சித்திரம் பேசுதடி

எஸ் வி வேணுகோபாலன்  

ஓர் ஓவியம் எப்போதும் முற்றுப் பெறுவதில்லை – 

சுவாரசியமான புள்ளிகளில் அது நிறுத்தப்பட்டிருக்கும், அவ்வளவுதான்.

– பால் கார்ட்னர்

னிதர்களது ஆதிக் கலை ஓவியமாக இருந்திருக்க வேண்டும்.   எழுத்து வடிவம் தொடக்க காலத்தில் ஓவியமாகவே தொடங்கியது, இப்போதும் பல மொழிகளின் எழுத்துரு சித்திரங்களாக இருப்பதைக் காண முடியும். சித்திரமும் கைப்பழக்கம் என்கிறாள் அவ்வை. நூற்றாண்டுகளைக் கடந்து நம்மோடு பேசிக் கொண்டிருக்கின்றன குகை ஓவியங்கள். வார இதழ்களில் கதைகள், தொடர்கதைகள் வாசிக்கத் தூண்டிய ஓவியங்கள் வாழும் மனங்களில் இன்னமும் குடியிருக்கின்றனர் அமரத்துவம் பெற்றுவிட்ட ஓவியர்கள். 

மனைவியின் தாலிக் கயிறும், பெற்றெடுத்த குழந்தையின் தொப்புள் கொடியுமாக இணைந்து வளரும் நீட்சியாக, மரமேறியின் கயிறு சித்தரிக்கப்பட்டு இருந்த ஓவியத்தை அண்மையில் பார்த்து அதிர்ந்து போனேன். 

தாய் அணிந்து மகிழ்ந்ததுவும் ஒரு கயிறு – என்னைத் 

தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு 

தென்னை பனை ஏறிடவும் ஒரு கயிறு – இன்று 

தூக்கிலிட வருவதும் ஒரு கயிறு 

என்கிற காவல் தெய்வம் திரைப்படப் பாடல் (பொறப்பதும் போவதும் இயற்கை) வரிகள் நினைவுக்கு வந்தன. அதைவிட அதிர வைத்த இந்த ஓவியத்தைத் தனது ஒற்றைக் கையால் வரைந்திருந்தவர் காவேரி எனும் மாற்றுத் திறனாளிக் கலைஞர். 

யாரும் பாராத ஒரு நேரத்தில், ஓயாது உழைத்து நிற்கும் களைப்பில் தனது கால்களைத் தானே பின்னிக் கொண்டு பெருமூச்சு விடும் நாற்காலியின் ஓவியம் ஒன்று. 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்து வெளியே விழுதுகள் தள்ளி நிற்கும் ஆலமரமாக இருக்கும் பெண், குடும்ப அமைப்புக்குள் ஒரு போன்சாய் மரக்கன்று போலத் தான் மதிக்கப்படுகிறாள் என்று உணர்த்திய ஓவியம் ஒன்று. 

ஒற்றை ரூபாய் நாணயத்தை நோக்கிய ஒரு பெண் உழைப்பாளியின் நடை, அவளால் அந்த வருவாயை ஈட்டக் கூட முடியாத பெருந்தூர நடையாகக் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது, சுரண்டலின் கோர வடிவங்களை மிக இலகுவாகக் கடத்திய அற்புதக் கலையாக மின்னியது.

இப்படியாக, உழைப்புச் சுரண்டல், உழைப்பு அவமதித்தல், ஓய்வே அனுமதிக்க முடியாது என்கிற கொடூர சிந்தனைகள் இவற்றைத் தத்தம் பார்வையில் தூரிகையால் தீட்டி இருந்தனர் ஓவியர் சிலர்.  

பால் கார்ட்னர் சொன்னது போல், ஓவியங்கள் முற்றுப்பெறுவதில்லை தான்… இந்த ஓவியங்கள், பார்ப்போர் சிந்தனையில் நிறைய செய்திகளை, வரலாறுகளை, தத்துவத் தேடலைக் கிளர்த்துவதாகவும் அமைந்துவிட்டன. 

மே 27-28 தேதிகளில் சென்னை கேரள சமாஜம் அரங்கில் நடைபெற்ற உழைப்போர் எல்லாம் தலை எனும் தலைப்பிலான இந்த ஓவியக்  கண்காட்சி மாநகரின் முக்கிய கவன ஈர்ப்பாக அமைந்தது. இந்த ஓவியங்களை, மே தினத்தை ஒட்டி, ஏப்ரல் 30, மே  1 தேதிகளில் இந்தக் கலைஞர்கள் தேனாம்பேட்டை நரேஷ் பால் மைய அரங்கில் வைத்து வரைந்தனர். மே 5 மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் என்பதால் மாதம் முழுவதுமே உழைப்பின் மேன்மையை, சுரண்டலுக்கு எதிரான வலுவான கருத்தியலைப் பண்பாட்டுத் தளத்தில் முன்னெடுக்க மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு முடிவெடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, மாதக் கடைசி விடுமுறை நாட்களில் கேரள சமாஜத்தில் இந்த ஓவியங்களைப் பரந்துபட்ட மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்துவது, குழந்தைகள் ஓவியப் பயிற்சி நடத்துவது, அதனோடு புரட்சிகர மாற்றுத் திரைப்படங்களைத் திரையிடுவது என்ற நிகழ்வுகளாகத் திட்டமிட்டுச் சிறப்பாக நடந்து முடிந்தது. 

மாஸ் மீடியா கிளை தோழர் ராமமூர்த்தி தலைமையில் ஓவியக் கண்காட்சி, விட்னஸ் திரைப்பட இயக்குனர் தீபக் – தமுஎகச மாவட்ட செயலாளர் ராஜ சங்கீதன் ஒருங்கிணைப்பில் மாற்று சினிமா திரையிடல் நிகழ்வுகள் நடைபெற்றன.  இந்த நிகழ்வுகளின் சுருக்கமான தொடக்க விழா மிகவும் சிறப்பாக அமைந்தது இன்னொரு சுவாரசியமான அம்சம். 

“மாற்றுக் கலை வடிவங்கள் என்றாலே அது ஓர் எலைட்டிஸ்ட் (மேட்டுக்குடி) சிந்தனை போக்கு என்று பேசப்படுவதை எல்லாம் புரட்டிப் போட்டு, மார்க்சிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டக் குழு, உழைப்பைப் பற்றிப் பேசும் நவீன ஓவியங்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்துவதை  மகிழ்ச்சியோடு பார்க்கிறேன்” என்றார் தி இந்து தமிழ் திசை உதவி ஆசிரியர் ம சுசித்ரா. 

தொடக்க நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய சுசித்ரா, “ஓவியம் என்ன செய்ய முடியும் என்றால், 10 மணி நேரம் பேசும் விஷயத்தை ஓர் ஓவியம் பளிச்சென்று உணர்த்தி விடும்.  உலகின் சிறந்த தத்துவ மேதை சாக்ரடீஸ் அவர்களுக்கு ஹெம்லாக் நஞ்சு கொடுத்து உண்ண வைத்தனர்… ஏனெனில், அவர் ஆதிக்க பீடங்களுக்கு எதிராக சிந்தித்தார், உண்மையை உரத்துப் பேசினார்…எனவே தண்டிக்கப்பட்டார்! அந்தக் கொடுமையைப் பின்னாளில் ஓவியமாகத் தீட்டிய கலைஞர் ஒருவர் அதற்கு PROBLEM OF DISSENT (மாற்றுக் கருத்தால் விளையும் பிரச்சனைகள்) என்று தலைப்பு வைத்தாராம். இப்போதும் மாற்றுக் கருத்து சொல்வது மறுக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம்…அண்மையில் கூட எட்டு மணி நேர வேலை என்பது கேள்விக்குள்ளாக்கப் பட்டதை பார்த்தோம்… இங்கே ஓவியர்கள் உழைப்பு எப்படி பார்க்கப்படுகிறது, ஓய்வு என்பது எப்படி மோசமாகக் கருதப்படுகிறது என்பதை வெவ்வேறு விதங்களில் ஓவியங்களாகத் தீட்டி இருக்கின்றனர் …” என்று பாராட்டினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் ஓவியர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் கே பாலகிருஷ்ணன், உழைப்பின் மேன்மையை மே தின புரட்சிகர பராம்பரியத்தின் தத்துவத்தை இந்த ஓவியங்கள் சிறப்பாகக் காட்சிப்படுத்தி உள்ளன என்று குறிப்பிட்டார்.  இந்த ஓவியங்களின் தாக்கத்தில் குழந்தைகளின் ஓவியங்கள் அமைந்ததும், முஷ்டி உயர்த்திய லெனின் ஓவியத்தை அதில் பார்த்ததையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார் அவர்.

சுருக்கமான வாழ்த்துரை வழங்கிய சமூக செயல்பாட்டாளர் – திரைக் கலைஞர் ரோஹிணி, ‘நமது ஆயுதங்கள் பேனாவும் தூரிகையும் தான்..இதைக் கண்டு தான் அவர்கள் (ஆளும் வர்க்கம்) அஞ்சுகின்றனர்…அவர்களது ஆயுதங்கள் இவற்றுக்கு முன்னால் வெற்று ஆயுதங்கள்” என்றார். 

கலை இலக்கிய வடிவங்களில் பாட்டாளி மக்கள் வாழ்க்கையை, போராட்டங்களை, விடுதலையை இன்னும் சீரிய அளவில் முன்னெடுக்க எடுத்து வைத்த முக்கிய அடியாக அமைந்தது இந்த முயற்சி.

4 comments

  1. ஒரு தூரிகை வருடியபடி மென்மையாக செல்வதை போல் அருமையான வர்ணனை…. வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  2. ஓவிய கண்காட்சி பற்றி சிறந்த எழுத்தோவியம் 💐
    வாசகருக்கு ஒரு ஓவியத்தை காட்சிபடுத்தியிருக்கலாம்!

  3. அருமையான ஓவியங்களை பார்க்க தவறியவர்களை வருந்த வைக்கும் வண்ணம் விமர்சன கருத்தோவியம் வரைந்துள்ளார் வேணு.

Comment here...