பொன்னுலகம் படைப்போம்

G.ராம்குமார்

மன்னர்கள் வாழ்வும்

மண்ணுக்கான போருமே

வரலாறாய் இருந்தது.

ஓயாத உழைப்பும் 

காயாத உதிரமும்

மறைக்கப்பட்டே வந்தது.

பண்டம் மாற்றிய பெருங்கூட்டம் பின்

ஆண்டான் அடிமை தடுமாற்றம்

தொழிற்புரட்சி முன்னேற்றம்.

காலங்கள் தானே மாறின – மக்கள்

கணக்கோ கடனாய் ஏறின.

“” காரல் ஹூன்ரிச் மார்க்ஸ் “””

ஜெர்மன் ஈன்ற மீகாமன்.

வரலாறு படைக்கும் முறையில்

புதிய பார்வை பதித்தான்

தொழிலாளர் வாழ்வை நேராக்கினான்.

கருத்தை மறுத்து

பொருளை முதலாக்கினான்.

தொழிலாளர் உரிமைக்கு

அறிவை மூலதனமாக்கினான்.

மதமொரு அபினென 

உடைத்து போட்டான்.

ஹெகலின் போதாமையை

உலகறிவித்தான்.

இடதின் இதயமாய்

ஜென்னி வந்தாள்.

காதல் இணைக்கு 

இலக்கணம் ஆனாள்.

நாடுவிட்டு நாடு 

கடத்தப்பட்ட போதும்

நாவிற்கு உணவு

மறுக்கப்பட்டபோதும்

பாலின்றி கைக்குழந்தை

இறக்க நேர்ந்தபோதும்

சவப்பெட்டிக்கும் வழியற்று

குழந்தை புதைக்கப்பட்டபோதும்

ஜென்னி ஒருபோதும் மார்க்ஸை

கைவிட்டதேயில்லை.

அவதார அரிதார 

காதலர்கள் போலின்றி

மக்கள் முன்னேற்றத்திற்காகவே வாழ்ந்த

மானுட காதலர்கள் ஜென்னி மார்க்ஸ்.

மார்க்ஸிற்க்கு மறுபெயர்

ஒன்று உண்டு.

கேட்டால் சொல்லுங்கள்

எங்கெல்ஸ் என்று.

உலகத்தொழிலாளர்களுக்காகவே 

வாழ்ந்தார் மார்கஸ்.

மார்க்ஸ்க்காகவே வாழ்ந்தார் எங்கெல்ஸ்.

யாரிந்த மார்க்ஸ் நீகேளு…?

மார்க்ஸ்…மார்க்ஸ்…மார்க்ஸ்…!

பெயரை கேட்டாலே….

கோடிக்கால் பூதமென

நடுநடுங்குகிறது முதலாளியம்.

பெயரை கேட்டாலே…

உயிரின் நரம்பில்

உற்சாகம் புடைக்க

உரிமைக்குரல் எழுப்புகிறது தொழிலாளியம்.

” முரண்களுக்கிடையே வளர்ச்சி “

கண்டடைந்த சமூகவிஞ்ஞானி அவன்.

உலகத்தொழிலாளி வாழ

இன்னல் கோடிபல சந்தித்தவன்.

205 ஆண்டுகளுக்கு முன்னரே

உன்னையும் என்னையும் பற்றி சிந்தித்தவன்.

அடிப்படை சம்பளம் முதல்

அடுக்கான உரிமைகள் வரை

அத்தனையும் வாங்கிதந்தவன் அவன்தானே.

நமக்கு கிடைத்ததை 

நாலு பேருக்கு கிடைக்க செய்யவேண்டியது 

நம் கடமைதானே…?

பகல் கனவல்ல பொதுவுடமை.

உலகத்தொழிலாளர்களே 

ஒன்றுசேர்வோம்.

இழக்க ஏதுமில்லை.

பெறுவதற்கு பொன்னுலகு.

காரல் மார்க்ஸை வாசிப்போம்.

விடுதலை காற்றை சுவாசிப்போம்.

2 comments

  1. கவிதை சிறப்பு 💪💐

Comment here...