மஹாராஷ்டிராவில் அரங்கேறும் ஜனநாயகக் கேலிக்கூத்து

ஜேப்பி
இந்தியா ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த பொழுதில் இருந்தே அதிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மும்பை இருந்தது.  மும்பையில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஒத்துழையாமை, சத்தியாகிரகம், சுதேசி, ஹோம்ரூல், கதராடை, கிலாஃபத், வெள்ளையனே வெளியேறு என பல இயக்கங்கள் இங்கு தான் துவக்கப்பட்டன.


ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்தை உண்மையில் துரிதப்படுத்திய “இந்திய கப்பற்படை எழுச்சி”யும் “மும்பை-கொலாபா”வில்தான் துவங்கியது. எனவே, பல நூற்றாண்டுகளாக இந்திய அரசியலில் முக்கிய, பெரிய பங்கு வகிக்கும் ஒரு மாநிலம் மஹாராஷ்டிரம் எனக் கூறலாம்.


மஹாராஷ்டிரா, பரப்பளவுப்படி (308 ஆயிரம் ச.கிமீ) இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம். மக்கள்தொகை (11.24 கோடி) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை (48) அடிப்படையில் இரண்டாவது பெரிய மாநிலம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ளது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மாநிலம் பாஜகவினால் தற்பொழுது ஜனநாயகக் கேலிக்கூத்து நடக்கும் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.கூடாரம் மாறும் கும்பல்கள்


மூன்றரை ஆண்டுகள் முன்பு, மஹாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (NCP) சேர்ந்தவரும் சரத் பவாரின் உறவினருமான அஜீத் பவார், NCP கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.


அவசரமாக, காதும்-காதும் வைத்த மாதிரி, பெரும்பான்மை இல்லாவிட்டாலும், பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் முதல்வராகவும், அஜீத் பவார் துணை முதல்வராகவும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். ஆனால் NCP கட்சியை அஜீத் பவாரால் உடைக்க முடியவில்லை. பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் 80 மணி நேரத்தில் தேவேந்திர பட்னாவீஸ், அஜீத் பவார் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர்.


பின்னர் சிவ சேனா, காங்கிரஸ், NCP கட்சிகள் இணைந்து “மஹாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” (MVA) ஆட்சி அமைத்தனர். அஜீத் பவார் மீண்டும் NCPயில் இணைந்தார். துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார்.


30, ஜூன் 2022 அன்று, சிவசேனாவை உடைத்து MVA ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஷிண்டே முதல்வராக, பட்னாவீஸ் துணை முதல்வராக, அஜீத் பவார் எதிர்க்கட்சி தலைவராக மாறினார்கள்.


ஜூலை 2, 2023 அன்று, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அஜீத் பவார், ஆளும் கூட்டணியில் இணைந்து,  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசின் கூடுதல் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.


பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்பது 5வது முறை. இவருடன் சேர்ந்து NCP கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால், திலீப் வால்சே பாடீல், ஹஸன் முஷ்ரிப், தனஞ்சய் முண்டே, அதிதி தட்கரே, தர்மாராவ் அத்ரம், அனில் பாடீல், சஞ்சய் பன்சோடே ஆகிய எட்டு பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர்.ஊழல் பெருச்சாளிகள்


NCP கட்சியைச் சேர்ந்த இந்த 9 பேரில், 5 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அமலாக்கத்துறை இவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு வாரம் முன்பு தான் போபாலில் ஒரு கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ”NCP கட்சி ஒரு ஊழல் கட்சி, 70000 கோடி ஊழலில் ஈடுபட்டு உள்ளார்கள், அஜீத் பவார் நீர்ப்பாசனத் திட்ட ஊழல் செய்துள்ளார்” எனக் குற்றஞ்சாட்டினார்.   ஊழலுக்கு எதிராக சூளுரைக்கும் பாஜக ஒரே வாரத்திற்குள் தலை கீழாக மாறி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள அனைவரையும் மந்திரிகளாக மாற்றி உள்ளது.குடும்ப அரசியல்


அதே கூட்டத்தில் பேசிய மோடி, பாஜகவைத் தவிர மற்ற எல்லாக் கட்சியினரும் குடும்ப அரசியல் செய்கின்றனர் எனக் கூறினார். (பாஜகவின் பல தலைவர்களும் குடும்ப அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்) ஆனாலும் வெட்கம் எதுவும் இன்றி குடும்ப அரசியல் செய்யும் அதே கட்சிகளை, தலைவர்களை பாஜக ஆதரிக்கிறது, பதவியில் அமர்த்துகிறது.பாஜகவின் வஞ்சக வியூகங்கள்


மஹாராஷ்டிரா அரசைக் கைப்பற்றி பதவியில் அமர, ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவ சேனா கட்சியை உடைத்தது பாஜக.  சிவ சேனா கட்சியின் 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்புக்கு சிவசேனா வைத்துள்ள கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி பதவி பறிக்கப்பட்டால், பாஜக மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.


இதனால், தற்போது அஜீத் பவார் மூலம் NCP கட்சியை உடைக்க முயன்று கொண்டிருக்கிறது பாஜக. தங்களுக்கு 40 NCP சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அஜீத் பவார் தரப்பு கூறி வருகிறது. NCP கட்சி இந்த 9 பேரைக் கட்சியில் இருந்து விலக்கி, சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனுக்கும் சபாநாயகருக்கும் கடிதம் எழுதி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே விவகாரத்தில் செயலற்று இருக்கும் சபாநாயகர், NCP அஜீத் பவார் விஷயத்திலும் அதே தந்திரத்தை கடைப்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.ஜனநாயகக் கேலிக்கூத்து


கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாற்றுக் கட்சி மன்ற உறுப்பினர்கள் மீது குடும்ப அரசியல், பணச்சலவை, ஊழல் என குற்றம் சாட்டுகிறது பாஜக.  வருமானவரி,  அமலாக்கத்துறை, சிபிஐ என ஒன்றிய ஏஜென்சிகளை வைத்து அவர்களை மிரட்டுகிறது. ஆளுநர்கள், சபாநாயகர்கள், அதிகாரிகள் உதவியுடன் குதிரை பேரம் நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்கள் விருப்பத்திற்கு மாறான பாஜகவின் இந்த சுயநல வஞ்சக வேலைகள் அரங்கேறி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அடிப்படையில் கட்சித் தாவல் என்பது மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம். பாஜக வின் மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்தாளும் கொள்கைக் கெதிராக நின்று ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பின், சுய நலம் காரணமாக அதே பாஜகவிடம் சரணடைவது நம்பிக்கை துரோகமில்லையா? இதனை தொடர்ந்து அரங்கேற்றும் கட்சிகள் மீது மக்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கும்? “யார் வெற்றி பெற்றாலும், அவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடிப்போம்” என்று பட்டவர்த்தனமாக களத்தில் இறங்கும் பாஜக கட்சியை என்னவென்பது? அந்த கட்சிக்கு ஏதாவது குறைந்த பட்ச விழுமியங்களாவது உள்ளனவா?


குடும்ப அரசியல், ஊழல் என்று பரப்புரை செய்யும் பாஜக,  குற்றம் சாட்டப்பட்ட அதே நபர்கள், கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நகர்வு. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும், எந்த விழுமியங்களும் இல்லாமல் பாஜகவின் இத்தகைய இழிவான வியூகங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

One comment

Comment here...