நமது நிருபர்
1921 ஜூலை 15 அன்று கோவில்பட்டியில் பிறந்த புரட்சியாளர் தோழர் என். சங்கரய்யா, இன்று (15-07-2023) தனது 102 வயதில் அடியெடுத்து வைக்கிறார். எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகிய நற்குணங்களால் சகலரையும் வசீகரித்த நாயகன். இவரது வாழ்வு ஒரு திறந்த பாடப் புத்தகம். ஜனநாயகத்துக்காக, சமத்துவத்துக்காக, மதச் சார்பின்மைக்காக, மக்கள் நலனுக்காக, உழைப்பவர் உரிமை காக்க போராடும் அனைவருக்கும் இவர் ஒரு சிறந்த வழிகாட்டி.
தேனீ தோற்றுவிடும்
இவருடைய போராட்ட புரட்சிகர வாழ்வின் ஒவ்வொரு நாளும் நொடியும் துடிதுடிப்பு மிக்கது. கூட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி, மறியல், போராட்டம், மேடைப் பேச்சு, சட்டமன்ற பேச்சு, வாசிப்பு, எழுத்து, பத்திரிகை எழுத்து, அமைப்பு கட்டுதல், சங்கச் செயல்பாடு, கட்சிச் செயல்பாடு, தலைமை மற்றும் தோழமை வழிகாட்டல், பயணம், சிறைத் தண்டனை, சதி வழக்கு, தலை மறைவு வாழ்க்கை ஆகியவற்றால் நிறைந்தவை. ஒரு தலை சிறந்த போராளி, தியாகி, அமைப்பாளர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆசான், தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை என். சங்கரய்யா.
தியாகச் சுடர்
அவர் பிறந்தது கொஞ்சம் வசதியான ஒரு நடுத்தரக் குடும்பம். ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் சொந்த வசதி, வாய்ப்பு, பட்டம், பதவி என்பது பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சுயநல மறுப்போடு இந்திய சுதந்திரத்திற்காக, தமிழர்களின் சுய மரியாதைக்காக, சமூக சீர்திருத்தங்களுக்காக, தமிழ் மொழியின் பாதுகாப்புக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் உரிமைக்காக, தீண்டாமை ஒழிப்புக்காக, மாணவர்களின் நலனுக்காக, விவசாயிகளின் உயர்வுக்காக, சுரண்டப்படும் தொழிலாளர்களின் விடுதலைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, போராடி, பொது வாழ்க்கை வாழும் புரட்சி வீரர் தோழர் சங்கரய்யா. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மொத்தம் 8 வருடங்கள் சிறையிலும் (மதுரை, வேலூர், கண்ணனூர், தஞ்சாவூர் என பல சிறைச்சாலைகள் கண்டவர்), 3 வருடம் தலைமறைவு வாழ்விலும் அல்லலுற்ற தியாகச் செம்மல்.
சமரசமற்ற போராளி
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் பொழுது விடுதலை வேட்கையுடன் செயல்பட ஆரம்பித்தவர், சென்னை மாகாணப் பிரதமர் ராஜாஜியால் ஹிந்தி கட்டாயப் பாடமாக்கப் பட்ட பொழுது ஜனநாயக உணர்வுடன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பூரண சுதந்திரம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சி. அது பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டு இருந்தது. சாதியற்ற சமூகத்தை விரும்பிய தோழர் சங்கரய்யா, பொருளாதார சமத்துவத்துடன் கூடிய சமூக மாற்றம் மட்டுமே அதற்கு தீர்வாக இருக்க முடியும், மார்க்சியம் மட்டுமே இந்த இலக்கை நோக்கி வழிநடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே, 1940ல் விடுதலை தாகத்துடன் தோழர் சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய முடிவெடுத்தார்.
இவர் தலைமையில் மதுரை மாணவர் சங்கம், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் போராட்டம் நடத்தியது. 1941ல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டதால் பி.ஏ. வரலாறு இளங்கலை இறுதி தேர்வு எழுத முடியாமல் இவர் படிப்பு முழுமை அடையாமல் நின்று விட்டது. பின்னர் மேலும் இரண்டு முறை பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது “மதுரை சதி வழக்கு” போட்டனர் ஆங்கிலேயர்கள்.
சுதந்திரத்திற்கு பின்பு, ஆளும் வர்க்க சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர், விவசாயி, மக்கள் உரிமைக்கான இவரின் போராட்டம் தொடர்ந்ததால், சுதந்திர இந்தியாவிலும் கைது, சிறைத்தண்டனை, தலைமறைவு வாழ்க்கை என புரட்சிப் பயணம் தொடர்ந்தது.
எஸ். ஏ டாங்கே தலைமையிலான ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக சமரசப் போக்கைக் கடைப்பிடித்த பொழுது, போராட்ட குணத்துடன் கட்சியில் இருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கட்சி (CPIM) ஆரம்பித்த 32 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர்.
மூன்று முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வெளியில் நடக்கும் மக்கள் போராட்டங்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்திற்கு உள்ளும் வலுவாக திறம்பட எதிரொலித்தார்.
அமைப்பாளர்
சங்கம் கட்டுவது, கட்சி கட்டுவது, மக்களைத் திரட்டும் அமைப்புக்களைக் கட்டுவது ஒரு கலை. இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர் தோழர் சங்கரய்யா. அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கம், மதுரை மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம், கட்சிக் கிளைகள், மாவட்ட, மாநில, மத்திய குழு என்று திறம்பட செயல்பட்டு முழு முற்றாக அமைப்பு உருவாக்கத்தில் அக்கறை செலுத்தியவர்.
தகைசால் தமிழர்
எவ்வளவு கொள்கை முரண்பாடு இருந்தாலும் மாற்றுக் கட்சியினருடனும் அதன் தலைவர்களுடனும் மனிதாபிமான நட்பு பாராட்டியதால், மற்றவர்களின் அன்பும், பாராட்டும், மரியாதையும் ஒரு சேரக் கிடைக்கப் பெற்றார். 2021ல் தமிழக அரசு இவருக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கியது.
அனல் பறக்கும் பேச்சாளர்
கைக் குறிப்பு எதுவும் இல்லாமல் மனக் குறிப்பிலேயே மணிக்கணக்கில் பேசக் கூடியவர் தோழர் சங்கரய்யா. உண்மையின், உணர்ச்சியின் வெப்பம் மேலோங்கிய ஆவேசப் பேச்சு அவருடைய பேச்சு. மடை, தடை அற்ற ஆர்ப்பரிக்கும் வெள்ளம். என்ன சொல்ல, என்ன உணர்த்த விரும்புகிறோரோ, அதை எளிதில் அனைவருக்கும் கடத்தும் வார்த்தை வித்தகர். சட்டமன்றப் பேச்சுகளில் புள்ளி விபரங்கள் துள்ளி விளையாடும்.
வாக்கும் வாழ்வும் ஒன்றே
தோழர் என். சங்கரய்யா சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்தவர். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும், நான்கு பேரன்களும் மூன்று பேத்திகளும் உள்ளனர். இவர் குடும்பம் ஒரு மினி இந்தியா. சாதி மறுப்பு கலப்பு மணம் புரிந்தவர்கள். கட்சிக்காக கடினமாக உழைப்பவர்கள்.
102வது வயதில் அடியெடுத்து வைக்கும் வாழும் வழிகாட்டியான தோழர் என். சங்கரய்யா அவர்களை நாம் வாழ்த்தி வணங்குகிறோம்.
Red Salute to com N Sankariah. Greetings to BWU for publishing articles on such leaders of stature in society. Certainly readers will be benefitted in reading and absorbing the life and struggle of com N S. Long live com N Sankariah
🙏🙏👍🏼👍🏼