அமெரிக்க வங்கிகள் திவால்….நாம் என்ன செய்யப் போகிறோம்?

சி.பி.கிருஷ்ணன்

2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு, வங்கிகள் திவால் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. 2008 செப்டம்பரில் லேமன் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்த ஆண்டில் மட்டும் 25 வங்கிகள் திவாலாகி விட்டன. 2009ல் 140 வங்கிகள் திவாலை சந்தித்தன. 2010ல் 157 வங்கிகளும், 2011ல் 92 வங்கிகளும், 2012ல் 51 வங்கிகளும், 2013ல் 24 வங்கிகளும் திவாலாகின. 2008லிருந்து 2013 வரை 500க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகி விட்டன. அதற்குப் பிறகு தான் வங்கிகள் திவால் என்பது படிப்படியாகக் குறைந்து மீண்டும் 2023ல்3 வங்கிகள் திவாலாகியிருக்கின்றன.

இதில் சில்வர்கேட் என்ற வங்கி என்பது ஒரு சிறிய வங்கி. அதன் சொத்து மதிப்பு ரூ.90000 கோடி தான். அதனால் அது பற்றி அதிகம் பேசப்படவில்லை. சிக்னேச்சர் வங்கி என்பது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட வங்கி. அதன் சொத்து மதிப்பு ரூ.9 லட்சம் கோடி. அதே போல, சிலிக்கான் வேலி வங்கி என்பது கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக்கொண்ட வங்கி. அதன் சொத்து மதிப்பு ரூ.17 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த இரண்டு வங்கிகளின் திவால் இன்று உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. கூடவே சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிரெடிட் சூயிஸ் வங்கியும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இவையெல்லாம் 2023 மார்ச் மாதம் 2 வது வாரத்திலிருந்து அடுத்தடுத்து நிக்ழ்ந்துள்ளன.

சாதாரணமாக வங்கிகள் வீழ்ச்சிக்கு பெருமளவில் கடன் திரும்பி வராதது,  வர்த்தக சூதாட்டத்தில், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவது, உயர்மட்ட ஊழல் – இப்படி பல காரணங்கள் இருக்கும். கிரெடிட் சூயிஸ் வங்கி திவாலுக்கு உயர்மட்ட ஊழல் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சிக்னேச்சர் வங்கி திவாலுக்கு காரணம் அவ்வங்கி பெருமளவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டதுதான்.

சிலிக்கான் வேலி வங்கி சந்தித்த நெருக்கடிக்கான காரணம் சற்று வித்தியாசமானது.  அவ்வங்கி கேட்டவுடன் கொடுக்க வேண்டிய வைப்பை (Demand Deposit) பெற்றுக் கொண்டு, அதில் 54% அளவிற்கு நீண்ட கால முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்ததுதான் பிரதான காரணம். ஒரே நேரத்தில் கணிசமான வைப்புதாரர்கள் தங்கள் தேவைக்கு பணம் எடுக்க முயலும்போது, அவ்வங்கியால் உடனே திருப்பி கொடுக்க முடியாத சூழல் உருவானது. அதற்கு காரணம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் அமெரிக்க அரசு கடந்த 14 மாதங்களில் பெடரல் ரிசர்வ் ரேட்டை 4.5 சதம் உயர்த்தியதுதான்.

நீண்ட கால பத்திரத்தை தேவைக்கு மீட்க முடியவில்லை. சந்தையில் விற்றால் கடுமையான நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. இது நெருக்கடியை மேலும் சிக்கலாக்கி விட்டது. இதற்கெல்லாம் மூல காரணம் அமெரிக்காவில் ஒரு கணக்குக்கு 2,50,000 டாலர் வரைதான் காப்பீட்டு பாதுகாப்பு உள்ளது. சிலிக்கான் வேலி வங்கியிலே 93% அளவிற்கும், சிக்னேச்சர் வங்கியிலே 90% அளவிற்குமான டெபாசிட்டுகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடையாது. வங்கி திவாலானால் தங்கள்  பெரும்பாலான சேமிப்பு பறிபோய்விடும் என்ற அச்சத்தில் வைப்புதாரர்கள் தங்கள் பணத்தை எடுக்க ஒரே நேரத்தில் படையெடுத்தனர். வங்கிகள் திவாலாகி விட்டன.

நமது நாட்டில் நிலைமை எவ்வாறு உள்ளது?

இந்தியாவிலும் தற்போது இப்படிப்பட்ட கொள்கை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றனவோ அவையெல்லாம் இந்தியாவிலும் இருக்கின்றன. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் ரேட் உயரும் போது இந்தியாவிலும் ரெப்போ ரேட்டை உயர்த்துகின்றனர். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த வட்டி விகித உயர்வு அவசியம் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் உண்மையில் இதன் காரணமாக பணவீக்கம் குறைவதில்லை.

இந்தியாவில் பணவீக்கம் குறைய வேண்டும் என்று சொன்னால்  அதீத லாபம் வைத்து பொருட்கள் விற்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். கேந்திரமான துறைகளான எரிசக்தி, போக்குவரத்து, மின்சாரம், சாலை, குடிநீர் விநியோகம், நிதி, ராணுவ தளவாடங்கள் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆகியவை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை அளிக்கப்பட வேண்டும். மொத்த கொள்முதலையும் அரசே மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை செங்குத்தாக குறைக்கப்படவேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலமாகத்தான் விலைவாசி குறையும். மாறாக ரெப்போ ரேட்டை உயர்த்துவதன் காரணமாக நடுத்தர மக்கள் வாங்கக் கூடிய வாகனக்கடன், வீடு கட்டும் கடன், சிறுதொழிலுக்கான கடன், பெண்கள் சுய உதவிக் குழுக் கடன், மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவற்றிற்கான மாதத்தவணை அதிகரித்து அவர்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கும்.

மேலும் நமது நாட்டில்

  • தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் தலைவிரித்தாடுகிறது.
  • 10%/15% சொத்து அடமானம் வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்கப்படுகிறது.
  • வராக்கடன் பெரும் சுமையாக உள்ளது. அதனை கராறாக வசூலிக்க தேவையான சட்டங்கள் இல்லை
  • டிமாண்ட் டெபாசிட் பெற்றுக் கொண்டு நீண்ட கால கடன் கொடுக்கப்படுகிறது.
  • நீண்டகாலக் கடன் கொடுக்கும் ஐடிபிஐ போன்ற வளர்ச்சி நிதி நிறுவனங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
  • ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டு பாதுகாப்பு உள்ளது. அதனால் மொத்த டெபாசிட் தொகையில் 50% அளவிற்கான பணத்திற்கு பாதுகாப்பில்லை.

எனவே இந்தியாவிலும் தனியார் வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் ஆபத்தில்தான் உள்ளன. அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகள் போல் செயல்படவைக்க அரசு முயற்சிக்கிறது. இந்தப் பின்னணியில் ”அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவோம்” என்று ஒன்றிய அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கி, வங்கிகள் திவாலை துரிதப்படுத்துவதில் கொண்டுவிடும். பொதுமக்கள் டெபாசிட்டுக்கு பாதுகாப்பு இருக்காது.

அரசு தன்னுடைய தனியார்மயக் கொள்கைகளைக் கைவிட வேண்டும். அரசு வங்கிகளையும், கிராம வங்கிகளையும், கூட்டுறவு வங்கிகளையும் பலப்படுத்திட வேண்டும். அனைத்து தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் பணத்திற்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும். எந்த நோக்கத்திற்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

One comment

  1. தனியார் வங்கிகளும் அரசுடமையாக்க வேண்டும்!
    சிறப்பான முன் வைப்பு !
    கூடுதலாய், நீண்ட கால முதலீட்டு தேவைக்காக இருந்த ஐடிபிஐ போன்ற வங்கிகள் வணிக வங்கிகளாய் மாற்றிய முடிவை மாற்றி, மீண்டும் வளர்ச்சி வங்கிகள் துவங்கப்பட வேண்டும்!

Comment here...