சி.பி.கிருஷ்ணன்
2023 ஏப்ரல் 21 ஆம் தேதி , தமிழக அரசு தொழிற்சாலை சட்டத்தில் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் தொழிலாளிகளை சுரண்டுவதற்கு வழி வகை செய்கிறது. இது தொழிலாளர்கள் மீதான கொடூர தாக்குதலாகும்.
16 மணி நேரம் கூட வேலை வாங்கலாம்
. தமிழக அரசால் தொழிற்சாலைகள் சட்டத்தில் புதிதாக நுழைக்கப்பட்டுள்ள பிரிவு 65 A அரசுக்கு வானளாவிய அதிகாரத்தை கொடுக்கிறது. இது ஏதோ 12 மணி நேர வேலை வாங்குவது போன்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தத் திருத்தத்தின்படி 12 மணி நேரமல்ல, 15, 16 மணி நேரம் கூட வேலை வாங்கலாம். பிரிவு 65 A வின்படி விலக்களிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு இது வரை அதிக பட்ச வார வேலை நேரம் 48 மணி நேரமாக வரையறுக்கும் பிரிவு 51, வார விடுமுறை பற்றியுள்ள பிரிவு 52, தினசரி அதிகபட்ச வேலை நேரத்தை 9 மணி நேரமாக வரையறுக்கும் பிரிவு 54, அதிகபட்சம் 5 மணி நேரத்திற்கு பிறகு ½ மணி நேரம் ஓய்வை கட்டாயமாக்கும் பிரிவு 55, தொழிலாளியின் ஒட்டுமொத்த வேலை நேரத்தை வரையறுக்கும் பிரிவு 56, ஓவர்டைம் சம்பளம் பற்றி கூறும் பிரிவு 59 ஆகியவையெல்லாம் செல்லாததாகிவிடும். முதலாளி நினைத்தால் தொழிலாளியை எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் எந்தவிதமான ஓவர்டைம் சம்பளமும் கொடுக்காமல் வேலை வாங்க முடியும்.
காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முயலும் திமுக அரசு
இந்த சட்டத்திருத்தம் 150 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையின் மீது நேரடித் தாக்குதலாகும். ”8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்பதுதான் 150 ஆண்டுகளுக்கு முந்தைய மேதின போராட்டத்தின் வெற்றி. இந்தியாவில் முதன் முதலில் 1923 ஆம் ஆண்டு தமிழகத்தில்தான் மே தினம் தோழர் சிங்காரவேலர் அவர்களின் முன்முயற்சியில் கொண்டாடப்பட்டது. அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் இத்தகைய சட்டத்திருத்தம் காலச்சக்கரத்தை 150 ஆண்டு காலம் பின்னோக்கி தள்ளுவதாகும்.
யார் பக்கம் நிற்கிறது அரசு?
சட்டத் திருத்ததிற்கான நோக்கக் காரண விளக்கவுரையில் அரசு தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லி விட்டது, “முதலாளிகள் கேட்கிறார்கள். எனவே இந்தச் சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறோம்” என்று. அப்படியானால் இந்த அரசுக்கு தொழிலாளர்கள் ஒரு பொருட்டே இல்லையா? ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த சட்டத் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியுவும் தங்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்தன. அதே போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏஐடியுசியும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் இதை எதிர்த்துள்ளன. ஏப்ரல் 21ஆம் தேதி சட்டமன்றத்தில் இந்த மசோதா விவாதிக்கப்பட்டபோது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வாக்கெடுப்பின் போது சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வெளி நடப்பு செய்தன.இவற்றையெல்லாம் மீறி திமுக அரசு அந்த மசோதாவை தங்களுக்கிருக்கும் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றியது. அப்படியானால் திமுக அரசு யார் பக்கம் நிற்கிறது என்று மக்கள் முன் கேள்வி எழுகின்றது.
பாஜக வழியில் செல்கிறதா?
ஒன்றிய பாஜக அரசு அப்பட்டமாக தொழிலாளர்கள்- விவசாயிகள் விரோதமாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. அதற்கு மாற்று என்று சொல்லும் திமுக அரசு தொழிற்சாலை சட்டத்தில் தற்போது கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் ”பாஜக வழியிலேயே திமுக செல்கிறதா?” என்ற கேள்வியை எழுப்புகிறது.
தற்போது பலத்த எதிர்ப்பிற்கு பிறகு 2023 ஏப்ரல் 24ஆம் தேதி சட்ட முன் வடிவின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொழிற்சங்கஙகளுக்கும், தொழிலாளிகளின் உரிமைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த முதல் வெற்றி.
ஆனால் இந்த சட்டத்திருத்த மசோதா தொழிலாளர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. மேல் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் அரசின் அறிவிப்பிலேயே ”இந்த மசோதா இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக கொண்டு வரப்பட்டது” என்று கூறியுள்ளது அரசு. அப்படியானால் அவர்கள் தங்கள் அடிப்படை கொள்கை நிலையிலிருந்து மாறவில்லை என்றே தெரிகிறது. தற்காலிகமாக சமரசம் செய்யும் நோக்கிலேயே மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளி வர்க்கம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதைப் போல் இந்த சட்டத்திருத்தம் முற்றிலுமாக திரும்பப்பெறும் வரை எதிர்ப்பு இயக்கங்கள் தொடர வேண்டும்.
திராவிட மாடலில்……
திராவிட தொழிலாளிகள் பக்கமா ?
திராவிட முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள் பக்கமா ?
என்ற கேள்விக்கு……
அரசு…. தான் முதலாளிகள் பக்கம் தான் என்று வெளிப்படுத்தியுள்ளது !
தொழிலாளி வர்க்க ஒற்றுமையை குலைக்கும் மதவாதத்தை எதிர்க்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகளை
நாம் ஆதரிக்கும் பொழுதே…..
தொழிலாள்கள் மேல் சுரண்டலை தீவிரப்படுத்த, சட்டக்கதவை திறக்க அரசு முயற்சித்தால்……
தமிழ்நாட்டின் திராவிட தொழிலாளிகள் உள்பட்ட அனைத்து தொழிலாள வர்க்கத்தின் போராட்ட அலையை, அரசு கட்டாயம் சந்திக்கும் !
தமிழ் நாடு அரசு இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்!