டோட்டோ சான்: புத்தக விமர்சனம்

எஸ்.பிரேமலதா

ஏதோ ஒரு சத்தத்தை

எப்போதும் எதிரொலித்தபடியே இருந்தது

அந்த புத்தகம்…

சுவாரசியமற்ற கற்பித்தலின்

வெம்மையை தணித்துக் கொள்ள,

வகுப்பறையின் ஜன்னலில் தவம் கிடக்கும்

சின்னஞ் சிறுமிக்காக…

இசைத்துச் செல்லும் வீதி இசைக் கலைஞர்களின் பேரிசை…

சலிப்பூட்டும் வகுப்பறைகளில்

நிரம்பித் ததும்பும் நிசப்தத்தின் பேரமைதியை,

மேசையின் மேல்பகுதி இழுப்பறையை

திறந்து மூடி, மூடித் திறந்து….

உடைத்து நொறுக்கும் பெருஞ்சத்தம்…

பள்ளியில் இருந்து விரட்டப்பட்ட

தனது சின்னஞ்சிறு குழந்தையின்

பிஞ்சுக்கரங்களும், மென் உணர்வுகளும் பற்றிக் கொண்டு,

மாற்றுப்பள்ளியை தேடியலையும் தாயின் பெருமூச்சு…

இரயில் பெட்டி வகுப்பறைகளும்,

இளந்தளிர் இலைகளும் மரங்களும் சூழ்,

டோமோயி பள்ளிச் சுவர்களில்

எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருந்த உற்சாகச் சிரிப்பொலிகள்…

சுவாரசியங்களும், குதூகலங்களும் நிரம்பித் ததும்பிய

கற்றலின் ஆனந்தக் கூக்குரல்கள்…

முள்வேலியின் கீழ் பள்ளம் பறித்து,

ஊர்ந்து சென்று, திரும்பி வருகையில்,

கிழிந்து தொங்கும் ஆடைகளின் மீது

அப்பிக் கிடக்கும் சேறுகள்

தங்களுக்குள் கதைத்துக் கொண்ட

பொய்ப் புனைவுகளின் ஆரவாரங்கள்….

அசெம்பிளி ஹால் படிக்கட்டுகளில்

தனது இளம்பிள்ளைவாத சிறுத்த கால்களால்,

வேகவேகமாய் மேலும்,கீழும் ஓடியிறங்கி

வெற்றிக் களிப்பை கொண்டாடும்

மாற்றுத் திறனாளி மாணவனின் காலடி ஓசைகள்…

தலையில் வெள்ளைத்துணியுடன்

மயானத்தில் ஒளிந்து கிடந்து,

யாரும் வராததால், பயந்து அழுதபடியே திரும்பும்

’பேய்’களின் அழுகுரல்கள்….

இப்படியாக

குறும்புகளும், குதூகலங்களும் தோய்ந்த

எத்தனையோ சத்தங்களை

எதிரொலித்துக் கிடந்த அந்தப் புத்தகத்தின்

இறுதியில் வெடித்துச் கிளம்புகிறது வேறொரு சத்தமும்…

இரண்டாம் உலகப் போரில்

குண்டுகள் வீசப்பட்டு, டோமோயி வெடித்துச் சிதறும் சத்தம்…

டோமோயியின் இடிபாடுகளுக்கிடையே

இடிந்து போகாமல் நிற்கும்

தனது தலைமையாசிரியர் பக்கத்தில்

இரு கைகளையும் பின்புறம் கட்டிக் கொண்டு

ஆறுதல் படுத்தும் டோட்டோ சானின் வாக்குறுதிகள்…

இப்படியாக

புத்தகத்தின் குறும்புத்தனமான சத்தங்களை

வாழ்க்கை எதிரொலித்த முந்தைய பொழுதுகளை…

அவை விளைவித்த மாய விந்தைகளை…

மனதில் செதுக்கிய லட்சியங்களை…

நேர்மையாய் அசைபோட முற்படுகையில்….

சலிப்புக் கற்களால் நிரம்பித் தள்ளாடும்

எனது எடைத் தராசு,

எங்கோ அந்தரத்தில் மிதக்கிறது வெற்றுத் தக்கையாய்…

பெருத்த சிரிப்பொலியுடன்…

தவ்விப் பிடித்து, கட்டியணைத்து கீழிறக்கி,

சமன் செய்து விடுகிறாள்

எனது டோட்டோ சான்…

டோட்டோ சானின் உலகத்தில்

எதுவுமே வருத்தத்திற்கு உரியதல்ல…

எல்லாமே நம்பிக்கைக்குள் அடங்கிக் கிடப்பது…

2 comments

Comment here...