வி.ஹரி கிருஷ்ணன்
நடைமுறையில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதியதாக பிரிவு 65 ஏ என்கிற சட்டப்பிரிவை சேர்பதற்கான மசோதா தமிழக அரசால் 12 .4. 2023 அன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களை எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். அதிக நேர ஊதியம் எதுவும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை .என்கிற நிலை உருவாகி தமிழக தொழிலாளர்களின் நிலை ஏறக்குறைய 150 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கும்.
இந்தியாவில் பாஜக அரசு அல்லாத வேறு எந்த மாநிலமும் அமல்படுத்த துணியாத தொழிலாளர் விரோத சட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்த துணிந்தது .
இந்த சட்டத்தை திருத்துவது தொடர்பாக அரசு தொழிற்சங்கங்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை. மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியத்தையும் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த மசோதா 21/4/2023 அன்று விவாதிக்கப்பட்டபோது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐஎம் ,சிபிஐ கட்சிகள் வெளிநடப்பு செய்தன காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, பாஜக ,மனிதநேய மக்கள் கட்சி ,தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவையும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. முதலாளிகள் கேட்டார்கள். முதலீடுகளை ஈர்க்கவும் வேலை வாய்ப்பை பெருக்கவும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது
23 4 2023 அன்று சென்னையில் கூடிய எஐடியுசி , சிஐடியு , எச் எம் எஸ் ,,, ஐ என் டி யூ சி , ஏ ஐ யூ டி யூ சி, ஏ ஐ சி டி யு ,எம் எல் எப், எல் எல் எப், உழைக்கும் மக்கள் மாமன்றம் ஆகிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 26 .4.2023 முதல் 09.05.2023 வரை பல்வேறு போராட்டங்களை அறிவித்து,12.05.2023 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தமும் மறியலும் செய்ய இருப்பதாகவும் அறிவித்தன.
இதன் எதிரொலியாக 24.4.2023 அன்று மாநில அரசின் அமைச்சர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கக் கூடிய ஆலோசனைக் கூட்டம் அரசினால் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்களால் அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டது. அன்று மாலையே அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சட்ட முன் வடிவை திரும்ப பெறக்கோரினர். அன்றே தமிழக முதல்வர் சட்ட திருத்தத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் .
பிறகு , 2023 மே 1 தொழிலாளர் தினத்தன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மேதின நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு தமிழக முதல்வர் ஆற்றிய உரையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வருட கணக்கில் போராடியும் கண்டுகொள்ளாத பாஜக அரசு, எஸ்மா- டெஸ்மா போன்ற சட்டங்களை கொண்டு வந்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த அதிமுக அரசை போல் அல்ல திமுக அரசு . விட்டுக் கொடுப்பதை நாங்கள் அவமானமாக கருதியது இல்லை. பெருமையாக கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் என்று பேசிய முதல்வர் 65 A சட்டமுன் வடிவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
ஆளும் கட்சியாக இருந்தும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தும் ,அந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டு சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்ட போதிலும் தொழிலாளர்களின் ஒன்று பட்ட மிகத் துரிதமான செயல்பட்டால் சட்டமுன் வடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழக தொழிலாளர்களின் வர்க்கத்திற்கே கிடைத்த மிகப்பெரும் வெற்றி ஆகும்.
Yes