தமிழ் வழிக்கல்வியில் தலைநிமிர்ந்து நிற்கும் பள்ளி

ஜி. சிவசங்கர்

‘அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

என்பான்புரட்சிக்கவி பாரதி. புரட்சிக்கவியின் இந்த கனவை நிஜத்தில் நிகழ்த்திக்

காட்டி வருகிறது ஒரு தொழிற்சங்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள குறிச்சி என்ற குக்கிராமத்தில் மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒன்றை கடந்த 2002ம் வருடம் BEFI யின் உறுப்புச் சங்கமான இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் என்ற தொழிற்சங்கம் தனது கல்வி அறக்கட்டளையின் மூலம் துவக்கியது.

தோழர் சங்கரய்யாவால் தொடங்கப்பட்ட பள்ளி

“தகைசால் தமிழர்” தோழர் சங்கரய்யா அவர்களின் கரங்களால் தொடங்கப்பட்ட இந்த பள்ளி ஒரு தமிழ் வழிக்கல்வி பள்ளியாகும். இந்த பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். மேலும் பிற பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறன்கள் கொண்ட குழந்தைகள் இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் அருகில் உள்ள சுமார் இருபது கிராமங்களிலிருந்து பள்ளி வாகனங்களின் மூலம் அழைத்து வரப்பட்டு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

நான்கு முறை தேசிய விருதுகள்

வழக்கமான பள்ளிகளைப் போல் அல்லாமல் இங்கு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவது இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கும் பிரம்படி கலாச்சாரம் தொடக்கம் முதலே இங்கு கிடையாது. மாணவர்களை மனதளவில் பாதிக்கும் தரவரிசை அட்டை (ரேங்க் கார்ட்)  கொடுக்கப்படுவது கிடையாது. இவ்வாறு ஆசிரியர் – மாணவர் உறவு என்பது நண்பர்களைப் போல் அமைவதால் மாணவர்கள், ஆசிரியர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி பாடங்களில் ஏற்படும் தங்கள் சந்தேகங்களைக் கேட்டறிந்து தெளிவு பெறுகின்றனர்.

மேலும் புத்தகங்களில் உள்ளவற்றை அப்படியே மனதில் ஏற்றி வெளிப்படுத்தும் மனப்பாட முறை கற்றலுக்கு மாற்றாக, முழுக்க முழுக்க எளிமையான செயல்வழிக் கற்றல் முறையில் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறிப்பிடத்தகுந்த வகையில் மேம்படுகிறது. சுற்றுச்சூழல் மேம்பாடு, இயற்கை வளம், மண் வளம் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர் இப்பள்ளி மாணவர்கள். இதன் உச்சமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளில் பங்கேற்று நான்கு முறை தேசிய விருதுகளையும் வென்று காட்டியுள்ளனர் இக்குழந்தைகள்.

முதல் தலைமுறை மாணவர்கள்

மேலும் பாடப்புத்தகங்களைத் தாண்டி மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு கிராமியக் கலைகளும், பாரம்பரிய விளையாட்டு முறைகளும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இம்மாணவர்கள் தொடர்ந்து பல பதக்கங்களைப் பெற்று வருகின்றனர். முற்றிலும் கிராமப்புறப் பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற வீடுகளில் இருந்து முதல் தலைமுறை மாணவர்களாக பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் இந்த மாணவர்களின் இத்தகைய வெற்றிகள் அவர்களைப் பயிற்றுவிக்கின்ற இப்பள்ளி ஆசிரியர்களையும், இப்பள்ளி நிர்வாகத்தையுமே சேரும் என்று சொன்னால் அது மிகையல்ல.

22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பள்ளி

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியில் உருவாக்கப்பட்ட ஒரே சுயநிதிப்பள்ளி என்ற தனிப்பெரும் பெருமையைக் கொண்டுள்ளது இந்த ஐபிஇஏ பள்ளி. தான் சந்தித்த பல்வேறு சவால்களையும் சாதனைகளாக மாற்றிக்காட்டி தன்னுடைய 22வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இப்பள்ளி. இப்பள்ளியில் படித்த மாணவர்களில் இரண்டு பெண்கள் மருத்துவர்களாகவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியாளர்களாகவும், பல மாணவர்கள் ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியில் ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என இருபதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கான ஊதியம், பள்ளியின் நிர்வாகச் செலவுகள், பள்ளி வாகனத்திற்கான செலவுகள்  போன்றவற்றை இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள், பணிநிறைவு பெற்ற மூத்த ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதன் மூலமாகவும் மற்றும் பிற வங்கி ஊழியர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் மூலம் பெறும் நிதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா கால ஊரடங்கின் போது பெரும்பாலான தனியார் பள்ளிகள் அவர்களின் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்திய அல்லது பெருமளவில் குறைத்த நிலையில் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக பள்ளியை இயக்க முடியாத நிலையிலும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நூறு சதவீத சம்பளம் கொடுக்கப்பட்டு ஒரு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தமது வர்க்கக் கடமையை சரியான முறையில் நிறைவேற்றியது ஐபிஇஏ தொழிற்சங்கம்.

தன் உறுப்பினர்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் சார்ந்த போராட்டங்களைத் தாண்டி சமூகம் குறித்த வர்க்கப் பார்வையும், சமூக முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளுமே ஒரு தொழிற்சங்கத்தின் தலையாய கடமை என்ற வகையில் கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இப்பள்ளியை நடத்தி வருகிறது ஐபிஇஏ தொழிற்சங்கம். இருப்பினும் மாறி வரும் பொருளாதார சூழலில் பள்ளியின் நிர்வாகச் செலவுகள் என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அவற்றை ஈடுகட்டி இப்பள்ளி தொடர்ந்து தனது சமூகப்பணியினைத் தொடர்ந்திட இச்சமூகத்தின் அங்கமான நாம் அனைவரும் சேர்ந்து கரம் கொடுப்போம்.

5 comments

  1. மிகுந்த சிரமங்கள் நடுவில் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக உழைக்கும் எல்லோரும் பாராட்ட பட வேண்டும். IBEA TN பணி என்றும் சிறக்கட்டும்.

  2. பள்ளியைப் பற்றிய தகவல்கள் மிகவும் எளிமை மற்றும் அருமை.
    வாழ்த்துக்கள்.

  3. பள்ளிகளைப்பற்றி தகவல் மிகவும் அருமையானதுவாழ்த்துக்கள்

  4. போற்றுதலுக்குரிய அரும்பணி. மக்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

Comment here...