ஆந்திர காவல் துறையின் அராஜகம் – உரிய நடவடிக்கை வேண்டும்

ஹரிராவ்

ஜூன் 11(ஞாயிற்றுக்கிழமை) இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் துறையினர், கிருஷ்ணகிரி மாவட்டம் புளியண்டபட்டி கிராமத்தில் உள்ள குறவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மீது வழக்கு உள்ளதாக அவரை கைது  செய்து அழைத்து செல்வதற்கு மப்டியில் ஒரு வாகனத்தில் வருகிறார்கள். எதற்காக இரவு நேரத்தில் அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்காக அவருடைய மனைவி அருணா (வயது 27),  அவரது உறவினர் கண்ணம்மாள் (வயது 65), மற்றும் 7 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோரையும் அடித்து வண்டியில் ஏற்றி  ஆந்திரா மாநிலம் சித்தூரில் கொண்டு சென்று யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனை அறிந்த ஐயப்பனின் சகோதரி சத்யா  மறுநாள் தனது  அண்ணனை ஆந்திரா போலீசார் அடித்து சித்தூருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக புகார் செய்திருக்கிறார்.

அதன் பின்பு நேரடியாகவும் புகார் கொடுத்திருக்கிறார். இதனை அறிந்த சித்தூர்  காவல் துறையினர், அடுத்த நாள், திங்கட்கிழமை இரவோடு இரவாக ”எங்கள் மீது புகார் செய்து விட்டாயா?” என்று ஐயப்பனுடைய சகோதரி சத்யா (வயது 40) அவருடைய கணவர் ரமேஷ் (வயது 55), இவர்களுடைய மருமகள் பூமதி (வயது 24) ஆகியோரை  அடித்து இரவோடு இரவாக கடத்திச் சென்று ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஐந்து நாட்களாக எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை. தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி வேலு  சித்தூர் காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளரிடம் கடத்தி வந்தவர்கள் பற்றி விவரம் கேட்கிறார்.

பொறுப்பான பதில் இல்லை.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு உடனடியாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து கேட்டபோது, ”அனைத்து விபரங்களையும்  ஊத்தங்கரை டிஎஸ்பி இடத்திலே கேளுங்கள்” என்று சொல்லி ஊத்தங்கரை டிஎஸ்பி யை  அவருடன் பேச வைத்தார். ஊத்தங்கரை டிஎஸ்பி தான் பொறுப்பேற்று ஒரு வார காலம் தான் ஆகிறது என்று கூறி,  சித்தூர் மாவட்ட எஸ்பி, மற்றும் சித்தூர் டவுன் டிஎஸ்பி ஆகியோரின் கைபேசி எண்ணை கொடுத்தார். டில்லிபாபு  சித்தூர் டிஎஸ்பி யை தொடர்பு கொண்டபோது அவர்  பேச மறுத்துவிட்டார். அவரது உதவியாளர் தான் பேசினார்.

சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டபோது, அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டு, இது குறித்து தனது கவனத்திற்கு வரவில்லை, விசாரித்து தகவல் தெரிவிப்பதாக கூறுகிறார். இவை முடிந்த பிறகு, டில்லிபாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை  தொடர்பு கொண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தியை  சுட்டிக்காட்டி கேட்டபோது, கடத்திச் செல்லப்பட்வர்கள் சித்தூருக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்கள் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக கூறினார்.  இவ்வளவு பெரிய சம்பவத்தில்  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் ,கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளரும் எவ்வாறு இது நடந்தது என்று விவரம் அறியாமல் உள்ளது வேதனையளிப்பதாக டில்லிபாபு குறிப்பிடுகிறார்.

”இளம் பெண்கள் மூன்று பேர் மற்றும் 7 வயது குழந்தை என்ன ஆனார்கள்? ஏன் சட்டத்தை மீறி  ஐந்து நாட்கள் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  மேலும் கடந்த காலங்களில் ஆந்திர மாநில காவல் துறையினரோ அல்லது வனத்துறையினரோ விசாரணை என்றுஅழைத்துச் சென்ற பழங்குடி மக்களின் பிணங்கள் தான் திரும்பி வந்துள்ளன, அல்லது பல வருடங்களாக சிறையிலே அடைக்கப்பட்டு சிறையிலே செத்து மடிந்துள்ளனர் என்றும் இதுதான் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட  பழங்குடி மக்களுடைய கொடுமையான வாழ்க்கை என்று டில்லிபாபு குறிப்பிடுகிறார்.

தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் தலைவராகிய டில்லிபாபு மற்றும் குரவர் பழங்குடியின சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் ஆகியோரின் தலையீடு காரணமாக கடத்திச் சென்றவர்களில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் கிருஷ்ணகிரி பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள். ஐயப்பன் மற்றும் பூமதி இன்னும் விடுவிக்கப்படவில்லை.  சித்தூர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த பெண்களை காவல் நிலைய காவலர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, தனிப்பட்ட உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி இருப்புக் கம்பியை திணித்து சித்திரவதை செய்துள்ளார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் இன பெண்களை பாலியல் வன்முறை செய்து, கொடுமையான சித்தரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஆந்திர மாநில அரசுடனும், காவல்துறையுடனும் உரிய முறையில் தலையிட வேண்டும்; குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

மேலும், பாலியல் வல்லுறவுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி, உடலாலும், மனதாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் காவல்துறையினர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூன் 26 திங்கட்கிழமையன்று கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

4 comments

  1. The brutality and atrocities carried out by Andhra Police in this issue is highly condemnable. Are we living in a democratic country? Can those who have the power to safeguard the common people instill such a fear psychosis in the minds of the under privileged and oppressed? The answer to all these questions is the absence of social consciousness amongst people. In this way, this article kindles the consciousness of the readers. Good that such issues find a place in your magazine

  2. இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் அதிகாரத்தின் கோர வெறி இன்னும் பழங்குடியினர் மீது தொடர்ந்து கொண்டு தான் உள்ளதுஇந்தியாவின் ஜனாதிபதி ஒரு பழங்குடி பெண்தான் ஆனால் இந்தியாவில் பழங்குடியினர்இன்னும் சமூகத்தில் அங்கீகரிப்பதே இல்லை வாழ்வாதாரத்துக்கு அவர்கள் உரிமைக்காகவும் நாம் போராட வேண்டிய தேவை உள்ளது🚩🚩🚩

  3. ஆந்திர போலீசார் செயல்பாடுகள் மிகுந்த கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த நிவாரணம் கிடைக்க வேண்டும்

Comment here...