ஜேப்பி
அடிப்படைப் பிரச்சனை
இந்திய நாட்டின் மிக முக்கியமான மக்கள் பிரச்சனைகளில் ஒன்று “வேலையின்மை”. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பொருளாதாரத் தேக்கத்தின் குறியீடு மட்டுமல்ல, பல் வேறு சமூகக் குற்றங்கள், கலவரங்கள், இனப் படுகொலைகள் நிகழ்த்த வேலையில்லாப் பெரும் பட்டாளம் துணை போக வாய்ப்புகள் இருக்கின்றன.
அரசியல் சாசன உரிமை
இந்திய அரசியல் சாசனம் வாழ்வதற்கான உரிமையை அனைவருக்கும் வழங்கி இருக்கிறது (Article 21). ஆனால், மக்கள் உயிர் வாழ, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, குறைந்தபட்ச வருமானம் பெற, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய, உத்திரவாதமான வேலை வாய்ப்பு என்பது அடிப்படை உரிமையாக்கப் படவில்லை. வேலையில்லாத காலத்திற்கான நிவாரணத் தொகை என்பதும் மற்ற வளர்ந்த நாடுகளில் கொடுக்கப் படுவதைப் போல இந்தியாவில் வேலை அற்ற, வேலை இழந்த அனைவருக்கும் கொடுக்கப் படுவதில்லை. வெகு சிலருக்கு கொடுக்கப்படும் நிவாரணமும் கூட போதுமானதாக இல்லை.
இந்தியாவில் வேலை வாய்ப்பு என்பது, இந்தியப் பொருளாதாரத்தைப் போலவே விவசாயத்தையும், சிறுகுறு தொழில்களையுமே பெரிதும் நம்பி இருக்கிறது. இருக்கின்ற வேலை வாய்ப்புகளிலும் முறை சார்ந்த தொழில்களின் பங்கு 2% மட்டுமே எனக் கணக்கிடப்படுகிறது. மீதி 98% வேலை வாய்ப்புகள் முறைசாரா தொழில்களால் நிரப்பப் படுகிறது.
ஏமாற்றும் ஒன்றிய அரசு
2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வழங்குவோம் என உறுதி அளித்தது. மக்கள் இவர்களின் வாக்குறுதியை நம்பி வாக்கு அளித்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றிய அரசாட்சியையும் பிடித்தது.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசின் விவசாய விரோத, தாராளவாத, பெரு முதலாளித்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளால் வேலையின்மை, 2014ல் இருந்த நிலைமையை விட மோசமாகி இருக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலையின்மை சதவீதம் 27.11% என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தொற்றுக் காலத்தில் வேலை இழந்த பல கோடிப் பேர் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டத்தையே ஒழித்துக்கட்ட முனைப்பு காட்டி வருகிறது ஒன்றிய அரசு. பொதுத்துறை ஒட்டு மொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது. காலிப் பணியிடங்கள் கோடிக்கணக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஒப்பந்த, அவுட்சோர்ஸ் முறைகள் அமல்படுத்த படுகின்றன.
விவசாயத்தை சீரழித்து பெருமுதலாளிகள் வசம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதகமான ஜிஎஸ்டி வரி முறையால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்கள் இன்னும் உயிர் பெற்று செயல்பட முடியவில்லை. அந்நிய நிதி மூலதனம் மற்றும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. வேலையின்மையோடு இணைந்து உழைப்புச் சுரண்டல் கொடூரமாக நடந்து வருகிறது.
மறைக்கப்படும் உண்மைகள்
அடிப்படையான இந்த வேலையின்மை, உழைப்புச் சுரண்டல், வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை ஆகிய பிரச்சனைகள் பொதுத் தளத்திலிருந்து மறக்கடிக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஊடங்களால் விவாதிக்கப் படாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் கொள்கைகளால் முதலாளித்துவம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. பீஹார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் மேல் மக்கள் வறுமையில் வாடுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
MESS (Movement for employment with social security)
இந்தப் பின்னணியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மாதர், மாணவர், இளைஞர் அமைப்புகள் இணைந்து “சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்” ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றன. சென்னையில் வருகிற ஆகஸ்ட் முதல் தேதி அன்று “தமிழ்நாடு சிறப்பு மாநாடு” நடத்தப்பட இருக்கிறது.
நியாயமான கோரிக்கைகள்
சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பை அடிப்படை உரிமை ஆக்கிடு;
குறைந்தபட்ச மாத ஊதியம் ₹26,000 வழங்கிடு;
வேலையில்லா நிவாரணத் தொகையை ₹3,000 ஆக உயர்த்து;
அரசு சேவைத்துறை, பொதுத்துறைகளை பலப்படுத்தி பாதுகாத்திடு;
நிரப்பப் படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பு, இட ஒதுக்கீட்டின் படி பழைய காலியிடங்களை நிரப்பு;
ஒப்பந்த, அவுட்சோர்ஸ் முறைகளை கைவிடு;
MNREGA திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை மற்றும் முழுமையான கூலி உத்திரவாதப்படுத்து;
வேலை உறுதிச் சட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கி வேலை, கூலி உத்திரவாதம் வழங்கு;
தனியார் துறையில் இடஒதுக்கீடு அமலாக்கு;
பெண்களுக்கான வேலை வாய்ப்பில் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்து;
வேளாண்மை, மீன்பிடி, குடிசைத் தொழில், சிறு உற்பத்தி தொழில்களுக்கு சிறப்பு தொழிற்சாலை திட்டங்களை செயலாக்கு;
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நில உச்ச வரம்பு சட்டப்படி நிலப் பங்கீடு செய்திடு;
போன்ற பல முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துகிறது “சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்”.
இந்த இயக்கமும், இதன் நியாயமான கோரிக்கைகளும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.