மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

எஸ். பிராமலதா

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், உத்திரப் பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷண், ஒரு சிறுமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு, கடந்த பத்தாண்டுகளாக தொடர் பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளதாகவும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மல்யுத்த வீராங்கனைகளைத் துன்புறுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி, அதற்கு நீதி கேட்டு ,  கடந்த ஜனவரி மாதம் சர்வதேச வீராங்கனைகளான வினேஷ் போகத், ஷாக்‌ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பல மல்யுத்த வீராங்கனைகள் தில்லியில் போராட்டத்தை துவங்கினர். பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களும் உறுதுணையாய் உடன் நின்றனர்.

பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் அதிலும் சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய வீராங்கனைகள் வெடித்துக் கிளம்பியது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

வலுவான ஆதரவுக் குரல்களின் அழுத்தத்தால், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனால், மல்யுத்த வீராங்கனைகளும் நம்பிக்கையுடன் தமது மூன்றுநாள் தொடர் போராட்டத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டனர்

இந்தக் குழுவும் விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், அறிக்கை குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் நம்பிக்கையிழந்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி முதல் தங்களது சமரசமற்ற போராட்டத்தினை மீண்டும் துவங்கியுள்ளனர். தலைநகர் தில்லியின் ஜந்தர் மந்தரில் இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லி காவல்துறையின் வன்முறை:

போராட்டக் களத்தில் தள்ளப்பட்டுள்ள வீராங்கனைகள் மீதும், ஆதரவாளர்கள் மீதும், தில்லி காவல்துறை மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மனித உரிமை அத்துமீறல்களாய் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில், நாள் முழுதும் கொட்டித் தீர்த்த மழையினால், போராட்டக்காரர்கள் அமர்வதற்கும், உறங்குவதற்கும் உபயோகப்படுத்தப் பட்ட மெத்தைகள் நனைந்து போகின்றன. அவர்கள் உறங்குவதற்காக அனுமதியின்றி மடக்கு கட்டில்கள் எடுத்து வரப்பட்டதாக காரணம் கூறி, காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.

எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிஜ் பூஷண் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார். நீதி கேட்டு போராடும் நாங்கள் நிம்மதியாக உறங்கக் கூட இயலாமல் போராடிக் கொண்டிருக்கிறோம். நாட்டிற்காக விளையாடி பெருமை சேர்த்த எங்களை இவ்வாறு அவமானப்படுத்தாதீர்கள். இதற்கு பதில் நீங்கள் எங்களை கொன்று போடுங்கள்….” என போராடும் வீராங்கனைகள் கண்ணீர் விட்டுக் கதறியது ஒட்டு மொத்த தேசத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

அலட்சியம் காட்டும் பிரதம மந்திரி

“BETI PADAVO BETI PACHAVO” என விடாது முழங்கி வரும் நமது பிரதமரின் காதுகளுக்கு, தலைநகர் தில்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளின் குரல் எட்டவேயில்லை என்பது விநோதத்திலும் விநோதம்.

சாமான்ய மக்களின் கூக்குரல்கள் தமது காதுகளை எட்டிவிடாத அளவிற்கு ஒரு வழிப் பாதையிலேயே அவர் பயணித்துக் கொண்டிருப்பது வழமையானது தான். ஆனாலும், இந்த நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் பதக்கங்களையும் வென்று குவித்த, சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த வீராங்கனைகளின் கதறலும், அழுகையும் கூட அவரது காதுகளை எட்ட முடியாத அளவிற்கு கேளாச் செவியாக தொடர்வது, மக்கள் மீதான மாபெரும் அவமதிப்பு. இந்த அவமதிப்பிற்கு அடிப்படையாய் இருப்பது, இந்த சாதனை வீராங்கனைகள் பாலியல் குற்றம் சுமத்தியிருப்பது அவரது சொந்தக் கட்சியான பாஜகவின் எம்.பி பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது என்பது தான்.

தொடரும் போராட்டமும், ஆதரவும்:

நாடெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள் இந்த பாலியல் சுரண்டலுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் போராட்டக் களத்தில் உடன்நின்று ஆதரவையும், நீதிக்கான அழுத்தத்தையும் வலுவாக முன்வைத்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகளும் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. கபில்தேவ், நீரஜ் சோப்ரா, சானியா மிர்ஷா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பலமாய் உடன் நிற்கின்றனர்.

போராட்டக் களத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு,  இணைந்து குரலெழுப்புகின்றனர் விவசாயிகள். இவ்வளவு ஆதரவுக் குரல்கள் வலுவாய் எதிரொலித்தாலும், கேளாச் செவிகளுக்கு எதுவுமே எட்டுவதில்லை என்பது தான் நடைமுறை உண்மையாய் நீடிக்கிறது.

நீண்ட தொடர் போராட்டங்களுக்கும், உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கும் பிறகே, தில்லி காவல்துறையால் பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டும் போதாது. பிரிஜ் பூஷண் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்” எனும் கோரிக்கையுடனும், நம்பிக்கையுடனும் தமது போராட்டங்களை தொடர்கின்றனர் மல்யுத்த வீராங்கனைகள்.

 இது ஏதோ மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கான போராட்டம்…

பெண்களின் மீதான பாலியல் சுரண்டலுக்கெதிரான, பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டம்…

பெண்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம்…

One comment

Comment here...