“வாழ்வாதாரக் கோரிக்கை”  – சிஐடியுவின் பிரச்சார நடைபயணம்

2100 கிமீ கோரிக்கை பிரச்சாரப் பயணம்

ஜேப்பி

தொழிலாளர் நலன் மற்றும் வர்க்க ஒற்றுமை காக்க, வர்க்கப் போராட்டம் வளர்க்க, தொழிற்சங்கத் திருத்தல்வாதத்தை மறுதலித்து, மே 28-30, 1970 அன்று கல்கத்தாவில் நடந்த முதல் அகில இந்திய மாநாட்டில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கம் ஆரம்பிக்கப் பட்டு சிறப்பாக செயலாற்றி வருகின்றது.

உழைக்கும் மக்கள் நலப் போராட்டத்தின் 53 வருட வரலாற்றின் தொடர்ச்சியாக, தமிழக சிஐடியு சார்பில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2100 கிலோ மீட்டர்  தூர கோரிக்கை நடைபயணப் பிரச்சாரம் நடைபெறுகிறது. மே 19 வெள்ளியன்று மாலை திருவொற்றியூர், கோயம்புத்தூர், கடலூர், மீஞ்சூர், களியாக்காவிளை, தென்காசி, ஓசூர் ஆகிய இடங்களில் நடந்த  பொதுக்கூட்டங்களுடன் இந்தப் பிரச்சாரம் துவங்கியது.

மே 20 காலை 7 மணிக்கு தமிழ்நாட்டின் இந்த ஏழு முனைகளிலிருந்து தொடங்கிய மக்கள் இயக்க நடைபயணம் மே 30 அன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

தொழிலாளர் உரிமை பறிப்பு

“தொழிலாளர் உரிமை என்பது ஒரு மனித உரிமை” என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ). இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் ஏற்கனவே போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கின்றன. ஒன்றிய அரசு தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மூலமாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற முனைந்து கொண்டு இருக்கிறது.  தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை,  கூட்டுப் பேர உரிமை மறுக்கப் படுகின்றன. புதிய ஓய்வூதியத் திட்டம் திணிக்கப் படுகிறது. 38 கோடி முறைசாரா தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், அனைத்தும் மறுக்கப் படுகின்றன. பெண்களுக்கு வேலை உத்திரவாதம், சரிசமமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மறுக்கப் படுகின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம்

வேலையில்லாத் திண்டாட்டம் 46 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. இது ஒழிக்கப்படுவதற்கு பதில், பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர்.  காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. பொதுத்துறை நிர்மூலமாக்கப் படுகிறது, தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் செயல்படுத்த மறுக்கிறார்கள். தொழிலாளர்கள் ’அவுட்சோர்ஸிங்’  ஒப்பந்தக் கூலி முறைகளால் அதிக வேலை நேரம், குறைந்த கூலி, பாதுகாப்பற்ற பணி என ஒட்டச் சுரண்டப் படுகின்றனர். “அக்னிவீர்” தற்காலிக இராணுவ வேலைத் திட்டம் மூலம் இராணுவப் பயிற்சி பெற்ற ஒரு “வேலையில்லாப் பட்டாளம்” திட்டமிட்டு உருவாக்கப் படுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி

அன்றாடம் வாழத் தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின்  விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற கொள்கை மறுக்கப் பட்டு கல்வி வணிக மயமாகி விட்டது. இலவச/குறைந்த கட்டண மருத்துவ வசதிகள் மறுக்கப்பட காப்பீட்டுத் திட்டங்களாக உருமாற்றம் செய்யப்படுகின்றன. ரயில்கள் வெறும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மூத்த குடிகளுக்கு அளிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை பறிக்கப் படுகிறது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படுகிறது. விலைவாசி கட்டுப்படுத்தப்படாத சூழலில், தேவை அடிப்படையிலான குறைந்தபட்சக் கூலி ரூ.26,000/- வழங்கப் படுவதில்லை.

செல்வந்தர்களின் அரசு

உழைக்கும் வர்க்கத்தின் நிலை நாளும் சீரழிந்து கொண்டிருக்க, பெரிய செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், வரித் தள்ளுபடிகள், வாராக் கடன் தள்ளுபடிகள், தேசத்தின்-மக்களின் சொத்து தாரை வார்ப்பு என வாரி வாரி வழங்கப்படுகின்றன. 

மேல் மட்டத்தில் உள்ள 1 சதவிகித இந்தியர்கள்  இந்தியாவின் மொத்தச் செல்வத்தில் 40%க்கு மேல் தங்கள் வசம் குவித்து வைத்துள்ளனர்.  அதே சமயம் மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 50% மக்கள் (70 கோடி) மொத்தச் செல்வத்தில் 3 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.

செவி சாய்க்காத அரசு

ஓராண்டுக்கு மேலாக போராடிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை  நிறைவேற்றப் படவில்லை. கடந்த ஏப்ரல் 5 அன்று உழைக்கும் மக்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி  இலட்சக் கணக்கான தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பேரணி டில்லியில் நடைபெற்றது. ஆனாலும் பாஜக அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.  எனவே ஒரு நாடு தழுவிய மக்கள் இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டு உள்ளது.

14 அம்ச கோரிக்கைகள்

எனவே தமிழகத்தில் மக்கள் இயக்கப் பிரச்சாரத்தை நடை பயணமாக மேற்கொண்டு உழைக்கும் மக்களின்  14 அம்ச கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரப் பயணம் நடத்தப் படுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, பொது விநியோக முறையைப் பரவலாக்கு;

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிடு;

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கிடு;

ஒப்பந்தப் பணி முறையை புகுத்தாதே;

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் செய்யாதே;

காலிப் பணியிடங்களை நிரப்பு;

முறை சாரா தொழிலாளர் நலவாரியத்தை சீரமை;

4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெறு;

மின்சார சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாக்களை திரும்ப பெறு;

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து;

விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கிடு;

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அழிக்காதே, வேலை நாட்களை 200 ஆக உயர்த்திடு, தினசரி ஊதியம் ரூ.600 வழங்கிடு, வேலை உறுதி திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்து;

பொதுத்துறையை சீரழிக்காதே, தனியாருக்குத் தாரை வார்க்காதே;

அங்கன்வாடி, ஆஷா முதலிய திட்ட ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்;


உழைக்கும் மக்களின் இந்த மிக முக்கிய கோரிக்கைகளை முன்னெடுக்கும் சிஐடியு வின் இந்த பெரு முயற்சி வெல்லட்டும்.

12 comments

  1. இந்திய தொழிற்சங்க மையம்-தமிழ்நாடு நடத்தி வரும் நடை பயணம் மக்களின் நலன் சார்ந்த தொழிலாளி வர்க்கத்தின் நலன் சார்ந்த செயல் என்பதை இக்கட்டுரை மூலம் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். நாம் அனைவரும் இப்பயணத்தில் நம்மை ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதை உணர்த்தியுள்ளார். ஆசிரியருக்கு நன்றிகள்

    1. அருமை. சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது

  2. I too participated in the programme at Poo market coimbatore. எழுச்சி பயணம். Good article by Com Jayaraman

Comment here...