”கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே ”

தங்க மாரியப்பன்

தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனின் இரண்டாம் மாநில மாநாடு கடந்த  ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மதுரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தின் திருவிழாவாக, ஓய்வுபெற்ற ஊழியர்கள், வங்கியின் துனைநிலை, தற்காலிக ஊழியர்கள், வணிக முகவர்கள் என அனைவருக்குமான மாநாடாக நடந்தேறியது.  1200 தோழர்களுக்கும் மேல் பங்கேற்ற இந்த மாநாட்டில் பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தினை மிகத் தீவிரமாக  செயல்படுத்திவரும் ஒன்றிய அரசின் கொள்கையை கண்டித்தும் அதே நேரத்தில் ” கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே” என்ற ஒற்றை முழக்கத்துடனும்  மிகச்சிறப்பாக நடைபெற்றது.  

பொது மாநாடு:

 பொது மாநாட்டின் முதல் நிகழ்வாக தோழர்களின் பெரும் கோஷங்களுடன் மாநாட்டின் கொடி AIRRBEAவின் அகில இந்திய தலைவர் தோழர் ராஜீவன் அவர்களால் ஏற்றப்பட்டது. 

இம்மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக மதுரையின் துணை மேயர் நாகராஜன்  அவர்கள் முன்னிலை வகித்தார். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன், சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா, AIRRBEA -வின் அகில இந்திய தலைவர்கள் ராஜீவன்,. வெங்கடேஸ்வர ரெட்டி, பிரசாந்தோ சௌத்திரி,  அகில இந்திய இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹரிராவ்,  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாநில செயலாளர். பிரேமலதா, புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தமிழ் செல்வன் அவர்களோடு AIRRBEA TN & Puduvai  மாநிலச் பொதுச் செயலாளர் மாதவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கிராம வங்கி  ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பரிதிராஜா மாநாட்டின் தலைமை உரையாற்றினார். தமிழ்நாடு கிராம வங்கி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி மாநாட்டு நிகழ்வுகளை தொகுத்துவழங்கினார். 

வங்கித்துறையின் இன்றைய நிலைமைகளையும் கிராம வங்கிகளின் மீதான அரசாங்கங்களின் பார்வையும், கிராம வங்கிகளின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன்களை முன்னிறுத்தி NRBI அமைப்பதற்கான முயற்சிகளையும், தொழிற்சங்கமாக நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், எதிர்வினைகளையும் இந்திய அரசியல் சூழலின் நடப்பு நிகழ்வுகளையும், தொகுத்து  தலைவர்கள் தங்கள் சிறப்புரைகளை வழங்கினர். 

போராட்டங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சங்கத்தின் சட்டரீதியான போராட்டங்களில் தோளோடு தோள் நிற்கும் கீதா அவர்கள் பெண்களின் குடும்ப சூழல்களில் உள்ள சிக்கல்களையும் பல்வேறு தடைகளை கடந்து இன்று வங்கிகளில் பணிபுரியும் பெண்களுக்கான பணிச்சூழல் குறித்தும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் போராட்டங்களால் மட்டுமே தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளது என்பதனையும்  தெளிவு படுத்தி சிறப்பாக உரையாற்றினார். 

 மாதவராஜ் அவர்கள் பேசும்போது நமது சங்கங்களின் கடந்தகால போராட்ட வரலாறுகளையும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு  இங்கு தொழிற்சங்கமாக நாம் எடுத்த  முன்னெடுப்புகள், போராடிப் பெற்ற வெற்றிகள், தொடர்ந்து சமரசமின்றி செயல்பட்டு வரும் சங்கங்களின் செயல்பாடுகள் என அனைத்தையும் விளக்கிப் பேசினார். 

பாராட்டு:

 மாநாட்டில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற  அயோத்தி திரைப்படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அயோத்தி திரைபடத்தின் மைய கதையானது 2011 காலகட்டத்தில் இராமேஸ்வரம் மதுரை பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட கதை. உண்மை நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் நம் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிந்த நம் சங்க நிர்வாகிகள்  சாமுவேல் ஜோதி குமார் மற்றும்  சுரேஷ் பாபு. இவ்விரு தோழர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் மாநாட்டு மேடையில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு உணர்வுப்பூர்வமான ஒன்றாக இருந்தது.

பெண்கள் சிறப்பு மாநாடு:

பெண்களுக்கான சிறப்பு மாநாடு தோழர்கள்  கீதா மற்றும்  பிரேமலதா அவர்கள் முன்னிலையில் பெண்கள் உபக்குழு தலைவர்கள்  இந்துமதி, குளோரி,  பூங்குழலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

 தமிழ்நாடு கிராம வங்கியில் நிலவும் பணிச்சூழல், அதில் பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பொதுச் சமூக சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என விரிவான தளத்தில் மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் விவாதங்களை முன்வைத்தனர்.  விவாதங்களில் பெண்களுக்கான மாதவிடாய் கால சிறப்பு விடுமுறைகள், பணிச்சூழல் பாதுகாப்பு, தனிக்கழிப்பறை வசதிகள் என ஆக்கப்பூர்வமான கருத்துகள் விவாதிக்கப் பட்டன. 

கலைநிகழ்ச்சிகள்

சக்தி போர்ப்பறையின் கலைநிகழ்ச்சிகள்  தோழர்கள் மத்தியில் உற்சாகத்தை எழுப்பின. 

வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் நிகழ்வுகள் மாநாட்டு அரங்கை மேலும் உற்சாகம் மிகுந்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றது.

பிரதிநிதிகள் மாநாடு:

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு மே 1 அன்று  உழைப்பாளர்கள் தினத்தினை நினைவுகூறும் வகையில் உழைப்பாளர்கள் தின கோஷங்களுடன் தொடங்கியது. 

அலுவலர் சங்க தோழர்களுக்கு தனி அரங்கிலும் ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர்களுக்கு தனி அரங்கிலும் என பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 

 பிரதிநிதிகள் மாநாட்டில் கடந்த கால சங்க செயல்பாடுகளை விளக்கி இரு சங்க பொதுச் செயலாளர்களும் அறிக்கைகளை சமரப்பித்தனர். 

அதன் மீதான விவாதங்களும் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கருத்துகளும் விவாதிக்கப்பட்டன. 

 பிரதிநிதிகள் மாநாட்டில்  கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே, அனைத்து கிளைகளிலும் பெண் ஊழியர்களுக்கு தனிக்கழிப்பறை  அமைக்க வேண்டும், தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 நேரமாக மாற்றும் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் மாநாடு நிறைவுற்றது.

One comment

  1. மாநாடு நிகழ்வு கட்டுரை சிறப்பாக உள்ளது.
    நன்றி!

Comment here...