கல்விக் கண்ணுக்கு காவிக் கண்ணாடி

ஜேப்பி

ஒன்றிய பாஜக அரசின் “தேசிய கல்விக் கொள்கை 2020” கல்வியை எட்டாக்கனியாக்கும் ஒரு திட்டம், மாநில உரிமைகளில் தலையிடும் திட்டம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதை அறிவோம். பாஜக ஆளும் பல மாநில அரசுகள் பள்ளிப் பாடங்களில் சர்ச்சைக்குரிய பல திருத்தங்கள் செய்ததையும் பார்த்தோம். தொடர்ந்து 30 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலும் பள்ளிப் பாடங்களில் சர்ச்சைக்குரிய பல திருத்தங்களை செய்துள்ளது. கல்விக் கொள்கையில், பாடத்திட்டங்களில் இந்தத் தாக்குதல்கள் ஏன் நடத்தப்படுகின்றன? அலசிப் பார்ப்போம்.

கல்வியின் தேவை :

“ மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா”என்ற பழமொழி உணர்த்துவது என்ன? உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது அறிவு. வாழ்வாதாரமான இந்த அறிவு, மரபணு மூலமாகவோ (உடலியக்கம்) நடைமுறை போதனைகளாலோ (பட்டறிவு) அடுத்து வரும் பரம்பரைகளுக்கு கடத்தப்படும்.

ஆனால் மனிதக் குழந்தைகள் மற்ற உயிரினங்கள் போல் இல்லை, பிறந்த கணம் முதல் பல ஆண்டுகள் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும். உடல் வளர்க்கும் உணவும், அறிவு-திறமை-பகுத்தறியும் பண்பு வழங்கும் ‘கல்வியும்’ பிறர் பொறுப்பில் உள்ளன.

உழைப்பும், வாழ்வும் முற்றிலும் சமூகமயமாகி உள்ள மனித சமூகத்தில் ‘கல்வி’ ஒரு உரிமையாக, சமூக நிறுவனமாக, பொது விவகாரமாக ஆகிவிட்டது. எத்தகைய கல்வி, யாருக்கு, எப்பொழுது, எப்படி வழங்க வேண்டும் என அரசுகள் கல்விக் கொள்கை வகுத்து செயலாற்ற வேண்டி உள்ளன.

‘கல்வி’ என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச் சொல் ‘கல்’ அதாவது ‘ ஆய்வு செய் ‘எனப் பொருள்படும். கல்வி என்பது பகுத்தறிந்து ஆய்வு செய்யும் மனிதப் பண்பை வளர்ப்பதாக இருக்க வேண்டும். ஒரு சமூகம் சிறக்க பகுத்தறியும் திறனும், சமூக நல்லிணக்க உறவுகளைப் பேணும் பண்பும் கொண்ட தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். எனவே, மற்ற கொள்கைகளுடன் கூட கல்விக் கொள்கையும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுக்கின்றனர். நாய், குதிரை போன்ற விலங்குகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்கள் அந்த விலங்குக்கு என்ன அறிவு, திறமை, பண்பு, பயிற்சி தேவை என முடிவு எடுப்பதைப் போல கல்விக் கொள்கைகளும் அந்தந்த சமூகங்களின் நடைமுறை விழுமியங்களுக்கு ஏற்ப மாறிக் கொண்டு வருவது வரலாறு.

ஆங்கிலேயரின் கொள்கை

இந்தியா அடிமைப்பட்டு இருந்த பொழுது, ஆங்கில ஆட்சியாளர்கள் தங்கள் நிர்வாகத்தை நடத்திச் செல்லத் தேவைப்படும் இடைநிலை,  உயர்நிலை அதிகாரிகளை இங்கிருந்து உருவாக்குவதற்கான கல்வியை மட்டுமே வழங்கினார்கள். ஐரோப்பிய பேரின வாதத்தை எதிர்க்காமல் அதற்கு இணங்கி நடந்து, நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயர்களைப் பின்பற்றும் ஆங்கிலம் அறிந்த இந்தியத் தலைமுறைகளை உருவாக்குவதுதான் மெக்காலே கல்வித் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

சுதந்திர இந்தியாவின் கொள்கை

ஆட்சி கை மாறிய பின் அரசு நடத்தத் தேவைப்பட்ட அதிகாரிகள், குமாஸ்தாக்கள், உழைப்பாளர்களை உருவாக்குவது தான் விடுதலைக்கு பிந்தைய சுதந்திர இந்தியாவின் கல்வி கொள்கையின் பிரதான நோக்கமாக இருந்தது. பெண் கல்வி, பொதுக் கல்விக்கான போராட்டங்களின் வீச்சில் பெண்கள் உட்பட பலருக்கும் பரவலாகக் கல்வி கொண்டு செல்லப்பட்டது. பழமைவாத, சாதி சமூகக் கொடுமைகளால்  மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்பு திறந்து விடப்பட்டது.  ஆரம்பத்தில் பள்ளிக்கல்வியிலும் பிறகு தொழிற்கல்வியிலும் கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் சுயசார்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டு ஆய்வுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

நவதாராளமயக் கல்வி

1990 முதல் கடைப்பிடிக்கப்பட்ட நவதாராளமயமும், உலக மயமும் இந்தியக் கல்வியை முற்றிலும் சந்தைப்படுத்தின. கல்விச் செலவுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன.

லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. சுயநிதிக் கல்லூரிகள், தன்னாட்சி பல்கலைக் கழகங்கள் என தனியார் கொடி பறக்கிறது. இது சமூக அக்கறை கொண்ட அறிவு ஜீவிகள் உருவாவதை முடக்கி, உழைத்து மட்டுமே போடும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் வேலையை மட்டும் செய்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என பல உலக நாடுகளுக்கு உடல் மற்றும் மூளை உழைப்புச் சக்தி வழங்கும் ஒரு தொழிற்பயிற்சிக் கூடமாக இந்தியா மாறியது. இதனால் பொதுவாகக் கற்பித்தலின் தரம் தாழ்ந்து போனது, கல்வி விலை உயர்ந்த கடைச் சரக்கானது.

அவ்வப்போது ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் கல்வித்துறையில் உடனுக்குடன் பிரதிபலித்தன. உதாரணமாக விமானப் போக்குவரத்து துறையின் கதவுகள் தனியாருக்கு திறக்கப்பட்டவுடன், நாடெங்கிலும் விமானப் பணிப்பெண் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போலக் கிளம்பின. வேண்டிய லாபம் பார்த்தவுடன் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டன. கொரோனா பேரழிவுக் காலத்தில் மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்ட சமயத்தில் பல ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் உடனே முளைத்து கல்லா கட்டின. தற்போது மருத்துவம், பொறியியல் போன்ற உயர் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதற்கு மாணவர்களைத் தயார் செய்யும் பயிற்சி நிறுவனங்கள் நாடெங்கும் முளைத்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.

‘ விஸ்வ குரு’இந்தியா?

2014ல் ஒன்றிய அரசுக் கட்டிலில் பாஜக அமர்ந்த பின் கல்வி கடைச் சரக்காக்குவது தீவிரமடைந்தது மட்டுமல்லாமல், வேதங்கள்,  உபநிடதங்களின் (இல்லாத) பெருமைகள் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன. பரத்வாஜ முனி விமானங்களை பறக்கும் போது மறைக்கச் செய்யும் ஒரு கெமிக்கல் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தார், மகாபாரதக் கௌரவர்களின் (100 பேர்) பிறப்பு மனிதக் குளோனிங் இந்தியாவில் இருந்ததற்கு சான்று, வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் பட்டது, பசு மூத்திரம் புற்று நோயைக் குணப்படுத்தும் என்பதை ரிஷிகள் கண்டறிந்தனர் என கற்பனைப் புனைவுகளும் புராணங்களும் அறிவியல் உண்மைகளாக, நிகழ்வுகளாக ஜோடிக்கப்பட்டன. இப்படிப் ‘ பெருமை வாய்ந்த’ வேத நாகரிகம் கொண்ட இந்தியாவை ‘ உலக ஆசிரியனாக ‘ (விஸ்வ குரு) மாற்ற வேண்டும், இதை பாஜக 25 ஆண்டுகளில் (100வது சுதந்திர நிறைவில்) செய்து முடிக்கும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

ஒருபுறம் இந்தியா இப்படி  பழம் பெருமை பேசித் திரியும் கால கட்டத்தில் (2018-2020), நமக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த சீனா அறிவியல் ஆய்வுகளில், அதிகமாக மேற்கோள் காட்டப்படும் தாக்கம் நிறைந்த ஆராய்ச்சி வெளியீடுகளில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஆண்டு தோறும் சராசரியாக 4 லட்சம் அறிவியல் கட்டுரைகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்காவின் எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே. இந்த விவரங்களை 2022 ஆகஸ்டில் ஒரு ஜப்பானிய நிறுவனம் வெளியிட்டது.

சர்வம் காவி மயம்

மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதற்கு தோதாக கல்விக் கொள்கை வகுப்பதில், பாடத்திட்டங்களைத் திருத்துவதில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மதச்சார்பற்ற இந்தியாவை சகிப்புத்தன்மையற்ற இந்து ராஷ்ட்ராவாக மாற்ற முயற்சிக்கிறது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அரசியல் அறிவியல் பாடங்களில் திருத்தங்கள் பல செய்தது.  குஜராத் கலவரங்கள், ஜனநாயகமும் பன்மைத்துவமும், மக்கள் போராட்ட இயக்கங்கள், ஜனநாயகத்தின் சவால்கள், தேசத் துரோகம், முகலாயர் வரலாறு என பலவற்றை பாடத்தில் இருந்து நீக்கியது NCERT.

எங்களின் பின்னால் ஒளியாதே

NCERTபாடப்புத்தகங்கள் பல உண்மைகளை, விழுமியங்களை பள்ளி மாணவர்களுக்கு விளக்குவதற்காக எழுதப்பட்டவை.  பல மாதங்களாக பல வேறுபட்ட கோணங்களில் அணுகுபவர்கள், மாறுபட்ட கருத்தியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து கூட்டாக ஆலோசித்து ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தப் பாடங்கள், பாடத்திட்டம் வகுத்த பிரதான ஆலோசகர்களையோ, மற்ற கல்வித் துறை நிபுணர்களையோ கலந்து ஆலோசிக்காமல் வெளிப்படைத் தன்மை அற்ற முறையில் திருத்தப்பட்டு உள்ளன.

தன் இஷ்டத்திற்கு ஏகப்பட்ட பாடங்களை மாற்றி அமைத்து விட்டு எங்கள் பெயர்கள் அவற்றில் உபயோகிக்கப் படுவதை நாங்கள் விரும்பவில்லை, எனவே எங்கள் பெயர்களை NCERT புத்தகங்களில் இருந்து நீக்கி விடுங்கள் என மூத்த கல்வி ஆலோசகர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பால்ஷிகர் மற்றும் 33 அரசியல் சமூக விஞ்ஞானிகள் NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

இக்கடிதம் பாஜக அரசின் பொய் உரைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது.

மக்களால் முறியடிக்க முடியும்

NCERT கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு எதிரான நிபுணர்களின் எதிர்ப்புக் குரல் மக்களுக்கான குரலே. இது நாடெங்கும் பரவலாக ஒலிக்கட்டும். ஜனநாயக தேர்தல் முறையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்கள் நலனைப் புறந்தள்ளி கல்விக் கண்ணுக்கு காவிக் கண்ணாடி அணிவிப்பதை மக்கள்

இயக்கங்களால் முறியடிக்க முடியும்.

One comment

  1. கல்வியில் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவது பின்வரும் தலைமுறையை தங்கள் காவி மயத்திற்கு பயன்படுத்துவதற்கு தான். இளைஞர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும், தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராக களம் காண வேண்டும். இந்த பிரச்சனையை பொதுத்தளத்தில் கொண்டு வந்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Comment here...