சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் சட்ட விரோத தீர்ப்புகள்

எஸ்.பிரேமலதா

சமீப காலங்களில் நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களின் நீதிபதிகளில் சிலர், இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் வழக்குகளை அணுகுவதும், சட்டத்திற்கு விரோதமான தீர்ப்புகளை வழங்குவதும் கவலையளிக்கிறது.

இந்து மத சாஸ்திரங்கள், மனுஸ்மிருதி போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவது பாஜக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் நீதி தேவதையின் தராசுத் தட்டில் எடைக்கற்களாய் தமது சனாதன நம்பிக்கைகளை அடுக்கி வைத்துக் கொள்கின்றனர். நீதி தேவதை ஏறி நிற்கும் சட்ட சாசன புத்தகத்திற்கு பதிலாக, மனுஸ்மிருதியை நுழைத்து விடுகின்றனர். சட்ட விரோதமான, வினோதமான தீர்ப்புகளை எழுதிக் குவித்து புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர். 

எந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்களை கரைத்துக் குடித்து, நிபுணத்துவம் பெற்று நீதிபதி பதவியை எட்டுகின்றனரோ, எந்த அரசியலமைப்பு சட்டத்தின் பேரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு நீதிபதியாக பொறுப்பேற்கின்றனரோ, அதே அரசியலமைப்பு சட்டத்தினை காலில் போட்டு மிதிக்கும் செயலுக்கு ஒப்பானதாகும் இந்த அபாயகரமான போக்கு.

சமீபத்தில், பாலியல் வன்புணர்விற்கு உள்ளான பெண்ணின் ‘செவ்வாய் தோஷத்தை’ உறுதி செய்ய ஜாதகத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம். 

அதே ரீதியிலான மற்றொரு உத்தரவை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் ஜே தேவ் வழங்கியுள்ளது நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர், அந்த வன்கொடுமையால் ஏற்பட்டுள்ள தனது 7 மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, தனது தந்தையின் மூலம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

கருக் கலைப்புக்கான மருத்துவச் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 3ன் படி, கருக்கலைப்புக்கான உச்ச வரம்பு ஐந்தரை மாதங்கள் தான். ஆனால், கருவுற்ற தாயின் மனநிலை மற்றும் உடல்நிலை கருதியோ, பிரசவத்தின் போதோ அல்லது அதற்குப் பிறகோ தாய்க்கு ஆபத்து நேர்வதற்கான சூழல் நிலவும் பட்சத்தில் கருவைக் கலைக்க அனுமதி உண்டு. இந்த அடிப்படையில் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரியுள்ள மனுவை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி தேவ், விசாரணையின் போது அருளியுள்ள வார்த்தைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன.

“நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அவர்களுக்குத் தெரியும் திருமணம் செய்ய அதிகபட்சம் 14 முதல் 15 வயது தான். அதன் பிறகு 17 வயதுக்கு முன்பே குழந்தை பிறந்து விடும், ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். நீங்கள் மனுஸ்மிருதியை படித்திருக்க மாட்டீர்கள். ஆனால், இதைத் தெரிந்து கொள்ள மனுஸ்மிருதியை ஒரு முறை படியுங்கள். நமது சமூகத்தில் 17 வயதுக்குள் பிள்ளை பெற்றுக் கொள்வது தான் பெண்களின் வழக்கம்” என்று கூறியுள்ளார்.

மனுஸ்மிருதியை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இந்த நீதிபதி சட்ட புத்தகத்தை, சட்டத்தின் நீண்ட நெடும் வரலாறுகளை படித்தவர் தானா எனும் சந்தேகம் வலுக்கிறது.

குழந்தை திருமண தடைச் சட்டம் 1929, நிறைவேற்றப்பட்ட வரலாற்றையும், அதற்கான போராட்டங்களையும், கட்டாய உடலுறவினால் இடுப்பெலும்பு முறிந்து இறந்து போன ஏராளமான பெண் குழந்தைகளின் கண்ணீர் கதைகளையும் இந்த தேசம் ஒருபோதும் மறக்காது. 

5,6 வயது கூட நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதையும், அதில் பல பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே விதவைகளாகி வீட்டு மூலையில் முடங்கிக் கிடந்ததையும், பல பெண் குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு, இளம் வயது கர்ப்பங்களால் சொல்லொணா துயரங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவித்த வாழ்நாள் வேதனைகளையும் நம்மால் இன்றைய 21ஆம் நூற்றாண்டில் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், 1880களில் தான் இந்த குழந்தைத் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் தீவிரமாக முன்னுக்கு வந்தது. வயதான கணவனால் திருமணம் எனும் உறவுக்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 11 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இறந்தது போன்ற கொடுமைகள் இதற்கு அடிப்படையாய் அமைந்தன.

ஆனால், 1891ல் முன்வைக்கப்பட்ட இந்த சட்டத்திற்கான முன்வடிவு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“பூப்படையாத பெண்களுக்கு திருமணம் செய்தால் சிறைத்தண்டனை என்கிறது உங்கள் அரசு. ஆனால் பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்கு போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம்” என ஆச்சார்யா போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் கடுமையாக வெளிப்படையாக எதிர்த்து பேசினர்.

“இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் கை வைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை” என முழங்கினார் திலகர்.

அதே சமயம் சட்டத்தை வரவேற்று, அரசியல் ஆதரவும், சமூக ஆதரவும் நாடெங்கிலும் வலுத்தன. நீதிபதி ராணடே, டாக்டர் பண்டார்க்கர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களும், தமிழ்நாட்டில் வ.உ.சி, பெரியார் போன்ற தலைவர்களும் ஆரம்ப காலகட்டத்திலேயே வெளிப்படையாய் வரவேற்றனர். அதே சமயம் நாடெங்கிலும் வலுத்த முற்போக்கு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களும் இந்த சட்டம் நிறைவேறுவதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கின.

இறுதியில், பாரம்பரியம், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், புனிதம்  என குறுக்கிட்ட பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து, சட்டம் அமுலுக்கு வந்தது. 

ஹாபிலாஸ் சார்தா எனும் ஆங்கிலேயர் முன்மொழிந்த குழந்தை திருமண தடைச் சட்ட முன்வடிவு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, 1929ஆம் ஆண்டு சார்தா சட்டமாக நிறைவேறியது. 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த அந்த சட்டமே சாரதா சட்டம் என காலப்போக்கில் மாறிவிட்டது.

தொடர்ந்து 2006ல் நிறைவேற்றப்பட்ட குழந்தைத் திருமண தடைச் சட்டம் பெண்களுக்கான திருமண வயது வரம்பை 18ஆக உயர்த்தியுள்ளது. 

“18 வயதுக்கு குறைவான மனைவியுடன் கணவனான ஆண் ஒருவர் உடலுறவு கொள்வது, இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரத்திற்கு சமம்” என்று உச்ச நீதிமன்றத்தின் 2017ஆம் வருட தீர்ப்பும் இங்கு முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது.

மேற்கண்ட சட்ட ஷரத்துக்களின் அடிப்படையில் ஆராயும் போது, குஜராத் உயர் நீதிமன்றம் “17 வயதுக்குள் பிள்ளை பெற்றுக் கொள்வது பெண்களின் வழக்கம்” என குறிப்பிட்டிருப்பது –சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது என்பது மட்டுமல்ல, சட்டத்தினை முற்றிலுமாக அவமதிப்பதற்கு ஒப்பானது. 

அடுத்த கட்டமாக அந்த நீதிபதி, பகவத் கீதையை கையிலெடுத்துக் கொண்டுள்ளார். போற்றலும் தூற்றலும் கடந்த மோனநிலைக்கு நீதிபதிகள் பழகிக் கொள்ள வேண்டுமெனவும், அந்த மோனநிலைக்கு பகவத் கீதையின் இரண்டாவது அதிகாரத்தில் இருந்து கோடிட்டு காண்பித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய நபர், தற்போது மோர்பி மாவட்டத்தில் சிறைத்தண்டனையில் இருக்கிறார். நீதிபதி தேவ், அந்த குற்றவாளியை அழைத்து, சமரசத்திற்கு ஏதும் வழியிருக்கிறதா என முயற்சிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

வழக்கின் அடிப்படையே கருக்கலைப்பிற்கு அனுமதி கோரித்தான் எனும் பட்சத்தில், ஒரு வலுக்கட்டாயமான சமரசத்தினை நீதிபதியே முன்னெடுப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்கக் கூடியதல்ல.

‘செவ்வாய் தோஷ’ விவகாரத்தில் உடனடியாக தானே தலையிட்டு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், குஜராத் நீதிமன்றத்தின் இத்தகைய பிற்போக்குத்தனமான நீதி விசாரணையில் உடனடியாக தலையிட்டு கண்டிக்க வேண்டும்.

ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி, சட்டத்தின் அடிப்படையில் அணுகாமல், மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு வழக்கினை அணுகிக் கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உளைச்சலும், உடல் ஆரோக்கியமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பழமைவாத கருத்துக்கள் முன்னால் நிறுத்தப்படுகின்றன. இத்தகைய தீர்ப்புகள் சமுதாயத்தில் மீண்டும் பெண்களை சட்டப்படியே அடிமைப்படுத்தும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் தங்கள் வலுவான கண்டனக் குரலை பொது வெளியில் எழுப்புவதன் மூலம் இத்தகைய சட்ட விரோத அணுகுமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

One comment

Comment here...