மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது ?

ஜேப்பி

வடகிழக்கின் தனித்துவம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பல் வேறு இனக்  குழுக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற தனித்தன்மைகளுடனும் இருந்து வருகின்றன.. அரசியல் சட்டப் பிரிவு 371ன் கீழ் வளர்ச்சிக்கு என விசேஷ ஏற்பாடுகள் உள்ளன. பல மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் பல பத்தாண்டுகளாக அமலில் உள்ளது. 

மணிப்பூரின் தனித்தன்மை

மணிப்பூர் மாநிலத்தில் மூன்று இனக் குழுக்கள் பிரதானமாக வாழ்ந்து வருகின்றன. மாநிலத்தின் நடுவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு சமவெளியில் வாழும் மெய்டேய் என்ற சமூகம் எண்ணிக்கையில் பெரும்பான்மை (53%). வடக்குப் பகுதி மலைப்பிரதேசத்தில்  நாகா இனச் சமூகமும் (24%), தெற்குப் பகுதி மலைப்பிரதேசத்தில் குக்கி / ஜோமி இனச் சமூகமும் (16%) அரசியல் சாசன பட்டியல் இனப் பழங்குடிகள் . மெய்டேய் மொழியே மணிப்பூரின் மாநில மொழி ஆகும். மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறுபதுக்கு நாற்பது இடங்கள் மெய்டேய் வசம். 

மொத்த நிலப்பரப்பில் 10% மத்தியில் உள்ள பள்ளத்தாக்கு சமவெளிப் பகுதி, மீதி 90% மலைப் பகுதிகள். சமவெளியில் 60% மக்களும், மலைப் பகுதிகளில் 40% வாழ்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதி வளர்ச்சிக்கு என சிறப்பு விதி 371(C) அமலில் உள்ளது. மலைப் பகுதி நிலங்களை மற்ற சமூகத்தாருக்கு விற்க முடியாது. 

பாஜகவின் வாக்கு வங்கி அரசியல்

மணிப்பூர் மாநிலத் (2022)  தேர்தலில் வெல்வதற்கு பல வாக்குறுதிகளை பாஜகவினர் வாரி வழங்கினர். பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி கொண்டு வந்தால் அமைதியும் வளர்ச்சியும் பரிசாகக் கிடைக்கும் என மோடியும், பாஜக மணிப்பூரில் பதவிக்கு வந்தால், குக்கி சமூக மக்களின் “தனி மாநிலக் கோரிக்கை” தீர்க்கப் படும் என அமித் ஷாவும் அள்ளி வீசி மலைப் பகுதி மக்களின் வாக்கு வேட்டை ஆடினர், தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியும் அமைத்தனர். 

முதுகில் குத்திய பிரேன் சிங்

முதல் முறை முதலமைச்சராக இருந்த போது “மலைகளுக்குச் செல்” என மலை வாழ் மக்கள் நலம் பற்றி பெயரளவுக்காவது பிரச்சாரம் செய்த பாஜகவின் பிரேன் சிங், இரண்டாம் முறை பெரும்பான்மையுடன் 2022ல் முதல்வராக பதவி ஏற்ற பின்பு மலை வாழ் மக்களுக்கும் குக்கி இனக் குழுக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை மறந்து பல நடவடிக்கைகள் மூலமாக தனது எதேச்சாதிகாரத்தை வெளிப் படுத்தினார். இது மலை வாழ் மக்களின் மனதில் அரசு குறித்த அதீத அவநம்பிக்கையையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது. 

1) மியான்மரில் 2021ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு அந் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு குக்கி இனக் குழுக்கள்  மணிப்பூரில் பாதுகாப்பளிக்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டது. வெளியாட்களை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் உள்ளூர் குக்கி மக்கள் வெளியேற்றப் பட்டனர். 

2) “சட்டவிரோதமாக குடியேறியவர்களை” களையெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)க்கான அழுத்தம் கொடுக்கப்பட்டது. 

3) இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், இந்திய காடுகள் சட்டம், 1972, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972, இயற்றப்படுவதற்கு முன்பே குடியேறிய கிராம மக்கள், “வனங்களைப் பாதுகாக்கிறோம், பாதுகாக்கப்பட்ட வனங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது” என்ற பெயரில் மலைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 

4) அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து  மார்ச் 10 அன்று உள்ளூர் மக்கள் நடத்திய அமைதியான ஊர்வலத்தில் காவல் துறை அடக்குமுறை செய்தது. 144 தடை உத்தரவு போடப்பட்டது. 

5) குக்கி இனக் குழுத் தேவாலயங்கள், கட்டிடங்கள், வீடுகள் பல இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப் பட்டன. 

6) கசகசா பயிரிட்டு, போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு குக்கி சமூக மக்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. 

7) “சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்ஸ்” (SoO) என்கிற முத்தரப்பு (குக்கி குழுக்கள்-மணிப்பூர் அரசு-ஒன்றிய அரசு) (ஆயுதங்களை விலக்கி பேச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த), ஒப்பந்தத்தில் இருந்து பிரேன் சிங் எந்த முகாந்திரமும் முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென விலகினார். 

8) மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (திருத்தம்) மசோதா, 2021 நிறுத்த முயற்சிக்கப்பட்டது. பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை மலைப் பகுதிகள் குழுவில் சேர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆக மொத்தத்தில், மலை மக்கள் முன்னேற்றத்துக்கு நிர்வாக சுயாட்சியை வழங்கும் பிரிவு 371 C ஐ நீர்த்துப்போகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. 

பட்டியல் பழங்குடி விருப்பம்

குக்கி, நாகா சமூக மக்கள் மட்டும் வளர்கின்றனர், தங்கள் சமூகம் வளரவில்லை, என்ற தவறான கருத்தின் அடிப்படையில் தங்கள் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையில் மெய்டேய் இனத்தவர்  “பட்டியல் பழங்குடி” அந்தஸ்து கோருகின்றனர். இந்தக் கோரிக்கை குக்கி-நாகா மற்றும் மெய்டேய் சமூகங்கள் நடுவில் புகைச்சலை உருவாக்கி இருக்கிறது. 

நீதி மன்ற உத்தரவு

இந்தப் பின்னணியில், மணிப்பூர் உயர்நீதி மன்றம் மெய்டேய் சமூகத்தின் “பட்டியல் பழங்குடி” அந்தஸ்து கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பிறப்பித்த உத்தரவு, பிரிவினைக் கங்குகளைக் மேலும் கிளறி விட்டது. பாஜக அரசும் அதனை ஏற்றுக்  கொண்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தது. 

நவம்பர் 2000 இல் நடைபெற்ற மகாராஷ்டிர மாநிலம் Vs. மிலிந்த் என்ற உச்சநீதிமன்ற வழக்கில் அரசியலமைப்பு பெஞ்ச் *“பிரிவு 342 இன் ஷரத்து (1) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல் பழங்குடியினரின் பட்டியலைத் திருத்தவோ, மாற்றவோ மாநில அரசுகள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது வேறு எந்த அதிகாரத்துக்கும் அனுமதி கிடையாது. … நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் சட்டத்தால் மட்டுமே திருத்த முடியும். … இந்தச் சட்டத்தை அங்கீகரித்து இன்னார்தான் பட்டியலிடப்பட்ட சாதி அல்லது பழங்குடியினர் என தீர்மானிப்பது ஜனாதிபதியின் அதிகாரம்”* என்று  கூறியது. 

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மணிப்பூர் மாநில அரசு  எடுத்துக் காட்டத் தவறிவிட்டது. 

கலவர பூமியாக்கப்பட்ட மணிப்பூர்

மணிப்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்து  60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்,  வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஒரு குக்கி சட்டமன்ற உறுப்பினர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.  

மணிப்பூர் படிப்பினை

பெரும்பான்மையான மெய்டேய் சமூக அரசியலை பாஜக ஊக்குவிக்கிறது. மெய்டேய், நாகா, குக்கி மலைவாழ் பழங்குடிகளின் இந்த மோதலின் இறுதியில், மணிப்பூரின் மலை பற்றும் இயற்கை வளங்கள் யாவும் கார்ப்பரேட் தனியாருக்கு, அதானிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு  சுரண்டப் படப்போகிறது  என்பதை சொல்ல வேண்டியதில்லை. சமூக மோதல்கள் தணிந்து மணிப்பூரில் அமைதி திரும்பட்டும். இந்த நிகழ்வுகள் ஜனநாயகம் விரும்பும் இந்தியர் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.

2 comments

  1. உண்மை!
    பல படிப்பினைகள் உள்ளன, இந்திய மக்களுக்கு.
    வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒரு சமூக பொருளாதார அரசியல் அமைப்பும்,மக்களிடம் அமைதியை உறுதிப்படுத்தாது !

Comment here...