுக்கு அவை பின்தங்கிய நிலையின் வெளிப்பாடு. டாக்டர் அம்பேத்கருக்கு கிராமம் என்பது ஓர் “ஒடுக்கு முறைத் தளம்”.

“இந்து கிராமம் என்பது இந்து சமூக அமைப்பு வேலை செய்யும் ஓர் ஆலை. அங்கே இந்து சமூக அமைப்பு முழுமையாக செயல்பாட்டில் உள்ளதை ஒருவர் பார்க்கலாம்.” என்று எழுதினார் அம்பேத்கர்.

இந்திய மக்கள் சமூகம் மனிதாபிமானத்துடன் தனது வாழ்க்கையைச் செதுக்க, கொடூர சாதி அமைப்பையும் அதன் பழக்க வழக்கங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் எப்படிக் களைய வேண்டும், பிற்போக்குத் தனமான இந்து சாஸ்திரங்களின் மேலாதிக்கத்தை எப்படி மறுதலிக்க வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினார் அம்பேத்கர்.  இந்திய கிராமங்களில், ஏன் தமிழகத்திலும் கூட, சமூக ஒடுக்கு முறைகள் இன்றும் தொடர்கின்றன என்ற செய்திகள் அம்பேத்கரின் சமூகப் பார்வை எவ்வளவு சரியானது, அவரது அறிவுரைகள் எவ்வளவு நேர்மையானவை என்பதையே தெளிவாக்குகின்றன.

கற்பி; கிளர்ச்சி செய்; ஒன்றுசேர்

1942 ஆம் ஆண்டு அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாட்டில் ஆற்றிய உரையில், சாதிய ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு ஒரு மாபெரும் வெகுஜன இயக்கம் தேவை என்பதை உணர்த்த “கற்பி; கிளர்ச்சி செய்; ஒன்று சேர்” என்ற முழக்கத்தைப் பயன்படுத்தினார் டாக்டர் அம்பேத்கர். இந்த முழக்கம் “சதித்திட்ட அமைப்பு” முறைகளையும் “பாராளுமன்றவாத”த்தையும் நிராகரித்து இயற்கைக்குப் புறம்பான, பிறப்பின் அடிப்படையிலான, சாதீய அடுக்கு முறையை ஒழிப்பதற்கு, பிற்போக்கு இந்து சாஸ்திர மேலாதிக்கத்தைத் தகர்ப்பதற்கு பொது மக்களைத் திரட்ட வேண்டிய கடமையை வலியுறுத்துகிறது.

இந்துத்துவா சக்திகள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு இந்து சாஸ்திரத்தின் மேலாதிக்கத்தை, சாதீய ஒடுக்கு முறையை மேலும் கூர்மையாக்க முயலும் இக்கால கட்டத்தில், பிரம்மாண்டக் கோவில்களைக் கட்டுவது முக்கியமா இல்லை இந்துக்கள் அனைவரையும் பாகுபாடின்றி அனைத்து கோயில்களுக்குள்ளும் நுழைய அனுமதிப்பது மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது முக்கியமா என்ற கேள்வி வலுவாக எழுப்பப்பட வேண்டும்.

கோவில் அனுமதி மறுக்கப்படுவது மட்டுமல்ல “இந்தியாவின் கோவில்கள்” என நேருவால் வருணிக்கப்பட்ட ஐ.ஐ.டி. (IIT)க்களில் சாதீயச் சமூக ஒடுக்கு முறைகள் தொடர்ச்சியாக அரங்கேறுவது என்பது அம்பேத்கரின்  போதனைகளின் முக்கியத்துவம் முன் எப்பொழுதையும் விட இப்பொழுது அதிகமாகி உள்ளது என்பதையே காட்டுகின்றது.

அம்பேத்கரின் போதனைகளை பின்பற்றுவோம்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினங்களில் அவர் படத்திற்கும், சிலைக்கும் மாலை மரியாதை செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், “இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை அது சாதி பாகுபாட்டின் விளைவாய்ப் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை” என்று கூறிய தந்தை பெரியாரின் வழியில் நின்று அம்பேத்கரின் போதனைகளான “சாதி ஒழிப்பு, இந்து சாஸ்திர மேலாதிக்க மறுதலிப்பு” ஆகியவற்றிற்காக அனுதினமும் மக்களைத் திரட்டிப் போராடுவதே நமது தலையாய கடமை  என சூளுரைப்போம்.

(2023 ஏப்ரல் 14 – அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்த நாள்)

One comment

  1. “கிராமம் என்பது ஒடுக்குமுறை தளம்” என்பது, சிறப்பான கூர்மையான கருத்து.
    கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் 💪

Comment here...