வங்கி தனியார்மயமாக்கல் ஆபத்து: மீண்டும் முறியடிக்கப்படும்

தலையங்கம்

”திட்டமிட்டபடி வங்கிகள் தனியார்மயமாக்கல் நடைபெறும்” என்று ஒன்றிய நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார். மே மாத இறுதியில் மும்பையில் நரேந்திர மோடி அரசின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு சொற்பொழிவின் போது அவர் இதை கூறியுள்ளார். 2021 பட்ஜெட்டில் ”ஐடிபிஐ வங்கி அல்லாமல் இரண்டு பொதுத்துறை வங்கிகள் முதல் கட்டமாக தனியார்மயமாக்கப்படும், அதற்கான சட்ட திருத்தங்கள் உடனடியாக கொண்டு வரப்படும்” என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார். ”மொத்தத்தில் கேந்திரமான பொதுத்துறையில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே அரசின் வசம் இருக்கும், மற்றவையெல்லாம் தனியார்மயமாக்கப்படும்” என்றும் கொள்கை அறிவிப்பினை பாஜக அரசு வெளியிட்டிருந்தது. வங்கித்துறை கேந்திரமான துறை என்று வரையறுக்கப்பட்டுள்ளதால் இன்றுள்ள 12 அரசு வங்கிகளில் 8 வங்கிகள் ஒவ்வொன்றாக தனியார்மயமாக்கப்படும் என்பதுதான் அதன் பொருள்.

இந்த அறிவிப்பினை கேட்டு வெகுண்டெழுந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று 2021 மார்ச் 15,16 ஆகிய இரு நாட்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதை ஒட்டியும், அதன் பின்னரும் வங்கிகள் தனியார்மயமானால் ஏற்படும் ஆபத்து குறித்து நாடு தழுவிய பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதையெல்லாம் மீறி பாஜக அரசு 2021 குளிர்கால கூட்டத்தொடரில் வங்கிகளை தனியார்மயமாக்க சட்டத்திருத்தம் முன் மொழிந்தது. அதனை கண்டித்து, சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி மீண்டும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2021 டிசம்பர் 16,17 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தனர். சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட இடது சாரி தொழிற்சங்கங்கள், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் வேலை நிறுத்ததிற்கு முழுமையான ஆதரவு அளித்தன. மக்கள் ஆதரவு பெருகியது. அதன் காரணமாக வங்கிகள் தனியார்மயமாக்கும் சட்டத்திருத்த மசோதா கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் தனியார்மய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “முன்பு நிதி ஆயோக் இரண்டு வங்கிகள் பெயரை முன்மொழிந்தது. ஆனால் தற்போது அனைத்து பொதுத்துறை வங்கிகளும் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. எனவே எந்த வங்கியை வாங்குவது என்ற முதலீட்டாளர்களின் விருப்பத்தை பொறுத்து முதலில் இரண்டு வங்கிகள் தேர்ந்தெடுக்கப்படும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத  உயர்மட்ட அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கிகள் தனியார்மயமானால் என்னாகும்?

  • சேவை பின்னுக்கு தள்ளப்படும். அரசு வங்கிகள் போட்டிக்கு இருப்பதால் இன்று கிடைக்கும் ஓரளவு சேவையும் காணாமல் போகும். லாபம் ஒன்றே குறியாகும்.
  • 5 லட்சத்திற்கு கூடுதலான டெபாசிட்டுக்கு பாதுகாப்பு கிடையாது.
  • சாமான்ய மக்களுக்கான முன்னுரிமைக் கடன் கைவிடப்படும்.
  • 43 கோடி ஜன்தன் கணக்குகள் பராமரிக்கப்படாது.
  • வங்கிப் பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்காது. சமூக நீதி கைவிடப்படும்.
  • உயர்மட்ட ஊழல் தலை விரித்தாடும்.
  • ஈட்டப்படும் லாபம் முழுவதும் தனியார் கைகளுக்கே போய் சேரும்.
  • குறுகிய கால டெபாசிட் தொகையை வைத்து அரசு வங்கிகள் நீண்ட கால கடன் கொடுத்துள்ளதால், வங்கிகள் திவாலாகும் ஆபத்து உள்ளது.
  • தற்போதே தனியார் நுண்நிதி நிறுவனங்கள் 2 வட்டி (24% ஆண்டுக்கு) வசூலிக்கிறார்கள். வங்கிகள் தனியார்மயமானால் சாமான்ய மக்களுக்கான கடனின் வட்டி வானத்தை நோக்கி பாயும்.
  • விவசாயம், சிறுதொழில், கல்வி, பெண்களுக்கான குறுங்கடன் ஆகியவை காணாமல் போனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறையும். தேவை குறையும். உற்பத்தி தேக்கமடையும். வேலையிழப்பு ஏற்படும். இது மீண்டும் தொழிலாளர்களின் வாங்கும் சக்தியை குறைக்கும். பொருளாதாரம் சுருங்கும்.

இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனாலும் வங்கிகளை தனியார்மயமாக்க முயல்கிறார்கள் என்றால் ஆளும் கட்சிக்கு அள்ளித்தந்த கார்ப்பரேட் முதலாளிகள்பால்தான் தங்கள் விசுவாசம் உள்ளது என்பதை அவர்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். ”நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போனாலும் நாங்கள் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் கொள்கை வகுப்போம், செயல்படுவோம்” என்று பாஜக அரசு கூறிவிட்டது. ”உங்களை அந்தப் பாதையில் செல்ல விடமாட்டோம். ஓட்டு போட்ட கோடானு கோடி மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். காலச்சக்கரத்தை ஒரு போதும் பின்னுக்கு தள்ள அனுமதிக்க மாட்டோம். வங்கிகள் தனியார்மயத்தை எத்தகைய தியாகம் செய்தாவது தடுத்து நிறுத்துவோம்” என்று வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும், இந்திய தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் உறுதி பூண்டுள்ளனர். ஒன்றிய அரசின் முயற்சி மீண்டும் தோல்வியையே சந்திக்கும். 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இத்தகைய நாசகரக் கொள்கையை கொண்ட பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

8 comments

  1. Immediate action by Trade Unions is the need of the hour. The dangers of privatisation needs to be taken to the public.

  2. பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம்… மக்களின் பணத்தை பாதுகாப்போம்…

  3. இனி வரும் பொதுத் துறை வங்கிகள் பாதுகாப்பு போராட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களை ஈடுபடுத்த திட்டமிடல் வேண்டும் ‌

  4. 2024 தேர்தலில் எல்லா எதிர் கட்சிகளும் இணைந்து இந்த அரசை தோற்கடிக்க வேண்டும். இல்லையேல் India private limited என்றாகிவிடும்…ரவீந்திரன்

Comment here...