இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை

‌‍‍நூல் விமர்சனம்

S.Harirao

      சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின்  அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகள் கழித்து வந்த அந்த தீர்ப்பை எட்டே நாட்களில் பாஜக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலமாக  அமலாக்க முடியாமல் செய்துவிட்டது.

 இந்தப் பின்னணியில் இந்திய  அரசமைப்பு அவையில்  25.11.1949 அன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய இறுதி உரை பற்றிய ஒரு சிறு நூல் கவனம் பெறுகிறது.  அதில் அவர்  பேசும் பொழுது மாநில அரசுக்கும் மைய அரசிற்கும் உள்ள அதிகாரம் ஒரே தரத்திலான சமத்துவம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு நெருக்கடி நிலை நாட்டிற்கு வரும் பொழுது மைய அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது மக்களுக்கான அரசாங்கமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்திய அரசமைப்பு சட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை அவர் புள்ளி விவரங்களோடு விளக்குகிறார். மற்ற நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரசியல் நிர்ணய சட்டம் இறுதி செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் தங்கள் அரசமைப்பு  சட்டத்தை வடிவமைக்க எத்தனை காலம் எடுத்துக் கொண்டார்கள் என்பதை ஒப்பிட்டு இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைக்க குறைவான கால அவகாசத்தையே எடுத்துக் கொண்டது என்று விவரிக்கிறார்.  மற்ற நாடுகளின் அரசமைப்பு வரைவு சட்டங்கள் எந்த விதமான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் இந்திய அரசமைப்பு சட்டத்தில் 2473 திருத்தங்களை செய்ய வேண்டி இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார். தன்னைவிட அறிவார்ந்தவர்கள் இருந்தும் வரைவுக் குழுவிற்கு  தனக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறார்.

யாரெல்லாம் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு வரைவு வடிவம் கொடுப்பதற்கு   இரவும் பகலுமாக பாடுபட்டார்களோ அவர்களை நன்றி பாராட்டுகிறார். தன்னுடைய பேச்சினுடே கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகளின் அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டுகிறார். இந்திய அரசமைப்பு சட்டம் சந்திக்கக் கூடிய சவால்களாக மற்ற நாடுகளுக்கு இல்லாத பிரச்சனைகளாக பல்வேறு ஜாதிய கட்டமைப்புகளை கொண்ட ஒரு சமூகமாகவும் சுதந்திரம் அடைந்த நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கக்கூடிய ஒரு நிலைமையையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். ஓர் அரசியல் நிர்ணய சட்டம் எவ்வளவு சிறப்பான சட்டமாக இருந்தாலும், ஆள்பவர்கள் மோசமாக இருந்தால் அது ஒரு மோசமான நிலையையே ஏற்படுத்தும் என்றும் அதேபோல் எவ்வளவு மோசமான அரசியலமைப்பு சட்டமாக இருந்தாலும் ஆள்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் நன்மையே விளையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

1950 ஜனவரி 26 அன்று இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். அது தன் சுதந்திரத்தை பேணிக் காத்துக் கொள்ளுமா அல்லது மறுபடியும் இழந்து விடுமா? இந்தியா ஒரு காலத்தில் கொண்டிருந்த சுதந்திரத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான். சொந்த மக்கள் சிலரின் நம்பிக்கை துரோகத்தால் அது தன் சுதந்திரத்தை இழந்தது என்பதை அவர் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகின்றார். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை இந்தியா அறிந்திருந்தது என்றும் பௌத்த பிக்கு சங்கங்கள் நாடாளுமன்றங்களை தவிர வேறொன்றுமில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். அந்த ஜனநாயகத்தை இந்தியா இழந்துவிட்டது. அது இரண்டாவது முறையாக மறுபடியும் இழந்து விடுமா என்ற அச்சத்தை அவர் வெளிப் படுத்துகின்றார்.  நீண்ட காலமாக ஜனநாயகம் பயன்படுத்தாமல் இருந்தால் அது சர்வாதிகாரத்திற்கு வழிவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிடுகின்றார்.

மாபெரும் மனிதர் ஒருவரின் காலடிகளிலும் கூட மக்கள் தங்களுடைய உரிமைகளை வைத்து விடவோ மக்களின் நிறுவனங்களை சீர்குலைக்கச் செய்யும் வகையில் அவரிடம் அதிகாரங்களை ஒப்படைத்து விடவோ கூடாது என்று குறிப்பிடுகிறார். வாழ்நாள் முழுக்க நாட்டிற்கு சேவை செய்த மனிதர்களுக்கு நாம் நன்றி காட்டுவது தவறில்லை ஆனால் நன்றி மனப்பான்மைக்கும் வரம்புகள் உள்ளன. எந்த மனிதனும் தன் கௌரவத்தை விலையாகத் தந்து நன்றி உள்ளவனாக இருக்க முடியாது. எந்த பெண்ணும் தன் கற்பை விலையாகக் கொடுத்து நன்றியுள்ளவளாக இருக்க முடியாது. எந்த தேசமும் தன் சுதந்திரத்தை விலையாகக் கொடுத்து நன்றியுள்ளதாக இருக்க முடியாது என்று அயர்லாந்து தேச பக்தர் டேனியல் ஓ கொன்னெல் கூறியதை மேற்கோள் காட்டுகின்றார். இது மற்ற எந்த தேசத்தை காட்டிலும் இந்தியாவிற்கு மிக மிக அவசியமானது என்று குறிப்பிடுகிறார். அரசியலில் பக்தி அல்லது வீரர் வழிபாடு என்பது சீரழிவிற்கும்  நாளடைவில் சர்வாதிகாரம் தலைதூக்குவதற்கான பாதைதான் என்பதை அழுத்தமாகத் குறிப்பிடுகின்றார்.

அடுத்ததாக அவர் குறிப்பிடுவது நமது நாடு அரசியல் ஜனநாயகத்துடன் மட்டும் திருப்தி அடையாமல் சமூக ஜனநாயகத்தை நோக்கிச்  செல்ல வேண்டும். சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதாகும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை ட்ரினிட்டி என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிக்க முடியாத அங்கங்களாக அவை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அரசியலைப் பொருத்தவரை சமத்துவமும் சமுதாய பொருளாதார வாழ்க்கையைப் பொறுத்தவரை சமத்துவமின்மையும் இருக்கும்.   அரசியலில் ஒருவாக்கு – ஒரு மதிப்பு என்ற கோட்பாடு இருக்கும். சமுதாய பொருளாதார வாழ்க்கையில் ஒரு மனிதன்- ஒரு மதிப்பு என்ற கோட்பாடு தொடர்ந்து மறுக்கப் பட்டு வரும். இந்த முரண்பாட்டை சீக்கிரமாக களைய வேண்டும். இல்லையென்றால் அரசியல் ஜனநாயகம் என்ற கட்டமைப்பை மக்கள் வெடிவைத்து தகர்த்து விடுவார்கள்  என்று தன் அச்சத்தை வெளிப்படுத்துகின்றார்.

அனைத்து இந்தியரிடமும் ஒரு பொதுவான சகோதரத்துவ உணர்வு இருக்க வேண்டும் என்பதும் அது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதையும் அவர் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் மக்களே தங்களை ஒரு தேசம் என்று உணர முடியாமல் இருந்தார்கள் என்றும் அது இந்தியர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்றும், பல்லாயிரக்கணக்கான ஜாதிகளால் பிரிந்துள்ள மக்கள் எப்படி ஒரு தேசத்தினராவர்? தேசம் என்பதே ஒருவித மாயை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இறுதியாக மக்களின், மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்  அரசாங்கம் என்ற கோட்பாட்டை நமது அரசமமைப்புச் சட்டத்தில் வைத்துள்ளோம். அத்தகைய அரசியல் சட்டத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.  அரசமைப்பு அவையில் ஆதரவாகப் பேசியவர்கள், அவர் சந்தித்த எதிர்ப்புகள், அவற்றை அவர் தன் கருத்துக்களின் மூலம் கையாண்ட விதம் ஆகியவை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள். அவசியம் படிக்க வேண்டிய சிறுநூல்.

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையிலிருந்து இன்றைக்கான பாடங்களை நாம் கற்றுணர வேண்டியதன் அவசியத்தை எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்து என்.சி.பி.எச் வெளியிட்டுள்ள இந்த சிறு புத்தகம் நமக்கு உணர்த்துகிறது.

9 comments

  1. இன்றைய காலத்திற்கு நாம் அனைவரும் படித்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருப்பது அற்புதம். ஆசிரியருக்கு நன்றிகள் பல.

  2. அம்பேத்கர் உரை மிக அருமையாக இருந்தது தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்

Comment here...