பாட்டாளி வர்க்கத்தின் பகலவன்-கார்ல் மார்க்ஸ்

G.சிவசங்கர்

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர…ஆனால் அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது”…

கார்ல் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையின் நிறைவுப் பகுதி வரிகள் இவை. அதுவரை இருந்த தத்துவ ஞானிகள் அனைவரும் மொழி, இனம், தேசியம் என்று ஏதோ ஒரு வரையறைக்குள் இருந்து பேசி, எழுதி வந்த நிலையில் முதன் முறையாக இவ்வுலகையே எல்லையாக வகுத்து உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றிணையக் கூறினார் மார்க்ஸ். அதேநேரம் அவர் வெறும் கனவு காண்பவராக, ஆசைப்படுபவராக மட்டும் இல்லை.

 உலகத் தொழிலாளர்கள் இப் பொன்னுலகை அடையும் வழிமுறைகளையும் சமூக அறிவியல் சார்ந்து விளக்கியுள்ளார் . உலகம் இன்று அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படை உழைப்பு மட்டுமே. அவ்வாறு திரட்டப்பட்ட உழைப்பே மூலதனம் ஆனது. அம்மூலதனமே இன்று உலகை ஆள்கிறது. எனவே மூலதனத்தை உருவாக்கிய உழைக்கும் வர்க்கத்திற்கே அவற்றை ஆளும் உரிமையும் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறினார் மார்க்ஸ்.

மனிதன் தான் உயிர்வாழும் தேவை பொருட்டு கூட்டாக உழைப்பில் ஈடுபடுகிறான். அவ்வுழைப்பினால் கிடைத்த பயன்களை அனைவரும் சமமாகப் பகிரும்வரை பேதங்கள் இல்லை. ஆனால் பகிர்ந்தது போக, மிஞ்சியிருப்பது உபரியாகிறது. அந்த உபரியைக் கைப்பற்ற போட்டி உருவாகி, உபரிகள் சேர்ந்து மூலதனம் உருவாகி,  வர்க்கங்கள் பிறக்கின்றன என்று வரலாற்றின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் மார்க்ஸ், மூலதனம் குறித்து இவ்வாறு கூறுகின்றார்:

“மூலதனம் என்பது கடந்த கால உழைப்பின் ஒரு இறுகிய வடிவம். அது ஒரு இரத்தக் காட்டேரியைப் போல நிகழ்கால உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது. அது எவ்வளவு அதிகமாக உழைப்பை உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக செழித்து வாழ்கிறது.”

இவ்வாறு உருவாகும் அம்மூலதனத்தை வலிமையான ஒரு சிறு பிரிவினர் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து உழைப்பதில் இருந்து விடுபடுகின்றனர். உழைப்பிற்கு அத்தியாவசியமாக விளங்குகின்ற உற்பத்திச் சக்திகளை (நிலம், உழைப்புக் கருவிகள்) அவர்கள் தங்கள் வலிமையின் உதவியோடு அபகரித்துக் கொள்கின்றனர். இவ்வாறு உற்பத்திச் சக்திகள் அனைத்தையும் உடைமை கொண்ட ஒரு வர்க்கமும், உழைக்கும்  சக்தியை மட்டுமே கொண்ட இன்னொரு வர்க்கமும் உருவாகின்றன.  இவ்விரண்டிற்குமான முரண்பாடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியே மனித இனம் ஒரு சமூக அமைப்பில் இருந்து இன்னோரு சமூக அமைப்பிற்கு மாறுவதற்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு அடிமை உடமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் என்று ஒவ்வொரு சமூகமாக உருமாறி இன்று முதலாளித்துவ தனியுடமை சமூக அமைப்பு நிலவி வருகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சியில் அடுத்தகட்டமாக சோசலிச பொதுவுடமை சமூக அமைப்பையும், அதனைத் தொடர்ந்து வர்கமற்ற கம்யூனிச சமூக அமைப்பையும் நோக்கி இந்த சமூகம் பயணிக்கும் என்று சமூக அறிவியல் ஆய்வுமுறையைக் கொண்டு நிறுவினார் மார்க்ஸ்.

“இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்ற கோட்பாட்டையே மார்க்சியத்தின் அடிப்படையாக வகுத்தார் மார்க்ஸ். இயக்கம் இன்றி இம்மண்ணில் எதுவும் இல்லை. நெருப்புக் கோளமாக இருந்து, பிறகு குளிர்ந்து, நீரில் முதல் ஒரு செல் உயிரினம் தோன்றி, அது தொடர்ந்து இயங்கி மனிதன் உருவானது வரை இப்புவியில் ஏற்பட்ட அனைத்து மாற்றங்களுக்கும் அடிப்படை இந்த இயக்கம் மட்டுமே என்று அறிவியலின் துணைக் கொண்டு நிறுவினார் மார்க்ஸ். அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த சார்லஸ் டார்வினின் “பரிணாமவியல் கோட்பாடு” இந்த கூற்றிற்கு மேலும் வலு சேர்த்தது. மேலும் கருத்தில் இருந்து பொருள் உருவாகவில்லை. மாறாக பொருளில் இருந்தே அனைத்து கருத்துக்களும் தோன்றின என்று, அவர் நிறுவியதே பொருள் முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

“ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர கம்யூனிஸ்ட்களுக்கு என்று தனிப்பிட்ட நலன்கள் ஏதும் இல்லை” என்று தனது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய மார்க்ஸ்,  தமது சொந்த வாழ்விலும் தனிப்பட்ட நலன்கள் என்று எதனைப் பற்றியும் யோசிக்காமல் தன் வாழ்நாள் முழுவதையும் இவ்வுலகின் உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே அற்பணித்தார். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த மார்க்சிற்கு காலம் இரண்டு அற்புத உறவுகளைக் கொடுத்தது. ஒருவர் அவரது காதலியுமான மனைவியும் ஜென்னி. மற்றொருவர் அவரது உயிர்த் தோழனும், சக மார்க்சிய அறிஞருமான பிரட்ரிக் ஏங்கல்ஸ். இந்த இருவரும் இல்லாது போயிருந்தால் வறுமை அவர் வாழ்வை கொண்டு போயிருக்கும்.

ஒருநாள் இரவு மார்க்சின் குழந்தை பசியினால் வீறிட்டு அழுதது. ஜென்னி தன் குழந்தைக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில், குழந்தை பசியால் இறந்து போகிறது. இறந்த அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கணவனை எந்தவொரு பெண்ணும் ஏற்க மாட்டாள். ஜென்னியைத் தவிர. செல்வ  குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜென்னி, ஒரு எளிய வழக்கறிஞருக்கு மகனாகப் பிறந்து வளர்ந்த, கார்ல் மார்க்ஸைக் காதலித்துக் கரம்படித்தார். அந்த நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி வரை மார்க்ஸோடு சேர்த்து வறுமையோடும் வாழ்க்கையை நடத்தினார் அந்த மகத்தான காதலி. தன் காதல் மனைவி ஜென்னி குறித்து மார்க்ஸ் இவ்வாறு கூறுவார்:

“அன்பு கொண்ட ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது, ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது. ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நானும் ஒரு சாமானிய மனிதனைப் போன்றே வாழ்ந்து, மறைந்து போயிருப்பேன்.”

பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்த மார்க்ஸ் ஆளும் அரசுகளுக்கு எதிரான தன்னுடைய கூர்மையான எழுத்துக்களால் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என்று தொடர்ந்து இடம்பெயர்ந்து தன் வாழ்நாளில் இறுதிப் பகுதியில் தன் நண்பன் ஏங்கல்ஸின் யோசனையில் லண்டனில் குடியேறினார். ஒருநாளின் பெரும்பாலான நேரங்களை லண்டன் நகர நூலகத்தில் செலவிட்டு முதலாளித்துவத்தின் இயல்புகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடே “மூலதனம்” நூல். முதலாளித்துவத்தின் இயக்க விதிகளையும், அதன் இயல்புகளையும், அதன் சுரண்டல் தன்மையையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் மூலதனம்.  பனிரெண்டு மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, முதல் ஆறு மணி நேரத்திற்கான கூலியை மட்டுமே தன் முதலாளியிடம் பெறுகிறார். மீதம் இருக்கும் ஆறு மணிநேரமும் அவர் தன் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கிறார் என்பதை ஆதாரங்களோடு விளக்கினார் மார்க்ஸ்.

 மேலும் வேலை நாள் பற்றி கூறுகையில்,

“வேலை நாளுக்கு சட்டப்பூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்கம்  முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டப்பூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்”.

இவ்வாறு உலகத் தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கும் 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல உரிமைகளுக்கு காரணமாக விளங்கும் ரஷ்யப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும் அதனைத் தொடர்ந்து சீனா, கியூபா, வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்ட சோசலிச புரட்சிகளுக்கு அச்சாணியாக விளங்கியதும் மார்க்சின் தத்துவங்களே.

“இதுவரை பல தத்துவ ஞானிகள் இந்த உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே அளித்துள்ளனர். ஆனால் இப்போது நம்முடைய பணி உலகை மாற்றியமைப்பதே” என்று கூறி உலக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாமேதை பேராசான் கார்ல் மார்க்ஸ். அவர் இவ்வுலகை விட்டு மறைந்து 140 ஆண்டுகள் ஆன பிறகும், இன்றும் தினந்தோறும் அவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கிறது இவ்வுலகு. ஆம் மார்க்ஸ் என்பது வெறும் பெயர் அல்ல. அது என்றும், எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும் செந்தனல். அது பாட்டாளிகளின் வாழ்வை துளிர்த்து ஒளிரச் செய்யும். உலகில் சோசலிச சமூகத்தைப் படைத்தே தீரும்……

One comment

  1. மார்க்சின் வாழ்க்கை வரலாறு, தத்துவத்திற்கு அவரளித்த பங்களிப்பு மற்றும் எதிர்கால திசைவழி என அனைத்தையும் முன் வைத்த உணர்ச்சிபூர்வமான கட்டுரை.
    நன்றி தோழர் 💐

Comment here...