மோடியின் அமெரிக்க பயணம்: வாஷிங்டன் சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?

நமது நிருபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜூன் மாத அமெரிக்கப் பயணமும், ஜனநாயகத்தின் காவலனாக தங்களைப் பெரிதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா, பலத்த எதிர்ப்புக்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி வைத்து அவருக்கு இரத்தினக் கம்பளம் விரித்ததும் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கிளம்பிய எதிர்ப்புகள்

மோடியின் வருகையின் போது, அமெரிக்காவில் ஏராளமான மோடி எதிர்ப்புப் பேரணிகள் மனித உரிமைக் குழுக்களால் நடத்தப்பட்டன. அமெரிக்க வாழ் குக்கி இன மக்கள், மணிப்பூர் வன்முறை, மோடியின் மௌனம், செயலின்மையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிளாசாவில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடியின் வருகையை, மனித உரிமை மீறல்களை கண்டித்தனர்.

75 அமெரிக்க கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் நிகழும் ஜனநாயக அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள், மத சகிப்புத்தன்மையின்மை, பத்திரிகை சுதந்திரப் பறிப்பு, இணைய முடக்கம் ஆகியவற்றை பற்றி கவலை தெரிவித்தனர். இது பற்றி பிரதமர் மோடியிடம் விவாதிக்க வேண்டும் என கோரினர்.

பெர்னி சாண்டர்ஸ், இல்ஹான் ஓமர், அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ- கோர்டெஸ் உட்பட பல முற்போக்கு உறுப்பினர்கள் அமெரிக்க காங்கிரஸில் மோடியின் உரையைப் புறக்கணித்தனர். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவில் மனித  உரிமை மீறல்கள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் மோசமடைந்துள்ள நிலை குறித்து விமர்சனங்களை எழுப்பினார்.

இந்த வருடம் பிரதமர் மோடிக்கு முன்பு அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் மற்றும் தென் கொரிய அதிபர்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன்-துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அரசு சார்பில் வரவேற்பு, விருந்து அளித்துள்ளனர். அப்பொழுது இப்படிப்பட்ட சர்ச்சைகள் எதுவும் கிளம்பவில்லை.

திருந்தி விட்டாரா?

குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி (விசா) மறுக்கப்பட்ட நபர் திருந்தி விட்டாரா? பிரதமராகி, இந்துத்துவா திட்டங்களை, மத, இன, மொழிச் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட வன்முறைகளை மேலும் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.

பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது. மாற்று அரசியல் திட்டங்கள், கருத்துக்கள் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க் கட்சிகள், குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சாதிகார நாடு என மோடியின் இந்தியா வகைப்படுத்தப் பட்டுள்ளது.

இருந்தும் மோடி ஏன் முக்கியத்துவம் பெறுகிறார்? எல்லா எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடிக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

பொருளாதாரக் காரணிகள்

அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பணவீக்கம், வட்டி உயர்வு கட்டுக்கடங்கவில்லை. வங்கிகள் திவாலாகி வருகின்றன. நிறுவனங்கள் பெருமளவில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. அரசாங்கக் கடன் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதன் உச்சவரம்பு உயர்த்தப் படவில்லை எனில் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்என்பதால் உயர்த்தப் பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக உற்பத்தியில் 25% பங்கு பெற்றுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். சீனாவின் பங்கு 20%. பட்டுச்சாலை வியாபாரம் அமெரிக்க வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இப்போது வளரும் நாடுகளுக்கு அமெரிக்காவை விட அதிக கடன் வழங்கும் நாடாக சீனா மாறி உள்ளது. ஆனாலும் உலக நிதிச் சந்தையில் சீனாவின் பங்கு சிறியது. இருந்தாலும் அமெரிக்கா, சீன

வளர்ச்சியை விரும்பவில்லை. எனவே, சீனப் பொருளாதார வளர்ச்சியை மட்டுப் படுத்த வேண்டும், தங்கள் வளர்ச்சியை நீடிக்கச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைந்துள்ளது. இதற்கு இந்தியா போன்ற நாடுகளைப் பயன்படுத்துகிறது.

சந்தைப் பொருளாதாரம் தானியங்கும் என்பது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தை பெரிதும் ஆட்டிப் படைப்பது பெரு மூலதனம் படைத்த இராணவ தொழில்துறைதான். இவர்களின் கொள்ளை லாபத்திற்காக அமெரிக்க அரசு கொள்கை முடிவுகள், போர்த் தந்திரங்கள் செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா போரைத் தூண்டி விட்டு அது முடிவுக்கு வராமல் பார்த்துக் கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. பிரான்ஸ், தென் கொரியா, இந்தியாவின் அதிபர் / தலைவர்களை வரவேற்று விருந்து அளித்தது இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரத்தான். இந்த நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து விடுத்த கூட்டு அறிக்கைகள் இதற்கு சாட்சி. அமெரிக்க இராணுவத் தொழில்துறைக்கு உதவத்தான் ICET என்ற பெயரில் இந்திய-அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் சென்ற வருடம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் பிரதமர் மோடியின் இந்த அரசு முறைப் பயணம்.

அமெரிக்க டாலர் தங்கம் வெள்ளி போல உலகத்தின் நிலை மதிப்புள்ள இருப்பு நாணயம் (Reserve Currency). இதன் மூலம் தான் அமெரிக்கா உலக ஏகாதிபத்தியமாக செயல்படுகிறது. டாலர் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு ஒரு வற்றாத தங்கச் சுரங்கம். இதைக் கொண்டு அதனால் அளவற்ற நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு நிதி உருவாக்க முடியும். ஆனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு ஈடாக தொழில்துறை முதலீடுகளை ஏற்றுமதி (deindustrialised export) செய்ய வேண்டும். சீனா பல ஆண்டுகளாக பல அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலையாக இயங்கி வந்தது.

அமெரிக்காவுக்கு சவால் அளிக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் சீனாவுக்கு, அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஆரம்பித்தது. எனவே சீனாவுக்கு பதிலாக இந்தியா போன்ற மலிவான உழைப்புச் சந்தைகளுக்கு தூண்டில் போடுகிறது.

இதே போல, செமி-கண்டக்டர் என்கிற குறைகடத்தி (Semi Conductor) உற்பத்திக்கு அமெரிக்க நிறுவனங்கள் தைவான்-சீனா-தென் கொரியா ஆகிய நாடுகளையே பிரதானமாக நம்பி உள்ளன. சீனாவுடனான பிணக்கம், தைவானில் இருக்கும் சிக்கல்களினால் மாற்று உபாயம் தேடுகிறது அமெரிக்கா. ஆனால் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்வதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. இந்தியா 2024 தேர்தலை சந்திக்கும் நிலையில் தொழில் நுட்ப பரிமாற்றம் இல்லாத உற்பத்திக்கு உத்தரவாதம் தேடுகிறது

அமெரிக்கா.

புவிசார் அரசியல்

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக செயல்பட, அமெரிக்காவை ஆதரிக்க பல நாடுகளுக்கு அமெரிக்கா வலை வீசி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இராணுவத் தளவாடங்களை, மலிவான கச்சா எண்ணெய் பெறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் சீனாவுக்கு எதிரான கூட்டமைப்பில் (QUAD) இந்தியா உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சனை உள்ளது. அதே சமயம் சீனாவுடன் அதிகபட்ச வியாபாரமும் செய்து வருகிறது இந்தியா. இந்த நிலையில் வெளிப்படையாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான நிலை எடுக்க இந்தியா தயாராக இல்லை.

ஆனாலும், இந்தியா தொடர்ந்து மாறும் தன்  நிலையில் மேலும் வளைந்து கொடுத்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறி உள்ளது. ஜிஇ-எஃப் 414 ஜெட் என்ஜின் உற்பத்தியைக் கூட்டாக செய்வது, அமெரிக்க இராணுவ தளவாடங்களை பராமரிக்க, பழுதுபார்க்க இந்திய கடற்படை, விமானப்படை தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது போன்று பல ராணுவ  ஒப்பந்தங்கள் மூலமாக இந்தியா, அமெரிக்காவின் பெரிய ராணுவக் கூட்டாளியாக மாறியிருக்கிறது.

அமெரிக்கா, தனது உலக மேலாதிக்கத்தை வலுப் படுத்துவதற்காகவும், சீனாவைத் தனிமைப் படுத்துவதற்காகவும், இந்தியாவைத் தன்னுடைய முக்கியமான ராணுவக் கூட்டாளியாகப் பார்க்கிறது.

மக்களுக்கு என்ன பலன்?

இந்தியா, அமெரிக்கா செய்து கொண்ட பல உடன்படிக்கைகள் 5-10ஆண்டுக்கு மேல் எடுக்கும் நீண்ட காலத் திட்டங்கள். இவற்றில் பேச்சுவார்த்தைகள் நடந்து தொழில் தொடங்கவே பல காலம் ஆகும் என நம்பப்படுகிறது. ஜெட் என்ஜின் கூட்டாகத் தயாரிப்பதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கப் போகிறதா? தொழில் நுட்ப பரிமாற்றம் இல்லாத (பாக்கேஜிங் போன்ற) உற்பத்தியால் பொருளாதாரப் பலன் அதிகரிக்குமா? மொத்தத்தில் 2024 பொதுத் தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு நடத்திய நாடகமோ இது என்ற சந்தேகம் எழுகிறது. இது நம் நாட்டிற்கு நல்லதல்ல.

2 comments

  1. The editorial brings to the fore the political and policy decisions that may go against the interests of the people of our country. Such deals should become a topic for discussions amongst people.

Comment here...