வாசிப்பு நம் வசமாகட்டும்

எஸ்.வி.வேணுகோபாலன் 

டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார் தந்தை பெரியார். ஆளற்ற தீவில் இருக்க நேர்ந்தால் என்ன முக்கிய தேவை உங்களுக்கு என்ற கேள்விக்கு, புத்தகங்கள் என்று பதில் சொன்னார் பண்டித நேரு என்று சொல்லப்படுகிறது.  இடையறாத வாசிப்பு, எழுத்து இரண்டையும் தனது இறுதி மூச்சு வரை விட்டு விடாது இருந்தார் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாத்.

தங்களது பழுத்த முதுமையிலும் அபார வாசிப்பில் இருக்கும் கல்வியாளர் ச சீ இராசகோபாலன் – சீதா அம்மாள் இணையர் படிக்கும் வேகம் நம்மை வியக்க வைக்கும்.  வாசிப்பு குறைந்துவிட்டது என்று கவலை தெரிவிக்கப்படும் இதே நாட்களில் புத்தகக் கண்காட்சியில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு புத்தகத் தேடலில் இறங்குவதையும் பார்க்கிறோம். நம்பிக்கை அளிக்கும் காலம் தான் இது.

நூலகத் தந்தை என்றழைக்கப்படும் சீர்காழி ஆர் ரங்கநாதன் அவர்கள், அக்காலத்தில் புத்தகங்கள் ஏற்றி வண்டி கட்டிக்கொண்டு சிற்றூர் சிற்றூராகப் போய்ப் புத்தக வாசிப்பு ஊக்குவித்து வந்தவராம்.  அவர் தான் பின்னாளில், நூலகங்களில் புத்தகங்களை கோலன் முறையில் பகுப்பாக்கம் செய்யும் முறையை உருவாக்கியவர். இல்லத்தரசியாக இருந்த ஒரு பெண்மணி, சென்னை பல்கலைக் கழக நூலகத்தில் உறுப்பினராக இருந்ததையும், அவர் கேட்டனுப்பிய புத்தகங்கள் இருக்கின்றன, பெற்றுக் கொள்ளலாம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டதையும் வாசிக்கிறோம். அவருக்குக் கடிதம் எழுதிய நூலகர் இதே சீர்காழி ஆர் ரங்கநாதன் அவர்கள் தான்!  வாசிப்பில் வெளியுலகை நோக்கிய சன்னல்களை திறந்து வைத்துப் பார்த்து விடுதலைப் போரிலும் பங்களிப்பு செய்த அந்தப் பெண்மணியின் பெயர் சுப்பம்மாள்! அவருடைய  பேத்தி தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமன்! தோழர் மைதிலி, தனது பாட்டியைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகமான ஒரு வாழ்க்கையின் துகள்கள் அபாரமான வாசிப்பு அனுபவம் வழங்கும். 

கோவில்பட்டி இளைஞர்கள் பலரை ஈர்த்து முற்போக்குப் படைப்பாளிகளாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னணி செயல் வீரர்களாக, இடது சாரி சிந்தனையாளர்களாக, சமூகப் போராளிகளாக வளர்த்தெடுத்த பெருமைக்குரிய பாரத ஸ்டேட் வங்கி ஊழியரான (மறைந்த) அன்புத் தோழர் பால்வண்ணம், அத்தனை மாயா ஜாலங்களையும் புத்தக வாசிப்பை மையமாக வைத்தே நிகழ்த்தினார். அவரது வாழ்நாள் முழுக்க யாரை சந்திக்கும்போதும் புத்தகம் வழங்கும் அமுத சுரபியாகவே ஒரு ஜோல்னாப் பை அவர் தோளில் சுகமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கட்டத்தில்  பல அமைப்புகள் இணைய வழியில் புத்தக வாசிப்பை, நூல் விமர்சனங்களை, எழுத்தாளர் நேர் காணல்களை முன்னெடுத்தது குறிப்பிட வேண்டியது. பாரதி புத்தகாலயம் புக் டே இணைய தளத்தை உருவாக்கியது படைப்பாளிகளுக்கான வேடந்தாங்கல் ஆக உருவெடுத்தது. எண்ணற்ற சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், காணொளிப் பதிவுகள், வரலாற்று ஆவணப் படுத்தல் என்று இலக்கிய நதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் இவற்றின் ஆர்வமிக்க வாசகர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. 

வாட்ஸ் அப்பில் அல்லது வெவ்வேறு சமூக ஊடகங்களில் செலவாகும் நேரத்தைவிட, புத்தக வாசிப்பில் பயனாகும் நேரம் மதிப்பு மிக்கதாகிறது. தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து பார்த்து சோர்வுறும் கண்கள், வெறுப்புற்றுப் போகும் மனம் இவற்றுக்கு நேர் மாறாக, புத்தக வாசிப்பில் உற்சாகமுறும் சிந்தை, மன நிறைவில் உறக்கமுறும் கண்கள்  பன்மடங்கு மேலானது என்கின்றனர் மருத்துவர்கள். 

பாடப் புத்தகங்கள் வாசிக்க வேண்டிய நெருக்கடியில் பொதுவான வாசிப்பு ஊறு செய்யாதா என்று அண்மையில் கல்லூரி மாணவியர் 70 பேர் மத்தியில் பேசுகையில் கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் அற்புதமானது. ‘பொதுவான வாசிப்பு, எங்களை உயிர்ப்புற வைக்கிறது, அப்படியான நூல்களை எங்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள், வாசிப்பின் வேகமும் கூடும், பாட புத்தக வாசிப்புக்கும் உளவியலாகத் தயாராகி விடுவோம்’ என்றனர். 

புத்தகங்கள் சூழ்ந்த வீடு, வாசிப்பின் மணம் நிரம்பியதாகவும் இருக்க வேண்டும். அதன் இன்பம் அடுத்தடுத்த தலைமுறையினரையும் வாசிப்பு நோக்கி நகர்த்தும்.  மாற்றத்திற்கான போராட்டங்களை உந்தித் தள்ளுவதில் புத்தகங்களின் பங்களிப்பு மகத்தானது. மூட நம்பிக்கைகள், பாலின அசமத்துவம், சமூக பாகுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து ஒரு தேசத்தை விடுவித்து உன்னதமான ஒரு சமூகத்தைப் படைக்கும் தாகத்தை தீப்பொறி போன்ற ஒரு கவிதை, உலுக்கிப் போடும் ஒரு சிறுகதை, சலனத்தை ஏற்படுத்தும் ஒரு நாவல், திசை வழியை அடையாளப்படுத்தும் ஒரு கட்டுரை தொகுப்பு உருவாக்கி விடக் கூடும். 

உலக புத்தக தினம் நம்மைச் சூழும் இந்த நேரம், வாசிப்பு மேலும் நம் வசமாகட்டும்.  வாசிப்புத் தீ காற்றில் வேகமாகப் பரவட்டும்.

(ஏப்ரல் 23 – உலக புத்தக தினம்)

2 comments

  1. வாசிக்க தூண்டும் கட்டுரை.
    நன்றி 🙏

  2. The importance of reading, which is a rarity nowadays, has been effectively elucidated in your own inimitable style. Great!

Comment here...