ஜெயசிங் – நெல்லை
தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் பதினோராவது நூலாக வெளிவந்துள்ளது ” மரத்துப் போன சொற்கள் ” எனும் சிறுகதை தொகுப்பு . நாறும்பூநாதன் அவர்கள் ‘ கனவில் உதிர்ந்த பூ ‘ , ‘ ஜமீலாவை எனக்கு அறிமுகப் படுத்தியவன் ‘ ‘ வேணுவன மனிதர்கள் ‘ உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கதை கட்டுரைகளை எழுதியுள்ளார் . இவரது சில நூல்கள் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையில் சில தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகத்திலும் பாடமாக இடம் பெற்றுள்மை குறிப்பிடத் தக்கதாகும் . ”திருநெல்வேலி -நீர் – நிலம் – மனிதர்கள் ‘ என்ற இவரது நூல் தென்னிந்தியாவின் OXFORD என வர்ணிக்கப்படும் திருநெல்வேலியின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பதிவாகும் .
நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களை அருகில் இருந்து கண்டும் பார்த்தும் இரசித்தும் எழுதப் பட்ட ஒரு உயிரோவியமாக ‘ மரத்துப் போன சொற்கள் ‘ சிறு கதை தொகுப்பு அமைந்துள்ளது . சந்தியா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது . பிரபல சிறுவர் சிறுகதை எழுத்தாளர் உதயசங்கர் குறிப்பிட்டதைப் போன்று அனைத்து கதைகளும் மனித உறவுகளை உயிரோட்டத்துடன் பேசுகின்றன . கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அன்றாடம் நாம் சந்திக்கின்ற நம்மை கடந்து சென்ற நம்மோடு உறவாடிய முகங்களாக தெரிகின்றன .
மத்திய தர வர்க்கத்தை சுற்றியே கதைகள் பயணிக்கின்றன . பெரும்பாலான கதைகளை வாசிக்கும் போது எழுத்தாளர் தானும் ஒரு கதாபாத்திரமாக மாறி அனுபவித்து எழுதியிருப்பதைக் காணலாம் . அதன் காரணமாக நாமும் அக்கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிப்பதைப் போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது . சமூகத்தின் மீது அதிக அக்கறையும் இடது சாரி கொள்கைகள் மீது ஈடுபாடும் கொண்டிருப்பதன் வெளிப்பாடாக நூலாசிரியர் சமூக உணர்வுடன் கதைகளை வடிவமைத்துள்ளார் . சில கதைகளை வாசிக்கும் போது அக்கதைகளில் வரும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை நேரில் பார்க்க மாட்டோமா என்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது . நூலாசிரியர் வாழ்ந்த வாழ்கின்ற நெல்லை , பாளையங்கோட்டை சுற்றாடலில் கதைகளை நகர்த்திச் செல்வது நூலின் சிறப்பு அம்சமாகும் . நெல்லை தமிழ் உரையாடலுடன் , பேச்சு மொழியும் ஆங்காங்கே பரவி கதையோட்டத்தை நூலாசிரியர் சுவாரசியமாக கொண்டு செல்கிறார் .
நூலின் முதல் சிறுகதையான ‘ கையெழுத்து ‘ முத்தாய்ப்பாக அமைந்துள்ளது . முத்து முத்தாக எழுதும் ஆங்கில மொழி ஆசிரியர் சங்கரநாராயணன் ஓய்வுபெற்ற பின்னர் ஓய்வூதியம் பெற வங்கிக்கு செல்கிறார் . வயது மூப்பு காரணமாக அவரால் பணம் பெறும் படிவத்தில் சரியாக கையெழுத்து இட முடியவில்லை . இதுதான் கதை. வங்கியில் அவருக்கும் அவரது மாணவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் , தனது கையெழுத்தை சரியாக போட இயலாது போன நிலையை நினைத்து அவர் படும் வேதனை , கையெழுத்துக்குப்பதிலாக கை ரேகை பதிய வேண்டிய நிர்ப்பந்தத்தை நினைத்து ஆசிரியரான அவர் மனம் கொள்ளும் துயரம் என அனைத்தையும் நூலாசிரியர் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வடிவமைத்திருக்கிறார் . அந்த காலகட்டத்தில் ஆங்கில ஆசிரியர் எனும் போது ஒரு கர்வம் இருக்கும் . அதற்கான அனைத்து தகுதியும் உடைய சங்கரநாராயணன் ஆசிரியரின் மன வேதனை நம் நெஞ்சைத் தொடுவதாக இருக்கிறது . அவரின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நூலாசிரியர் வெற்றியடைந்தவராகவே தெரிகிறார் .
‘ கோமாவின் கணவன் ‘ என்ற இரண்டாவது கதை அகால மரணம் அடைந்த கணவனின் இறப்பை தைரியமாக எதிர்கொண்ட ‘ கோமா ‘ என்ற பெண்மணியைப் பற்றியதாகும் . கணவன் இறந்த பிறகு உலகமே இடிந்து விழுந்ததாக எண்ணி ஒப்பாரி வைக்கும் பெண்ணாக இல்லாமல் யதார்த்தமான நிலைமைகளை புரிந்து செயல்பட வேண்டியதை உணர்த்துவதாக கதை செல்கிறது . அடுத்து வரும் ‘ மெல்லப் பசித்து இனி வாழும் ‘ கதை வறுமையில் வாடும் ஒரு கவிஞனைப் பற்றியதாகும் . முழு நேர இலக்கிய வாதிகள் , கலைஞர்கள் அனைவருமே வசதி படைத்தவர்கள் அல்ல என்பதை நூலாசிரியர் இக்கதை ஊடாக கோடிட்டு காட்டுகிறார் . கலைஞன் ஒருவனின் பல்வேறுபட்ட பரிதவிப்பு களை நூலாசிரியர் நயம் பட இக்கதை ஊடாக கூறி இருப்பதைக் காணலாம் .
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய ” கருணாமிர்த சாகரம் ” எனும் நூலைத் தேடி புத்தக ஆர்வலரான சிவராமன் வீட்டிற்கு நூலாசிரியர் சென்று புத்தகம் பற்றி கேட்காமலேயே வெறுங் கையுடன் திரும்பி வந்த நிகழ்வை ‘ மூச்சுக் காற்று ‘ என்ற சிறு கதை கூறுகிறது . புத்தகப் பிரியரான சிவராமன் பற்றி கதாசிரியர் சிலாகித்து கூறுவதை வாசிக்கும் போது தொழிற்சங்க தோழரும் ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி குவித்த மறைந்த தோழர் பால்வண்ணத்தின் நினைவுகள் நெஞ்சைத் தொட்டுச் செல்கின்றன . சிவராமன் என்பவர் எந்தளவுக்கு புத்தகங்களை நேசித்தார் என்பதை கூறும் போது அவர் ஒரு புத்தக பிசாசு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார் . நூலாசிரியர் தேடி வந்த ” கருணாமிர்த சாகரத்தை ” என்ற அரிய நூல் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்கள் மத்தியில் இருந்தும் எடுக்க மனமின்றி திரும்பி விட்டதாக நூலாசிரியர் கதையை முடிக்கும் போது நாமும் மௌனியாகி விடுகிறோம் .
நூலில் ஐந்தாவதாக இடம் பெற்றுள்ள ” மொகைதீன் வாத்தியாரும் எலக்ட்ரிக் குக்கரும் ” என்ற சிறுகதை மிகவும் அருமையானதாகும் . மொகைதீன் என்ற வாத்தியார் எலக்ட்ரிக் குக்கர் ஒன்றை வாங்க ஆசைப்படுகிறார் . தன்னிடம் போதிய பணம் இல்லாத நிலையில் சலுகை விலையில் மிலிட்டரி விற்பனை நிலையத்தில் இராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் என அறிகிறார் . அதனை இராணுவத்தில் பணியாற்றிய தனது முன்னாள் மாணவன் வாயிலாக வாங்கிவிடலாம் என்ற ஆசையுடன் அம்மாணவனின் வீட்டை தேடிப் பிடித்து மாணவனிடம் தயங்கி தயங்கி கூறுவதே இந்த கதை . மாணவனின் வீட்டை தேடிப் போகும் விதம் , மாணவனிடம் தனது தேவையை கூற அவர் படும் அவஸ்தை , சங்கோஜம் என்பவற்றை நூலாசிரியர் மிக தத்ரூபமாக எழுதியிருப்பதை வாசிக்கும் போது அந்த ஏழை மொகைதீன் வாத்தியாரை நாமும் தேடிப் போய் உதவ வேண்டும் போல் தோன்றுகிறது . இந்த உணர்வே கதாசிரியனுக்கு கிடைக்கும் மிகப் பெரும் அங்கீகாரமாகும் .
இதன் பின்னர் வரும் மற்ற ஐந்து கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக எழுதப் பட்டுள்ளன . இந்நூலின் கதைகளில் காணப்படும் சிறப்பு அம்சம் அனைத்து கதாபாத்திரங்களுடன் நாமும் எதோ ஒரு வகையில் இணைந்து செல்கின்ற உணர்வாகும் . மிக எளிய நடையில் பேச்சு வழக்கில் கதை அனைத்தும் வடிவம் பெற்றுள்ளது . பண்டைய பேச்சு மொழி , நாம் இன்று பேசத் தயங்கும் சொற்பதங்கள் ஆகியவற்றை நூலாசிரியர் மிகவும் நேர்த்தியாக கையாண்டிருப்பதைக் காணலாம். நூலாசிரியர் இந்நூலில் கதைமட்டும் கூறவில்லை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல வரலாற்று உண்மைகளையும் அவர் பாணியில் போகிற போக்கில் கூறி இருப்பதைக் காணலாம் . மாஞ்சோலைப் போராட்டம் , தாமிரபரணி படுகொலை , சொக்கலால் பீடி , தானா மூனா கட்டிடம் , ராஜஸ்தான் மெஸ் , காளி மார்க் ‘ என நாம் மறந்து விட்ட பல நினைவுகளையும் நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பதும் சிறப்பு அம்சமாகும் .
பெரும்பாலான எழுத்தாளர்கள் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப் படுத்த முயல்வர் . இந்நிலையில் இந்நூலாசிரியரான நாறும்பூநாதன் அவர்கள் கடந்த கால , சம கால எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களையும் தனது சிறு கதைகள் ஊடாக மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள பெருந்தன்மையையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் . அதே போன்று ” மோக முள் , கம்பா நதி , பொன்னியின் செல்வன் , தரையில் இயங்கும் விமானங்கள் , கலைக்க முடியாத ஒப்பனைகள் ” என பல்வேறு நூல்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் .
இவ்வாண்டு ஆரம்பத்தில் வெளிவந்த பல நூல்களில் . நாறும்பூநாதன் அவர்களின் ” மரத்துப் போன சொற்கள் ” எனும் சிறுகதை தொகுப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது . மண்வாசனை கலந்த இந்நூலை அனைவரும் வாசித்து மகிழ வேண்டும் .