ஜேப்பி
தியாகப் போரின் வரலாறு
மே தின வரலாறு என்பது உலகப் பாட்டாளிகளின் வர்க்கப் போர் வரலாற்றின் ஒரு பகுதி. பல உயிர்களை களப்பலி கொடுத்த தியாகப் போர். நாளில் பதினைந்து-பதினேழு மணி நேரம் முதலாளித்துவ உற்பத்தி நுகத்தடியில் சிக்கி உழன்ற பாட்டாளிகளை – “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம்” என்கிற முழக்கம் உருவாக்க வைத்து உழைப்போர் கண்ட கனவை உலகத் தொழிலாளர் அனைவருக்கும் நடைமுறை ஆக்கிய வர்க்கப் புரட்சி. 1856ம் வருடம் ஆஸ்திரேலியாவில் “எட்டு-மணி நேர வேலை இயக்கம்” தொடங்கியது. இக் கோரிக்கையை வலியுறுத்தி பல வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்கத் தொழிலாளிகளும் இக் கோரிக்கையைக் கையிலெடுத்து போராட்டங்களைத் துவக்கித் தீவிரப் படுத்தினர். தொடர்ச்சியாகக் கதவடைப்பு, வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1886 மே மாதம் முதல் தேதி “எட்டு-மணி நேர வேலை” கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் நடந்தது. பின்பு நடந்த அமைதியான ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலவரம் ஏற்படுத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தி, எட்டு தொழிலாளர் தலைவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி, நால்வரை முச்சந்தியில் தூக்கில் இட்டனர்.
“எங்களைத் தூக்கில் இடுவதன் மூலம் ஒடுக்கப்பட்டு, துன்பத்தில் நாளும் உழன்று, விடுதலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் இயக்கத்தை நசுக்கி விடலாம் என்று நீங்கள் நினைத்தால், எங்களைத் தூக்கிலிடுங்கள்! … இது நீறுபூத்த நெருப்பு. …உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களுக்கு எதிரான அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும்! உழைப்பாளி மக்களின் வெற்றி சர்வ நிச்சயம்.” எட்டு-மணி நேர வேலைக் கோரிக்கைக்காகப் போராடி உயிர் நீத்த அமெரிக்க மேதினத் தியாகிகள் ஆகஸ்ட் ஸ்பைஸ், பிஷர், எங்கேல், பார்சன்ஸ் ஆகிய நால்வரும் சிகாகோ நகர ஹப்பர்ட் தெரு வீதி தூக்குமேடையில் முழங்கிய முழக்கமிது.
சர்வ தேச தினம்
1889-ஜூலை 14 இல் பாரீசில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவில் சிகாகோ மே தினத் தியாகிகளின் நினைவாக “மே தினம்” சர்வதேசத் தொழிலாளர் தினமாக, சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டு தினமாக ஏற்கப்பட்டது.
அது முதல் இந்த மே முதல் நாளில் உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், சொற்பொழிவுகள், உழைப்பாளர்களால் உவகையோடும் உற்சாகத்தோடும் நடத்தப்படுகின்றன. உலக நலன், மக்கள் நலன், உழைப்போர் நலன் காக்க மேதினக் கோரிக்கைகள் (May Day Manifestos) வைக்கப்பட்டு அவை வலியுறுத்தப் படுகின்றன. எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மேதினம் விடுமுறை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது “உழைப்பு”க்குக் கிடைத்த வெற்றி! உழைப்பவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம்!! உழைப்போர் உரிமைப் போருக்குக் கிடைத்த வெகுமதி!!!
கெட்ட போர்
உழைப்பவர் உரிமைகளைப் பறித்திட, நலக் கோரிக்கைகளுக்கு நிதி கிடைக்காமல் தடுத்திட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உலகமெங்கும்,நாடுகளுக்கு இடையிலும், உள்நாட்டிலும் பதற்றங்கள், போர்கள் திணிக்கப் படுகின்றன. ஈராக், லிபியா என பல நாடுகளில் போர் நடத்தப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்ட பொம்மை அரசுகள் மக்களை வதைக்கின்றன. பாலஸ்தீன விடுதலை எட்டாக்கனியாகவே தொடர்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடது சாரி-மக்கள் நல அரசுகள் தொடர்ந்து நேரடி-மறைமுகத் தாக்குதல்களுக்கு, கவிழ்ப்புக்கு ஆளாகின்றன. சீனாவை வளைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நான்கு நாடுகளின் சதிகாரக் கூட்டணியில் இந்தியாவும் உள்ளது என்பது கவலை அளிக்கிறது. இது இந்தோ-சீன உறவுகளைப் பாதிக்கும். அமெரிக்கா, தனது ராணுவத் தளவாட உற்பத்தி முதலாளிகளுக்காக, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய கெட்ட போர்கள் உலகப் பாட்டாளிகளின், மக்களின் நலனுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ச்சி சங்காரிகள்
ஊழலில் திளைத்த காங்கிரசை வீழ்த்தி, தூய்மையான மக்கள் நல (அச்சே தின்!) அரசு அமைப்போம் என்று பம்மாத்து செய்து பதவிக்கு வந்த நாள் முதல், மக்களைப் பிளவு படுத்த மதவெறி ஊட்டுகிறது, வரலாற்றைத் திரித்து எழுதுகிறது, கட்டாயக் கல்வி உரிமையைப் பறிக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் உலக முதலாளிகளுக்கு சாதகமாக, இந்திய விவசாயத்தைக் கபளீகரம் செய்ய அவசரமாக சட்டம் கொண்டு வந்தது. விவசாயிகளின் தொழிலாளிகளின் பிரம்மாண்ட எழுச்சியால் போராட்டத்தால் பின்வாங்கியது.
பெரு முதலாளிகளின் அடக்குமுறைக் கருவிகளின் பல்வேறு தாக்குதல்களுக்கு மத்தியில் போராடிப் பெற்ற அனைத்து தொழிலாளர் உரிமைகளையும், எட்டு-மணி நேர வேலை உத்திரவாதம் உட்பட, அதன் பயன்களையும் பறிக்க, ஒன்றிய பாஜக அரசு பல தந்திரோபாயங்களை, சதி வேலைகளை தொழிலாளி நலனுக்காக எனச் சொல்லி நாடகமாடி அரங்கேற்றி வருகிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை அநியாயமாக உயர்த்துகிறது. சிஏஏ, என்ஆர்சி என மக்கள் விரோதச் சட்டங்களை அமல்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீரைச் சிதைத்து ஜனநாயகப் படுகொலை செய்து வருகிறது. ஜனநாயகம் பாதுகாப்பதற்காக போராடும் செயல் பாட்டாளர்களை சதி செய்து சிறையில் அடைக்கிறது.
இந்தியப் பெரும் பணக்காரர்கள் மேலும் கொழுத்து உலகத் தர வரிசையில் இடம் பெற அவர்களுக்கு வரிச் சலுகை, வரித் தள்ளுபடி, கடன் தள்ளுபடி, மக்கள் சொத்துக்களைத் தாரை வார்ப்பது, பொதுத் துறையை அவர்கள் வசம் அளிப்பது என கூச்ச நாச்சமில்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது.
ஒன்றுபடுவோம் போராடுவோம்
இந்தப் பின்னணியில் தொழிலாளி-விவசாயத் தொழிலாளி- விவசாயி ஒற்றுமைக் கூட்டு இயக்கங்கள் வலுப்பெற்று வருகின்றன என்பது ஆறுதல் அளிக்கிறது. களப்பலி பல கொடுத்து, ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற விவசாயி- தொழிலாளி-ஜனநாயக உரிமைகளைக் காத்து நிர்ப்போம். ஒன்றுபட்ட போராட்டமே இதற்கான தீர்வு. மேதின தியாகப் போராட்ட வரலாறு நமக்கு வழங்கும் பாடம் இது தான்.
மே தினத்தில் மிக அருமையாக கட்டுரை
பொருளாதார நலனுக்கான தொழிலாளர்கள் போராட்டம்,
இதற்கான கொள்கைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை கையிலெடுக்கும் அரசியல் போராட்டமாக மாறும் !