பரிதிராஜா
தேர்வுகள் எக்காலத்திலும் மாணவர்களின் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் தான். ஒரு காலத்தில் படித்த பாடத்தை நினைவு படுத்திக்கொள்ளவும், குறைகளை சரி செய்யவும் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போதோ படிப்பில் சேர்வதற்கே தேர்வுகள் நடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. 1990களில் தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைமுறையில் இருந்தது. அந்த அபத்ததை எதிர்த்த போராட்டங்களால், 2006 ம் ஆண்டில் இந்த நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, +2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங் மூலமாக பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடந்தது. 2013ல், நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் என்ற பெயரில் நுழைவுத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. இன்னும், பொறியியல் படிப்புகளுக்கும், அறிவியல் மற்றும் கலை பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை தேசிய அளவில் நடத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது.
தகுதி…?
நுழைவுத் தேர்வு முறைகளை ஆதரிப்போர் பெரும்பாலும் சொல்லும் வாதம், படிக்க தகுதி வேண்டாமா? என்பது. படித்து முடித்த பின்னர், ஒரு தொழிலை செய்யவோ, ஒரு வேலைக்கு சேரவோ தகுதி, அனுபவம் கேட்பது நியாயமாக இருக்கலாம். படிக்கவே தகுதி வேண்டும் என்று சொல்லுவது, சமத்துவ சிந்தனைக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் கூட படிப்பு அவசியம். மேலும், அது தரும் வாழ்வதற்கான உரிமை என்பது, விரும்பிய கல்வியை பெறவும் தான். ஆக, நுழைவுத் தேர்வு தகுதியை நிர்ணயம் செய்ய என்பது அடிப்படை இல்லாத, குறைபட்ட சிந்தனையின் வெளிப்பாடு.
இடஒதுக்கீட்டை ஒழிக்க
இந்தியாவின் சாதீய அடுக்குகளால் கட்டப்பட்ட சமூகத்தில், பெருவாரியான மக்களுக்கு கல்வியும், சமத்துவமும் மறுக்கப்பட்டன. அதை மாற்றி, அந்த மக்களுக்கும் உரிமைகளை உறுதிப்படுத்த கொண்டுவரப்பட்ட ஓர் ஏற்பாடே இட ஒதுக்கீடு. இந்த இட ஒதுக்கீட்டு நடைமுறையை நீர்த்துப் போக வைக்கவும், இல்லாமல் செய்திடவும் அதிகார வர்க்கம் பல வழிகளில் முயற்சி செய்துவருகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த நுழைவுத் தேர்வு முறை.. இந்த வாதத்தை மறுக்க முடியாது, ஏனென்றால், அதிகாரத்தில் இருப்பவர்களின் சிந்தனை அத்தகையதே. இப்போதைக்கு, நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணிலும் கட்-ஆஃப் முறையில், இடஒதுக்கீட்டுக்கு வேறு வழியின்றி இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டு முறையை மெல்ல சிதைக்கும் வழியாக அதிகார வர்க்கம் இந்த நுழைவுத் தேர்வுகளை நினைக்கலாம்.
கோச்சிங் கிளாஸ் என்னும் சந்தை!
இந்தியாவில் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர், சமூகத்தின் அத்தனை அம்சங்களும் சந்தையின் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கல்வி, மருத்துவம் என எதுவும் விட்டு வைக்கப்படவில்லை. அரசுப் பள்ளிகள் தங்களின் வரி வருமானத்தில் தான் நடத்தப்படுகின்றன என்று புரிந்தாலும், மனதில் தனியார் பள்ளிகளின் மீது தீராத மோகம் ஏற்படுத்தும் விதமாக மக்களிடம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசே அனைவருக்கும் கல்வியை கொடுக்க முடியுமா? என்ற கேள்விகள் முன்வைக்கபட்டன. இந்த பிரச்சாரங்களுக்கு இடையில் தான், கார்ப்பரேட் பள்ளிகள் பெரு நகரங்களில் முளைத்தன. பின்னர் சங்கிலித் தொடராக ஊரெங்கும் கிளைகளை பரப்பின.
அடுத்து எப்படி தங்களின் முதலீட்டை பெருக்குவது என்று யோசித்ததன் பலன் தான் கோச்சிங் கிளாஸ்கள். அனைத்து விதமான உயர் கல்விக்கும் நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகும் போது, பயிற்சி வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் உயர் கல்விக்குப் போகும் மாணவர்களின் விகிதம் வெறும் 27% தான். ஆனால், ஒரு லட்சம் தகுதியுள்ள மாணவர்களுக்கு இருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையோ வெறும் 31 தான். நிரப்பப்படாமல் இருக்கும் இந்த இடைவெளி தான் தனியார் முதலாளிகளின் இலக்கு.
தனியார் கல்வி முதலீட்டாளர்கள் இந்திய மாணவர்களுக்கு தரமான கல்வி தரும் நிறுவனங்களை புதிதாக திறந்து, கல்வி வியாபாரம் செய்து தங்களின் முதலீட்டை பெருக்க பொறுமை இல்லை. அவர்களின் லாப பசிக்கு தயாரிக்கப்பட்ட விருந்து தான் நுழைவுத் தேர்வுகள். நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக, பயிற்சி வகுப்புகள் நடத்தும் சாக்கில், மாணவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் பல லட்சங்களை கோச்சிங் சென்டர் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இந்தியாவில் இந்த கோச்சிங் சென்டர் சந்தையின் தற்போதைய மதிப்பு 58 ஆயிரம் கோடி ரூபாய். இது அடுத்த 5 ஆண்டுகளில் 1330 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்!
இந்த சந்தை விரிவாக்கம் நடக்கவே, ஒன்றிய அரசு மருத்துவ படிப்பில் சேர ஒன்று, மருத்துவம் படித்து முடித்த பின்பு ஒன்று, மத்திய பல்கலைக் கழகங்களில் சேர ஒன்று, பிற கல்வி நிறுவனங்களுக்கு ஒன்று என்று வரம்பு எதுவும் இல்லாமல் புதிது புதிதாக நுழைவுத் தேர்வுகளை அறிவிக்கிறது. சந்தை விரிவாக்கம் தான் நுழைவுத்தேர்வுகள் அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் முக்கிய நோக்கம். அரசு தன் பொறுப்புகளை சந்தை வசம் ஒப்படைப்பதை விட மிகவும் கொடூரமானது சந்தை விரிவாக்கத்துக்கு பாதை வகுத்துக்கொடுப்பது. மக்களை சுரண்ட, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு புதிய யுக்திகளை வகுத்துக்கொடுப்பது ஏற்க முடியாதது.
கல்வி அடிப்படை உரிமை. அதை விற்பனை பொருளாக மாற்றும் அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
Education should be accessible to all. It should be made affordable. India has to go a long way in literacy rate. such entrance exams only curtails the objective of right to education. The under-privileged, the oppressed and the poor will not be able to spend more in tuition / coaching centers. This disparity should go. The author of this article is congratulated for having brought such an important issue to public domain.
👌👌
எது எவ்வாறாயினும் சிறுபான்மை வெறுப்பு அரசியலுக்கு மக்கள் (மாக்கள்) ஆதரவு இருக்கும் வரை வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றும் இந்த தேச நலன் இல்லாத அரசு