சாதீய கொடுமைகளைக் களைந்திடுவோம்

ஜேப்பி

2023, ஜூலை 4ஆம் தேதி இரவு சமூக ஊடகங்களில் ஒரு அருவருப்பான காணொலி தீன் தயாள் சாஹூ என்பவரால் ஆதர்ஷ் என்ற நபருக்கு அனுப்பப்பட்டது. ஆதர்ஷ் மூலம் அது பலருக்கும் பரப்பப்பட்டு வைரல் ஆனது.


மத்தியப் பிரதேசம் சீதி மாவட்டத்தில் குப்ரி என்ற கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் பக்கத்தில் உள்ள தீன் தயாள் சாஹூவின் கடைக்கு கோல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) மொபைல் ரீசார்ஜ் செய்ய வந்துள்ளார். சாஹூவின் கடைப்படிகளில் அமர்ந்து இருக்கிறார். அப்பொழுது பாஜக சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்ற நபர் அப்பக்கம் வந்துள்ளார். (இவர் ஒரு அடாவடிப் பேர்வழியாம்) அங்கே வந்தவர், கடையின் படிக்கட்டில் அமர்ந்து இருந்த தொழிலாளி  மீது சாவகாசமாக, புகை பிடித்துக் கொண்டே சிறுநீர் கழிக்க ஆரம்பித்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர் (Victim) தடுத்தும் சிறுநீர் கழிப்பதை பிரவேஷ் சுக்லா நிறுத்தவில்லை. தீன் தயாள் சாஹூ இதை தனது கைப்பேசியில் படம்பிடித்து இருக்கிறார். உடனே தடுத்தும் இருக்கிறார். ஆனால் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மீது சிறுநீர் கழிப்பதை பிரவேஷ் சுக்லா நிறுத்தவில்லை.


கோபத்தைக் கிளறிய காணொலி


இந்தக் காணொலியைப் பார்த்த பொது மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள் எனப் பலரும் அந்த வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டித்தனர், குற்றவாளி பிரவேஷ் சுக்லா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


மூடி மறைக்க முயற்சி


இன்னொரு மனிதன் மீது காட்டுமிராண்டித்தனமாக சிறுநீர் கழிக்கும் தனது வீடியோ வைரல் ஆனதும் குற்றவாளி பிரவேஷ் சுக்லா தலைமறைவாகிவிட்டார். குற்றவாளியைப் பாதுகாக்க, அவமானத்துக்கு உள்ளான நபரை காவல்துறை மிரட்டி இருக்கிறது.   இம்மாதிரி சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனக் கூறவும், இது ஒரு போலி வீடியோ என்று கூறவும் பாதிக்கப்பட்ட நபரை (victim) வற்புறுத்தி இருக்கின்றனர். அப்படியே எழுதியும் வாங்கி இருக்கின்றனர்.


ஆனால் victim-இன் உறவினர்களும், மனைவியும் சம்பவம் நடந்தது உண்மை தான், வீடியோவில் காணப்படும் நபர் அவர்தான், என வலியுறுத்தவே, விஷயத்தை மூடி மறைக்க முடியாமல் நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்க பட்டனர். மத்தியப் பிரதேச முதன்மந்திரி இது ஒரு மனிதாபிமானமற்ற செயல், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இதன் பின்னர் பிரவேஷ் சுக்லாவின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். முதன்மந்திரி பாதிக்கப்பட்ட நபரை அழைத்து மன்னிப்பு கேட்டு கால்களை கழுவி இருக்கிறார்.


சமூகக் கொடுமை


இந்திய அரசியல் சட்டம் சாதி, மத, இன, மொழி பேதமற்று இந்தியர் அனைவரும் சமம் என்கிறது. ஆனால் நடப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமக்கள் சம உரிமை கோர முடியாது என்பதே எழுதப்படாத விதி. இன்றும் பல கோவில்களுக்குள் அவர்களால் நுழைய முடியாது, மீசை வைத்தால் குற்றம், குதிரை சவாரி செய்தால் குற்றம், கூட்டம் கூடி விழா எடுத்தால் குற்றம், மாட்டுத் தோல் அறுத்தால் குற்றம், காதலித்தால் குற்றம், வாடகை கொடுத்து தங்குவதற்கு, வாங்குவதற்கு வீடு கிடைக்காது. மொத்தத்தில் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்ற “உயர்சாதி விருப்பத்தை” ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைச் “சேரிகளில்” குடி வைத்து இருப்பதன் மூலம் நிறைவேற்றி வருகிறது இந்திய சமூகம்.


எவ்வளவுதான் தடுப்புச் சட்டம் போட்டு தடுக்க நினைத்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய சாதீய பாகுபாடுகள் அமெரிக்காவுக்குக் கூட ஏற்றுமதி ஆகி, அங்கும் சட்டம் போட்டு தடுக்க வேண்டிய அவலத்தைப் பார்க்கிறோம்.

குப்ரி கிராமத்தில் நடந்த இந்த சமூகக் கொடுமையை ‘உயர்சாதி’ வகுப்பினர் சிலர் “சிறுநீர் கழித்ததில் என்ன தவறு?” என நியாயப்படுத்தி இருக்கிறார்கள். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இடிக்கப்பட்ட பிரவேஷ் சுக்லாவின் வீட்டை திரும்பக் கட்டித்தர நிதி திரட்டுவதன் மூலம் சுக்லாதான் பாதிக்கப்பட்ட நபர் என்பது போல திரித்துக் காட்ட முயல்கின்றனர்.

மேற்கொண்டு இது போல சாதியக் கொடுமைகள் நடக்காது என உத்திரவாதம் வழங்க வேண்டிய அரசு, இது ஏதோ ஒரு முறை நடந்த அசம்பாவிதம் போல, சிறுநீர் கழித்த பாவத்திற்கு, மன்னிப்பு கேட்டும், கால்களைக் கழுவியும் பிராயச்சித்தம் தேடுவதாகக் காட்டிக் கொள்கிறது.

மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக அரசுகள் பதவிக்கு வந்தபின் குற்றவாளிகளைத் தப்ப விடுவது, குற்றங்களை மூடி மறைப்பது, பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றவாளி ஆக்குவது என ஒடுக்குமுறைகள் அதிகரித்தே வருகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர் தோலுரித்த மநுவாதிகள் இன்று மறைவிலிருந்து வெளியே வந்து விட்டனர். பாசாங்கில்லாமல் வெறித் தாண்டவம் ஆடுகின்றனர்.


அறச் சீற்றம் வேண்டும்


சாதியம் என்பது நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம். நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ சாதியக் கோட்பாடுகளை தூக்கி எறியாமல், அதன் வன்கொடுமைகளைத் தடுக்காமல், அரசியல் சாசனம் வகுத்துள்ள சமத்துவத்தை பேதமின்றி வழங்க முடியாது. காலம் காலமாகத் தொடரும் அரசியல் சாசனத்திற்கு முரணான சாதியக் கொடுமைகளை அடியோடு களைந்தெறிய இந்திய சிவில் சமூகம் ஆவேச அறச் சீற்றம் கொள்ள வேண்டும். தகுந்த, வலுவான தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கொடுமைகளை நடவாமல் தடுத்திட, களைந்தெறிய அரசுகளை சிவில் சமூகம் நிர்ப்பந்திக்க வேண்டும். அரசியல் சாசனம் வழங்கும் சமத்துவத்தை நடை முறையில் அமல்படுத்த வேண்டும்.

One comment

  1. மனிதனுக்கு எதிராக மற்றொரு மனிதனால் இழக்கப்படும் கொடுமை. அநீதி இழைக்கப்பட்டவன் பழங்குடி இனத்தவர் என்பதும் இழைத்தவன் ஆளும் பாஜக வின் நபர் என்பதும் ஒருபுறம் வேதனையையும் மறுபுறம் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. ஆளும் வர்க்கத்திற்கு இது அழகல்ல. குற்றம் புரிந்தவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இம்மாதிரியான மனித சமூகத்திற்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை தங்களது இதழில் கொண்டு வந்ததற்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Comment here...