மருத்துவ, சாலை வசதி இல்லாததால் சிறுமியின் பரிதாபச் சாவு!

சீனிவாசன்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகில் உள்ள மலை கிராமம் அத்தி மரத்துக்கொல்லை.  தமிழ்நாட்டில் இருக்கும்  சாலை வசதி இல்லாத கிராமம் என்று ஓர் ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை பாம்பு கடித்து இறக்கும் போது தான் தெரிய வருகிறது.  வாகனம் செல்வதற்கு சாலை இல்லாததால் அணைக்கட்டு மருத்துவமனைக்கு 18 கிலோமீட்டர் தூரம் நடு ராத்திரியில் நடந்தே குழந்தையை எடுத்துச் சென்றனர் குழந்தையின் பெற்றோர். செல்லும் வழியிலேயே குழந்தை உடல் முழுவதும் விஷம் பரவி  இறந்து விட்டது. நவீன தாராளமய கொள்கையால் வணிக மயமாக்கப்பட்டு லாபகரமான தடங்களில் மட்டும் சாலைகள் அமைப்பது, பேருந்துகள் இயக்குவது  என்ற அவலத்தின் ஒரு நிலை இது. மக்களின் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்வதற்குகூட போராட வேண்டி இருக்கிறது  கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை.  அப்படியே இருக்கும் இடத்தில்  விஷக்கடி முறிவுக்கு  மருந்துகள் இருப்பதில்லை. 

அடுக்கும்பாறை மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு ஆம்புலன்ஸில் இருந்து சாலை வசதி இல்லாத காரணத்தால்  பாதி வழியிலேயே பெற்றோர்கள் இறந்த குழந்தையின் உடலோடு இறக்கப்பட்டனர். 10 கிலோமீட்டர் தொலைவிற்கு  நடந்தே சென்று குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

நாம் எங்கே இருக்கிறோம்.  வளர்ந்த  மாநிலங்களில் ஒன்று  தமிழ்நாடு என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும்  மாநிலத்திலா! நீண்ட சாலை வசதிகள் கொண்ட நான்காவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அரசின் ஆவணங்கள் கூறுகின்றன. அதே போல் மருத்துவ குறிப்பாக கிராமப்புற மருத்துவ வசதிகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவையாவும் இருப்பினும் ஏன் இந்தச் சிறுமி இறக்கவேண்டும?. இச்சிறுமியின் சாவு பாம்பு கடித்ததால் மட்டுமல்ல, காரணம் உடனடியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை, அருகில் மருத்துவ மனை இல்லை, மருத்துவ மனை செல்வதற்கு சாலை வசதி இல்லை.

வலைதளத்தில் செய்தி பரவியதை அடுத்து  மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகள் அத்திமரக் கொல்லைக்கு விரைந்தனர்.  கரடு முரடான சாலையில் கலெக்டரின் கார் செல்ல முடியவில்லை.  நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியரின் கார் கொண்டு செல்லப்பட்டது! பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் “சாலை வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்படும், இந்த கிராமத்திற்கு தேவையான மருத்துவ வசதியும் செய்து தரப்படும் என்று செய்தியாளர்களிடையே கூறினார், இன்னும் இது போல் எத்தனை கிராமங்கள் உள்ளன என்பதையும் பார்த்து, அங்கு ஒரு துர்சம்பவம் நடைபெறும் வரை காத்திராமல் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும்.

கிராமப்புற மக்களின், குறிப்பாக மலை கிராம மக்களின் குறைந்தபட்ச.அடிப்படை வசதிகளை, சாலை, பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை உத்தரவாதப்படுத்துவது  தமிழக அரசின் கடமையாகும், நமது அரசுகள் மக்களை காப்பதில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதில் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதையே இந்த  நிகழ்வு உணர்த்துகின்றது.

3 comments

  1. மிகுந்த அநியாயம். சிறுமியின் சாவு இயற்கையானதாக கருத முடியவில்லை. அரசின் மெத்தனம் உணர முடிகிறது. இது ஏதோ ஒரு சிறு நிகழ்வு என்று மனசாட்சி உள்ளவர்களால் ஒதுக்கி விட்டு செல்ல முடியாது. இது மாதிரியான விஷயங்களை சமூக தளத்தில் கொண்டு வந்ததில் ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள். அரசு மக்களுக்கானதாக மாற வேண்டும்.

  2. Even after 75 years of Independence a poor child dies due to lack of basic roads. The governments’ priorities lies elsewhere and basic amenities to the common man always takes a back seat. Let this be an eye opener to get at least basic amenities to the last citizen of this country

Comment here...