ஜேப்பி
“மதியம் தலைநகர் தில்லியில் கோடை மழை, மாலை போராடும் மல்யுத்த வீராங்கனைகளின் கண்களில் கண்ணீர் மழை.” இப்படித்தான் லண்டன் பிபிசி தொலைக்காட்சி மல்யுத்த வீரர்களின் போராட்டம் பற்றிய அறிமுக உரை கொடுத்தது. நாடு ஐபிஎல் ஆட்டத்தை கண்கொட்டாமல் தூக்கத்தைத் தொலைத்து ரசித்துக் கொண்டு இருந்தது. புதிய பாராளுமன்ற கட்டிடத் துவக்க விழாவில் பிரதமர் மோடி கையில் செங்கோல் ஏந்தி மன்னராக உருமாற்றம் அடைந்து கொண்டிருந்தார். தில்லி ஜந்தர் மந்தரில் பாய், தார்ப்பாய் என அனைத்தும் கிழித்து எறியப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் குண்டர்களைப் போல குண்டுக் கட்டாக அகற்றப்பட்டு கைதாகி குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது.
இறுதி எச்சரிக்கை
மல்யுத்த வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அனைத்து நாட்டு மல்யுத்த அமைப்புகளுக்கும் உலக ஒலிம்பிக் மல்யுத்த அமைப்பு இந்த வருடம் ஏற்கனவே சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது. இந்தச் சூழலில், மல்யுத்த வீரர்களின் மீது தில்லியில் இந்தத் தாக்குதல் நடந்ததைக் கண்ட உலக மல்யுத்த அமைப்பு இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டும் இல்லாமல் இறுதி எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய மல்யுத்த அமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்வோம் என அறிவுறுத்தி உள்ளது. இது இந்தியர்களின் மல்யுத்த மற்றும் ஒலிம்பிக் கனவுகளை, எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. “விஸ்வ குரு”வின் பொய் முகத்திரை கிழிந்து உள்ளே இருக்கும் கோர முகம் உலகிற்கே வெளிச்சமாகி உள்ளது. ஒன்றிய அரசின் “மகள்களைக் காப்பாற்றுவோம்” பிரச்சாரம் ஒரு போலிப் பாசாங்கு என பகிரங்கம் ஆகியுள்ளது.
இந்திய மல்யுத்த அமைப்பின் நீண்டநாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார்கள் 2023 ஜனவரி மாதம் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திடம் இளம் மல்யுத்த வீராங்கனைகளால் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் உத்திரப்பிரதேசம் லக்னோவில் தொடங்கவிருந்த 41 பெண்களுக்கான தேசிய மல்யுத்த முகாம் ரத்து செய்யப்பட்டது.
வினேஷ் போகத் “டங்கல்” திரைப்படத்தின் உண்மைக் கதையின் நாயகி. உலக மல்யுத்தப் போட்டிகளில் பதினைந்திற்கும் மேலாக பதக்கங்கள் வென்றவர். இவர் தந்தை “துரோணாசார்யா” விருது பெற்ற புகழ் பெற்ற மல்யுத்தப் பயிற்சியாளர்.
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர். திருட்டு, கலவரம், கொலை, கிரிமினல் மிரட்டல், கொலை முயற்சி, கடத்தல், பாபர் மசூதி இடிப்பு, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பிரிஜ் பூஷண் மீது முப்பதுக்கும் மேல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மும்பை ஜே.ஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு நடத்திய தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுக்கு உதவியதாக 1993 இல் அவர் மீது பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் குற்றம் சாட்டப்பட்டது. தான் ஒரு கொலை செய்துள்ளதாக இவரே கொடுத்த வீடியோ பேட்டி மற்றும் மேடையில் எல்லோர் முன்னிலையிலும் ஓர் இளம் மல்யுத்த வீரரை கன்னத்தில் இவர் அறையும் காட்சிகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. இவருடைய மூத்த மகன் தன் சாவுக்கு தந்தையின் (பிரிஜ் பூஷண் சரண் சிங்) சுயநலமே காரணம் என குறிப்பு எழுதி வைத்து விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சோகமும் கவனிக்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முதலில் பிரதமர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் பிரதமர் அலுவலக அறிவுரைப்படி விளையாட்டுத் துறை அமைச்சரை அணுகினர். விளையாட்டுத் துறை அமைச்சர் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் தெரிவிக்கிறார். அதன் பின்னர் மல்யுத்த வீராங்கனைகள் மிரட்டப் படுகின்றனர். தில்லி காவல் துறையினரிடம் பாலியல் குற்றப் பத்திரிகை பதிவு செய்ய கோரப் பட்டது. தில்லி காவல் துறை பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றப் பத்திரிகை பதிவு செய்ய மறுத்துவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட ஏழு மல்யுத்த வீராங்கனைகள், இதில் ஒருவர் மைனர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வினேஷ் போகத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா மற்றும் மற்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் இணைந்தனர். நீதி கிடைப்பதை உறுதி செய்ய குற்றச்சாட்டுகளைப் பொது வெளியில் கொண்டு வரத் தள்ளப்பட்டனர் வீராங்கனைகள்.
உச்ச நீதிமன்றம் குற்றப்பத்திரிகை பதிவு செய்ய தில்லி காவல் துறைக்கு ஆணையிட்டது. மேலும், இது பற்றிய மற்ற உதவிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு விசாரணை இன்றி வழக்கை முடித்தது. தில்லி காவல் துறை பிரிஜ் பூஷண் சரண் சிங்ஐ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய மறுத்தது. எனவே மேஜிஸ்திரேட்டிடம் வழக்கு தொடரப்பட்டது. மைனர் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று குழம்பிய நீதிமன்றம் தில்லி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை 5 வாரங்கள் (ஜூலை 6 தேதிக்கு) ஒத்தி வைத்துள்ளது.
உள் புகார் குழு இல்லை
30 இந்திய விளையாட்டு கூட்டமைப்புக்களில் (ஸ்போர்ட்ஸ் ஃபெடரேஷன்), மல்யுத்த கூட்டமைப்பு உட்பட 16 அமைப்புக்களில் 2013 பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட “உள் புகார் குழுக்கள்” அமைக்கப்படவில்லை என்ற உண்மை இந்தப் போராட்டத்தின் விளைவாக வெளி வந்தது.
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு சட்டப்படி “உள் புகார் குழு” அமைக்காததைக் காரணமாக வைத்தே, அரசு கூட்டமைப்பின் தலைமையை பதவி நீக்கி இருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சகம். பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தனிக் குழு அமைத்தது. மேரி கோம் தலைமையிலான இக்குழுவின் அறிக்கை ஏப்ரலில் கொடுக்கப்பட்டாலும் இன்னும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் பிதற்றல்
பிரிஜ் பூஷண் சரண் சிங் இன்னும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் படாமல் வெளியில் இருந்து குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். ஆதாரம் எங்கே எனக் கிண்டல் செய்கிறார். வீரர்களை மிரட்டுகிறார். இழிவு செய்கிறார். வினேஷ் போகத் “ராமாயணக் கூனி” என்று நக்கல் அடிக்கிறார். நல்ல எண்ணத்தில் தான் மாரைத் தொட்டேன், அப்பாவைப் போலத்தான் கட்டிப் பிடித்தேன் என்று பிதற்றுகிறார். தனக்கு ஆதரவு திரட்டுவது, போக்சோ சட்டத்தை திருத்துவோம் என சூளுரைப்பது, ஜூன் 5ல் மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவோம் என்று தனது அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுகிறார். இதனிடையே பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு எதிராக, வீரர்களை இழிவு படுத்த வழக்கம் போல பொய்களைப் பரப்பி ஓவர்டைம் வேலை செய்கிறது.
பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டம்
காவல் துறை, விளையாட்டுத் துறை, நீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் நீதி வழங்க தாமதம் ஏற்படுத்தியதால், தர்ணா போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் இறங்கினர். புதிய நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நடந்த போது தாக்கப்பட்டு, குண்டுக்கட்டாக தூக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு ஜோடனை குற்றச்சாட்டுகள் சூட்டப்பட்டு நீதி மறுக்கப் பட்டனர். எனவே தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவோம், சாகும்வரை உண்ணா விரதம் இருப்போம் என முடிவெடுத்தனர். விவசாய சங்கத் தலைவரின் தலையீட்டால் பதக்கங்கள் வாங்கிக் கொள்ளப்பட்டு அரசுக்கு 5 நாள் கெடு விதிக்கப் பட்டுள்ளது.
அமைதியாக நீதி கேட்கும் மல்யுத்த வீராங்கனைகளின் நியாயமான போராட்டத்திற்கு மற்ற விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அமைப்புகள், எழுத்தாளர்கள், வக்கீல்கள், விவசாய மற்றும் தொழிற்சங்கங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி உள்ளனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது உடனடி நடவடிக்கை எடு!
பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்கு!
அநீதிக்கு எதிரான ஜனநாயக போராட்டங்களை அடக்காதே, மதித்து நட!
எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு நாடெங்கும் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆணாதிக்கத்தின் உச்சத்தில், ஜனநாயகப் போராட்டம் மறுக்கும் பாசிச குணத்துடன் ஒன்றிய பாஜக அரசால் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி முறியடிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மலர்ந்துள்ள இந்த நம்பிக்கை மல்யுத்த வீராங்கனைகளுடன் கூட ஒட்டு மொத்த உழைக்கும் மகளிர் அனைவருக்கும் சட்ட சமூக உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வீறு கொண்ட, பரந்துபட்ட மக்கள் போராட்டங்களுக்கான உத்வேகம் அளிக்கட்டும்.
இந்த பதிவின் ஆசிரியர் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளின் இன்றைய பரிதாபங்களை அழுத்தமாக பதிவிட்டுள்ளார். இதைப் படிப்பவர்களும் தங்களின் கருத்துக்களை பிரச்சனை குறித்து பதிவிட வேண்டும். இவை யாவும் ஏதோ ஒரு வகையில் அரசுக்கு அழுத்தமும் அதன் மூலம் வீராங்கனைகளுக்கான நீதியும் கிடைக்கும்.
மிகவும் அருமையாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுரை. நம் மகளிருக்கு நீதி கிடைக்கட்டும்
இந்த அறப்போராட்டம் கண்டிப்பாக நீதி கிடைக்கும்
பதிவு மிகச்சிறப்பு
👍🏼👍🏼👍🏼👍🏼
மல்யுத்த வீராங்கனைகளின் தொடர்போராட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுரை…
மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டுரை
Condemn to central central Government