“2023 கர்நாடகா தேர்தல்” கற்றுக் கொடுப்பதென்ன?

ஜேப்பி

கர்நாடக மாநிலத் தேர்தலில் வழக்கம் போல இந்த முறையும் தொங்கு-சட்டசபை (hung assembly) ஏற்படும் எனவும்,பதவியில் இருக்கும் கட்சி மாற்றப் படும் எனவும், மக்கள் தீர்ப்பை என்றுமே மதிக்காத பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனது குதிரை பேர சாகசங்களை அரங்கேற்றி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்க முயலும் எனவும் சகலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவின் ஜனநாயக விரோத, எதேச்சாதிகார, மதவாத, பிளவுவாத, குதிரை பேர அரசியலுக்கு எதிராக வரலாறு படைக்கும் ஒரு தீர்மானகரமான தீர்ப்பை கர்நாடக மக்கள் வழங்கியுள்ளனர். இந்த முயற்சி பெரிதும் கொண்டாடப்பட வேண்டும். கர்நாடகா மக்களுக்கு ஜனநாயக வாழ்த்துக்கள்.

இந்துத்துவா சோதனைச் சாலை
ஆட்சியைப் பிடிப்பதற்கும், மக்கள் விரும்புவது போல் காட்டிக் கொண்டு ஆட்சியில் தொடர்வதற்கும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தனது பிளவு வாத, மத வாத அரசியலால் கலவரங்கள் உருவாக்கி, உயிர்ப்பலி வாங்கி, நிரந்தரப் பிளவு ஏற்படுத்துவதற்கும்,தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நிர்ப்பந்தம், தீவிர தொல்லை கொடுப்பதற்கும், இறுதியில் ஜனநாயக விரோத பாசிச “இந்து ராஷ்டிரா” அமைப்பதற்கும் வசதி செய்யும் வகையில் ஆர்எஸ்எஸ்உம்
அதன் பரிவாரங்களும், அரசியல் முகமான பாஜகவும் பல மாநிலங்களில் “இந்துத்துவா சோதனைச் சாலைகளை” உருவாக்கி சோதனை செய்து வருகின்றன.

வட மாநிலங்களுக்கு ஒரு வகையிலும், கல்வி பொருளாதாரத்தில் சமூக நீதியில் முன்னேறிய தென் மாநிலங்களில் வேறு-வேறு வடிவங்களிலும் இந்துத்துவா பிளவு அரசியல் சோதனைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்திரப்
பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு அடுத்து முக்கிய இந்துத்துவா சோதனைச் சாலையாக கர்நாடகம் இந்துத்துவவாதிகளால் கட்டமைக்கப்படுகிறது.

இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கெனக் கூறி வெறுப்பு விஷப்பிரச்சாரம் செய்வதற்காகவே கூட்டப்படும் “தர்ம சன்சத்”ன் (மதப்பாராளுமன்றம்) இரண்டாவது கூட்டம் கர்நாடகா உடுப்பியில் 1985ம் வருடம் நடத்தப்பட்டதில் இருந்து இந்த இந்துத்துவா சோதனை கர்நாடகாவில் தொடங்கியது எனலாம்.

தொடர்ந்து “ஹூப்ளி ஈத்காஹ் மைதானப் பிரச்சனை”, “சிக்மகளூர் புதன்கிரி தொழுகை பிரச்சனை”, “லவ் ஜிகாத்”, “பசு வதை தடுப்பு சட்டம்”, “மாட்டிறைச்சி”, “ஹலால்”, “சட்டத்திற்கு புறம்பான கொலைகள்”, “மத மாற்றத் தடைச் சட்டம்”, “முஸ்லீம் வணிகர் புறக்கணிப்பு”, முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்க “ஹிஜாப் தடை”, “ஒரே சிவில் சட்டம்”, “தேசிய குடிமக்கள் பதிவேடு”, “முஸ்லிம் சமூகத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) வழங்கப்பட்ட அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து”, “தொழுகைக்கான ஒலிபெருக்கி தடை”, “திப்பு சுல்தான் பற்றிய உண்மைக்குப் புறம்பான பரப்புரைகள்”, “ஊரி கௌடா, நஞ்சே கௌடா என இல்லாத ஆட்களை கற்பனையில் உருவாக்கி திப்பு சுல்தானைக் கொன்றதாகக் கதை கட்டியது” என மதவாத பிளவுவாத நஞ்சை மக்கள் மனதில் நிரந்தரமாக விதைக்க இந்துத்துவா வெறுப்புச் சோதனைகள் பல கர்நாடகத்தில் நடத்தப்பட்டன. பாஜகவின் உணர்ச்சிகர மிரட்டல்கள் தேர்தல் பரப்புரையில், நரேந்திர மோடியின் கருணை கடாட்சம் வேண்டும் என்றால் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், பாஜகவுக்கு பதவி கிடைக்காவிட்டால் கர்நாடகத்தில் “கலவரம் வெடிக்கும்” எனவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிரட்டினார். பிரதமரும் தனது கூட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டுப் பேசாமல், அவற்றிற்கு தீர்வு எதுவும் கூறாமல், பாஜக மீது எதிர்க் கட்சியினர் மற்றும் மக்கள் வைக்கும் விமர்சனங்களை தன் மீது பாடப்பட்ட வசைகளாக வசை எண்ணிக்கைப் பட்டியலிட்டு உணர்ச்சிகரமாக கண்ணீர் விட்டு பேசினார்.

அப்பட்டமான மதப் பிரச்சாரம்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் “பிஎஃப்ஐ (Popular front of India) மற்றும் பஜ்ரங்தள் (Bajrang Dal) மைப்புக்களுக்குத் தடை விதிப்போம்” என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்த பிரதம மந்திரி பஜ்ரங்தள் என்பதை “பகவான் ஹனுமான்” எனத் திரித்து, வாக்களிக்கும் பொழுது “ஜெய் பஜ்ரங் பலி எனக் கூறி பட்டனை அழுத்துங்கள்” என பட்டவர்த்தனமாக மதப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் இவ்வாறு மதப் பிரச்சாரம் செய்வதைக் கண்டிக்க வேண்டிய தேர்தல் கமிஷன் வாலைச் சுருட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த கேலிக் கூத்து கர்நாடகத் தேர்தலையே கேள்விக்குள்ளாக்கியது. இது தவிர “கேரளா ஸ்டோரி” என்ற விஷமப் பிரச்சாரத் திரைப்படத்தை ஆதரிக்கும் விதமாக, முஸ்லீம் தீவிரவாதம் தான் இந்தியாவில் மிகப் பிரதான பிரச்சனை, காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என இந்திய நாட்டின் பிரதமர் பேசியது
அபத்தத்தின் உச்சம்.


தேர்தல் வாக்குறுதிகள்

ஒரு பக்கம் நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர், விலைவாசி உயர்வு கட்டுக்குள் அடங்கவில்லை, வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனை மிகத்தீவிரமடைந்து வருகிறது. மறு பக்கம் மதவாத, பிளவு வாத, மக்கள் விரோத, கூட்டுக் களவாணி முதலாளித்துவக் கொள்கைகளை அரங்கேற்றி வருகிறது பாஜக. பிரதான ஊடகங்கள் மக்கள் நலம் பற்றி கள்ள மௌனம் சாதித்தாலும், சமூக ஊடகங்களில் மக்கள் நலப்பிரச்சனைகள் சாதாரண மக்களால் அலசி ஆராயப்பட்டதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக மக்கள் நலக் “கொள்கை முடிவுகளை” அறிவிக்காவிட்டாலும், சில மக்கள் நல “சலுகைகளை” அறிவிக்க நிர்ப்பந்திக்கபட்டனர்.

மக்கள் எதிர்ப்பியக்கம்

இந்தியக் கார்பரேட் ஊடகங்கள் மக்கள் நலப் பிரச்சனைகளை, பாஜகவின் வெறுப்பு பிரச்சாரங்களை முழு முற்றாக இருட்டடிப்பு செய்தாலும், இந்தியச் சமூக ஊடகங்களில், உலக செய்தி ஊடகங்களில் இப்பிரச்சனைகள் விவாதத்திற்கு உள்ளாகின.

பெங்களூரைச் சேர்ந்த ஹிஜாப் அணிந்த ஆராய்ச்சி அறிஞர் ஷைமா அமத்துல்லா அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “வெறுப்பு அரசியல் எல்லா இடங்களிலும் ஊடுருவியுள்ளது. இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு இனி ஒரு ரகசியம் அல்ல. அதே சமயம் கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது” என்றார்.

மாநிலத்தில் வெறுப்பு அரசியலுக்கு எதிரான குடிமக்களின் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. பல ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ‘வெறுக்க வேண்டாம் ‘ பிரச்சாரத்தைத் தொடங்கினர். மேலும், அரசியல் கட்சிகள் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற
உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு
வலியுறுத்தினர்.

“வெறுப்புப் பேச்சு வேண்டாம்” (Hate Speech Beda) என்ற ஒரு கூட்டு இயக்கம், வெறுப்பூட்டும் பேச்சுகளின் எண்ணிக்கையை பட்டியலிடுவது மட்டுமல்லாமல், அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகாரிகளையும் அணுகியது. “வெறுப்பு மற்றும் திசைதிருப்பும் தந்திரங்கள் பாஜகவின் முக்கிய நிகழ்ச்சி நிரல். அவர்கள் வகுப்புவாத பிளவுகளை தூண்டி தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறார்கள்,” என்று Hate Speech Beda வின் வழக்கறிஞரும் உறுப்பினருமான ஷில்பா பிரசாத் கூறினார்.

இதே போல், மற்றொரு குழுவான “பஹுத்வா கர்நாடகா”, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக வாக்களிக்குமாறு குடிமக்களைக் கேட்டு பிரச்சாரத்தை நடத்தியது.

பாஜகவின் படுதோல்வி

பல ஆண்டுகளாக இந்துத்துவா சோதனைச் சாலையாக கர்நாடகாவை இந்துத்துவா கும்பல் மாற்றி இருந்தாலும், நரேந்திர மோடியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் மதப் பிரச்சாரமாக நடந்து இருந்தாலும், அமித் ஷா மக்களை மிரட்டி இருந்தாலும், பாஜகவின் 36% ஓட்டு வங்கி குறையாமல் இருந்தாலும், தெளிவடைந்த மக்களின் கூட்டு இயக்கத்தால், பாஜகவை விரட்டி அடிக்கவே, பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு விழுந்துள்ளது.

மக்கள் நலம் முன்னெடுப்போம்

கர்நாடகாவின் இந்த நிகழ்வுகள் உணர்த்தும் பாடம் – “மக்களின் கூட்டு இயக்கத்தால் சாதிக்க முடியாதது என எதுவும் இல்லை. பாஜக என்ன, எந்த சக்தியையும் வெல்லும் திறன் மக்கள் இயக்கங்களுக்கே உண்டு.
மக்கள் நலம் முன்னுரிமை பெற வேண்டும், வெறுப்பு அரசியலை விரட்டி அடிக்க வேண்டும்.” இப்பாடத்தை மறவாமல் இந்தியா முழுமைக்கும் அமல் படுத்துவோம். மக்கள் நலம் முன்னெடுப்போம்.

5 comments

  1. மிகவும் அருமையாக வந்துள்ளது கட்டுரை. பல நுட்பமான அரசியல் சமூக விஷயங்களைத் தொகுத்து எழுதி இருக்கும் ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டுதல்கள்.  விலைவாசி, வேலையின்மை, சமூக பதட்டம், அண்மையில் பெருகி வளர்ந்த ஊழல் சனியன் இன்ன பிற இந்தத் தேர்தலில் பேசுபொருளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் இதே வாக்காளர்கள் என்ன தேர்வு செய்வார்கள் என்பதை அப்படியே ஊகித்துவிடக் கூடாது, இன்னும் கடுமையாக உழைத்து, மக்களிடம் நெருக்கமாகச் சென்று உணர்த்தாமல் மோடி ஆட்சிக்கு எதிரான அலையை உருவாக்க முடியாது.
    எஸ் வி வேணுகோபாலன்  

  2. சிறப்பான பதிவு தோழர் ஜெயராமன். வாழ்த்துக்கள்

  3. வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், சரித்திர புரட்டுக்கு எதிராகவும் உறுதியான ஒன்று திரட்டல் மட்டுமே பாஜகவை வீழ்த்தும் என்ற செய்தியை கர்நாடக தேர்தல் கூறுகிறது.

Comment here...