வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தான் எந்த நெருடலுமின்றி ”பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்துத்துவர்கள் இதுவரையிலும் கூறிய இவ்வாறான பேச்சுக்களுக்கு எழுந்த எதிர்ப்புகளை போலவே இதற்கும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வரிசை கட்டின. ஆயினும் பிற தலைவர்கள், ஆளுமைகளைப் போல வள்ளலாரைப் பற்றி தமிழ்ச் சமூகம் பொதுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் இதுவரையில் பெரிதாக விவாதித்ததில்லை என்ற நம் வரலாற்றுத் தவறின் மேல் விழுந்த குட்டாகத் தான் இதை பார்க்க வேண்டியுள்ளது. அதை சரி செய்யும் விதமாக ஆளுநர் ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி வள்ளலாரின் சனாதன எதிர்ப்பு மற்றும் சமத்துவ சிந்தனைகளைப் பற்றி பொதுத் தளத்தில் விவாதங்களை தொடங்குவதே சரியான தீர்வாகும்.
அம்பேத்கரைப் போல சனாதனத்தை நேருக்கு நேர் நின்று நிர்மூலமாக்கிய கலகக்காரர்களையே விழுங்கத் துடிக்கும் இந்துத்துவம்., சமத்துவம், முற்போக்கு பேசிய வள்ளலாரை ஆன்மிகம் என்ற ஒற்றை புள்ளி இணைப்பதால் அவரை விழுங்க துடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் வள்ளலாரின் ஆன்மிகத்திற்கும், இன்றைக்கு இந்தியாவை ஆளும் இந்துத்துவத்தின் ஆன்மிகத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் உரக்கப் பேசப்பட வேண்டியது அதி முக்கியமானதாகும்.
பசித்த வயிருடன் வறுமையில் வாடிய மனிதர்களைக் கண்டு துடிதுடித்து ‘சத்திய தரும சாலை’ அமைத்து சாதி, சமய பேதமற்று உணவு வேண்டி வந்த அனைவருக்கும் தினமும் மூன்று வேளை உணவளித்த வள்ளலாரின் ஆன்மிகம் எங்கே?! இன்ன உணவையே உண்ண வேண்டும் என்றும், பிற உணவுகளை உண்ணும் மனிதர்கள் மீது சாதி, மத பாகுபாடுகளை திணித்து வன்முறைக்கு உள்ளாக்கும் இந்துத்துவத்தின் ஆன்மிகம் எங்கே?! 1865ல் வள்ளலார் தொடங்கிய தரும சாலை இன்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் தினமும் ஆயிரம் நபர்களுக்கு மேல் உணவிட்டுக் கொண்டிருக்கிறது!
அனைத்து உயிர்களிடத்திலும் கருணை, அன்பு செலுத்த வேண்டும் என்று ஜீவகாருண்யம் போதித்த வள்ளலாரின் ஆன்மிகம் எங்கே.?! ஆட்சி பீடத்திற்காக நாடெங்கிலும் இன, மத மோதல்களாலும், பெரும்பான்மைவாதத்தின் கூட்டு வன்கொடுமைகளாலும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொள்ளும் இந்துத்துவத்தின் ஆன்மிகம் எங்கே?!
‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று உரக்கக் கூறியவர் எப்படி மதத்தைக் கொண்டு பேய் பிடித்தவர்கள் போல் மனிதர்களைக் கொல்பவர்களுக்கு உட்ச நட்சத்திரமாக முடியும்? ‘கண்மூடி வழக்கமெல்லம் மண்மூடி போக’ என்று மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சாட்டை சுழற்றியவர் எப்படி கை தட்டி கொரோனாவை விரட்டியவர்களுக்கும், உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை பிள்ளையருக்கு செய்யப்பட்டது என்று பரப்பும் கூட்டத்திற்கும் ஆசானாக முடியும்?
‘சாதி, சமய சடங்கை விட்டேன். அருட்ஜோதியைக் கண்டேன்’ என்றும் ‘சாதியும், மதமும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி’ என்று சாதிய ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக சாடியவர் எப்படி வருணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் சனாதனத்தின் உட்ச நட்சத்திரம் ஆவார்?
சைவ, வைணவ சமயங்களில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக சாடிய வள்ளலார் சாதி பேதங்களற்ற ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்ற மார்க்கத்தையும் ‘சத்திய ஞான தர்ம சபை’யையும் தோற்றுவிக்கிறார். தன் தர்ம சபைக்கு வருவோர் சாதி, சமய வேறுபாடுகளைத் துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட வள்ளலாரும்., தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவையும், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் விதிகளையும் காலம் காலமாய் எதிர்க்கும் சனாதனிகளும் எவ்வாறு ஒன்றாக முடியும்?
‘சமஸ்கிருதமே தேவ பாஷை, தமிழ் நீஷ பாஷை’ என்ற சனாதனத்தின் குரலும்., ‘சமஸ்கிருதம் தாய் மொழி என்றால், தமிழ் தந்தை மொழி’ என்று சங்கராச்சாரியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வள்ளலாரின் போர்க்குரலும் நேரெதிரல்லவா?
அனைவருக்கும் கல்வி அவசியம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்று அன்றே கூறிய வள்ளலாரின் முற்போக்கு சிந்தனையும் ‘பெண்கள் கல்வி கற்பதால், பொருளீட்டுவதால் தான் விவாகரத்துகள் நிகழ்கின்றன’ என்று இன்றும் பெண்ணடிமைத்தனம் பேசும் இந்துத்துவத்தின் சிந்தனையும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரை., சாதி, மதத்தின் பெயரால் பல மனித உயிர்களை வாட்டி வதைக்கும் இன்றைய சனாதன காவலர்களின் உட்ச நட்சத்திரம் என்று நீங்கள் முழங்கினால் நீங்கள் வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் வாடி வதங்கித்தான் போகிறார் வள்ளலார்!
சே இம்ரான்.
Excellent enlightening article
Beautifully portrayed the contradictory thoughts between samathuvam and sanathanam. Liked the last stanza
அருமையான விபரங்கள்!ஆணித்தரமான, அவசியமான வாதங்கள்.. சபாஷ்!
Sooo thoughtful and informative.. good flow in content.. excellent finishing touch..,👏👏🤝
👍🏼👍🏼
Educative, வள்ளலாரை, தமிழ்நாடு சரியாக கொண்டாடவில்லை என்பதை பயன்படுத்தி சனாதனம் விழுங்கத் துடிப்பதை சுட்டியவிதம் சூப்பர்.