நான்கு முனைகள் – நான்கு நாட்கள் – 4000 கி.மீ

வங்கி ஊழியர்கள் பிரச்சாரப் பயணம்

டி.ரவிக்குமார்

”வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்கள் ஜூலை 19 முதல் 22 வரை தமிழகத்தில் 4 முனைகளிலிருந்து 4 நாட்கள் 4000 கி.மீ. வேன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகள் பாதுகாக்கப்பட வேண்டும் –பலப்படுத்தப்பட வேண்டும் – பிற தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட வேண்டும் – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை உத்தரவாதப் படுத்த வேண்டும் – சாதாரண வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அநியாய சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த பிரச்சாரப் பயணம் நடந்து வருகின்றது.

”பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போகிறோம்” என்று மீண்டும் ஒன்றிய நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீத்தாரமன் அவர்கள் சமீபத்தில் பாஜக அரசின் 9 ஆம் ஆண்டு நிறைவு விழாவில்  அறிவித்துள்ளார். இதனால் வங்கிகள் தனியார்மய ஆபத்து மீண்டும் தலை தூக்கி உள்ளது. அதே போல் சாமான்ய மக்களுக்கு சேவை புரியும் கூட்டுறவு வங்கிகளை தனியார்மயமாக்கவும், அவற்றை மாநில அரசுகளிடமிருந்து பறித்து, மத்திய அரசு எடுத்துக் கொள்ளவுமான முயற்சி நடைபெறுகிறது. கிராம வங்கிகள் மொத்தக் கடனில் 90 சதவீத கடனை கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வங்கிகளின் 49% பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. அது நடைபெற்றால் ”ஏழை மக்களுக்கான சேவை” என்ற கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன்  நோக்கம் சிதைக்கப்பட்டுவிடும். கடந்த 9  ஆண்டுகளில் வங்கிகளைச் சீரழிக்கும் இந்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கிகள் தனியார்மயமானால் என்னாகும்?

·       சாதாரண மக்களுக்கான சேவை பின்னுக்கு தள்ளப்படும்.

வைப்புத் தொகைக்கு பாதுகாப்பு இருக்காது.

  • சேவைக் கட்டணங்கள் உயரும்.

·        பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் இல்லாமல் போனால் இன்று தனியார் வங்கிகளில் கிடைக்கும் ஓரளவு சேவையும் காணாமல் போகும்.

·    தனியார் வங்கிகள்  லாபம் ஒன்றையே குறியாகக் கொண்டு மக்களை/வாடிக்கையாளர்களை கசக்கிப் பிழியும்.

·        சாமான்ய மக்களுக்கான முன்னுரிமைக் கடன் முழுவதுமாக கைவிடப்படும்.

·         கோடிக் கணக்கான ஜன்தன் கணக்குகள் பராமரிக்கப்படாது.

·        வங்கிப் பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்காது.

·        பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கைவிடப்படும்.

·        உயர்மட்ட ஊழல் தீவிரமடையும்.

·         சாமான்ய மக்களுக்கான கடன்களின் வட்டி கடுமையாக உயரும்.

·        விவசாயம், சிறுதொழில், கல்வி, ஏழை நடுத்தர மக்களுக்கான கடன்கள் ஆகியவை மறுக்கப்படும்.

  •    இந்திய தேசத்தின் பொருளாதாரம் தேக்கமடையும்

இது ஒட்டுமொத்தமாக நாட்டின் நலனுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் பேராபத்தாகும்.

1969 க்கு முந்தைய காலங்களில் வங்கிகள் யாவும் தனியார் கைகளில்தான் இருந்தன. அவற்றில் பெரும்பாலான வங்கிகள் திவாலானதும் அன்றைய தினம் வைப்பு நிதி வைத்திருந்தவர்களின் பணம் பறிபோனதும் மறக்க முடியாத வரலாறு.  மீண்டும் அதுபோன்ற  நிகழ்வுகளைத் தவிர்க்க பொதுத்துறை வங்கிகளைக் காப்பது தலையாய கடமை.

2008 ல் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியாவில் அதனுடைய பாதிப்புகள்  தடுக்கப்பட்டதற்கு, இங்கு வங்கித்துறை பெருமளவில் பொதுத்துறையில் இருந்ததே முக்கிய காரணமாகும்.

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் 2021 மார்ச் 15, 16 மற்றும் டிசம்பர் 16, 17 ஆகிய நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் இந்த ஆபத்து தற்காலிகமாக தள்ளி போடப்பட்டது. தற்போது அந்த ஆபத்து ஒன்றிய நிதி அமைச்சரின் சமீப அறிவிப்பால் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

அரசு வங்கிகள் திட்டமிட்டே முடக்கப்படுகின்றன. 5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டுள்ளன. கடுமையான ஊழியர் பற்றாக் குறையால் வாடிக்கையாளர் சேவை மிகவும் பாதிப்படைகிறது. கடை நிலை ஊழியர்கள், ஆயுதமேந்திய காவலர்கள் தாற்காலிக ஊழியர்களாகவும் லட்சக்கணக்கான வணிக முகவர்கள் ஒப்பந்த முறையிலும் நியமிக்கப்பட்டு அவர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எஸ் எம் எஸ் கட்டணம், ஏடிம் கட்டணம், பணம் செலுத்தும் கட்டணம்,  பாஸ்புக் கட்டணம், குறைந்த பட்ச இருப்புக் கட்டணம் என்று பலவகையில் வாடிக்கையாளர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மறுபுறம் பெரு முதலாளிகளின் வராக்கடன் ரத்து செய்யப்படுகிறது. வேண்டுமென்றே கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிடமும் சமரச ஒப்பந்தம் போட்டு அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கியே முனைப்பு காட்டுகிறது.

சென்னை, ஓசூர், கோயம்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மையங்களிலிருந்து ஜூலை 19 அன்று துவங்கிய இந்தப் பிரச்சாரப் பயணம் , திருச்சியில் ஜூலை 22 அன்று பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. ஜூலை 19 காலை அன்று

  • சென்னை டி.எம்.எஸ். வளாகம் முன்பு தோழர் ஆறுமுக நயினார் (சிஐடியு) மற்றும் டி.செந்தில்குமார் (ஏஐஐஇஏ) 
  • ஓசூர் ரயில் நிலையம் அருகில் தோழர் ஸ்ரீதர் (சிஐடியு) மற்றும் கல்யாணசுந்தரம் (டிஎன்ஜி இஏ)
  • தூத்துக்குடி ஓட்டல் சுகம் அருகில் திரு.ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி நகர மேயர்) மற்றும் தோழர் பி.ராஜு (பிஎஸ்என்எல்)
  • கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் தோழர் செந்தில்குமார் (டிஎன்ஜி இஏ) ஆகியோர் இந்தப் பிரச்சாரப் பயணத்தை துவக்கி வைத்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவும் 8 முதல் 10 மையங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி  ‘ மக்கள் பணம் – மக்களுக்கே ‘ என்ற இயக்கத்திற்கு, பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். அனைத்து மையங்களிலும் பொதுமக்களும்,சிறுவியாபாரிகளும், தொழிலாளர்களும், வாலிபர்களும், மாணவ மாணவியர்களும் இந்த பிரச்சார கருத்துக்களை கூர்மையாக கவனித்தது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.  தோழமை அமைப்புகளான சிஐடியூ, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல், டிஆர்இயு, போக்குவரத்து, மின்சாரம், ஆசிரியர், மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள்  ஆகியற்றின்  ஏராளமான தோழர்கள், பயணக் குழுவை வரவேற்றும்,  வாழ்த்தியும், பயணக் குழுவிற்கு தேவையான அனைத்து உதவிகளை அளித்தும் சிறப்பித்துள்ளனர்.

22.07.23 அன்று திருச்சியில் இந்த பிரச்சாரப் பயணத்தின் சங்கமத்தை ஒட்டி சிறப்பு பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் சிஐடியுவின் தமிழ் மாநிலத் தலைவர் அ.செளந்தர்ராஜன்,  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத், தலைவர்  சி ஜே நந்தகுமார், பயணக்குழுத் தலைவர்கள், சிஐடியு மற்றும் சகோதரச் சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒட்டு மொத்த இயக்கத்தின் பகுதியான வங்கித்துறை பாதுகாப்பு இயக்கம் சரியான தருணத்தில் முன்னெடுத்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் இந்த இயக்கம் மேலும் கூர்மை பெற்று  நிச்சயம் தனது இலக்கை அடையும்.

Comment here...