சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் சிறப்பு மாநில மாநாடு

நமது நிருபர்

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகரில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. 25 வேறுபட்ட அமைப்புகள் – மாணவர்கள், மாதர்கள், மாற்றுத்திறனாளிகள், வாலிபர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், தொலைபேசி – மின்சாரம் – போக்குவரத்து – காப்பீடு – வங்கி – தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்துறை ஊழியர்கள் – இணைந்து ஆரம்பித்துள்ள இயக்கம் (MESS – Movement for Employment with Social Security) இது. வங்கி ஊழியர் சார்பில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு (BEFI – TN) இந்த இயக்கத்தில் இணைந்துள்ளது. பெருந்திரளாக பல்லாயிரக் கணக்கான உழைக்கும் மக்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உரைச் சுருக்கம்

மாநாட்டில் பேசிய தலைவர்கள் வேலையின்மை, நிரந்தர வேலையின்மை, ஊதியப் பிரச்சனை, பணிப் பாதுகாப்பு,  சமூகப் பாதுகாப்பு பற்றி பல முக்கிய விவரங்களை விவாதங்களை முன் வைத்தனர்.

கொரோனா பொது முடக்கம் திடீரென்று அறிவிக்கப்ப பட்ட போது, 40 கோடிப் பேர் வேலை இழந்ததாக கூறப்பட்ட விவரம், எந்தவிதமான பாதுகாப்பும் அற்ற வேலை வாய்ப்பில், 94 சதமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதை வெளிச்சமானது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் சமூக பாது காப்பற்ற வேலையில் மக்கள் உள்ள நாடு இந்தியா என்று தெரிய வந்தது.

இந்திய அளவில், 6 கோடிக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் பேர் வரையிலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பதிவு செய்யாமல் பல லட்சம் பேர் உள்ளனர்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை 8.30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது 2019-இல் (கொரோனா பேரிடர்) இருந்து தொடர் நிகழ்வாகி விட்ட நிலையில் இந்த சதவீதம் மேலும் பன்மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் சட்ட நடைமுறைகள் பின்பற்ற படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர் முறையை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், வளர்த்தெடுக்கும் வகையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து, ஒப்பந்தத் தொழிலாளர் முறையானது, தற்போது அனைத்து அரசுத் துறைகளிலும் புகுத்தப்பட்டு விட்டது. நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாகும் வகையில் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் அக்னி பாத் திட்டம் என்கிற பெயரில் 17.5 – 21 வயதுடைய இளைஞர்களை வேலைக்கு சேர்த்து அவர்களை முறையான கல்வியை தொடர விடாமல் செய்கிறது.

கற்ற கல்விக்கான வேலை இல்லை. நாடு முழுவதும் உள்ளூரில் வேலை வாய்ப்பு இன்றி, புலம் பெயர்ந்து வேலை தேடுவதும், மிக குறைந்த கூலிக்கு கூடுதலாக வேலை வாங்கப்படும் அவலமும் அதிகரிக்கிறது. நிரந்தர வேலைவாய்ப்பு கனவாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கிறது. சமவேலைக்கு சம ஊதியம் மறுக்கப் படுகிறது. சுரண்டல் அதிகரித்துள்ளது.

கேரள முன்மாதிரி

கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான தேவையை விளக்கினார். நவீன தொழில்நுட்பத்தால் சந்தையில் பொருட்கள் குவியும், வேலையின்மையால் அவற்றை வாங்க மக்களிடம் பணம் இருக்காது. இதன் மூலம் ஒரு கடுமையான சமூக அழுத்தம் ஏற்படும் எனக் கூறினார். கேரள மாநிலம் எப்படி சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையை உத்திரவாதப் படுத்தியுள்ளது எனவும் விவரித்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை ஒன்றிய அரசும், மாநில அரசும் அடிப்படை உரிமையாக்க வேண்டும். வேலையில்லாக் கால நிவாரணம் ₹5000 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டும்.

8 மணி நேர வேலை, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளான, பென்சன், வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை ஆகியவை அனைத்து தொழிலாளருக்கும் உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 என்பது சட்டமாக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசுத் தேர்வாணையம் மீண்டும் மண்டல வாரியான தேர்வுகளை நடத்த வேண்டும், காலியிடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களுக்கான நியாயமான பங்கை பெறும் வகையில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த, உள்ளூர் மொழியை அறிந்தவர்களுக்கே நியமனம் வழங்க வேண்டும், நாடாளுமன்றம் அதற்குரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வேலை உறுதித் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தி குறைந்தபட்ச கூலியுடன் கூடிய வேலை உத்திரவாதப் படுத்த 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும், எனக்கோரி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வங்கித் துறையின் நிலை

ஊக வணிகத்தில் முதலீடு செய்யும் NPS ஓய்வூதிய திட்டம் புதிதாக சேரும் ஊழியர்கள் மீது திணிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. பணியாளர்கள் – வணிக விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

வங்கி வேலைகள் பல தனியாருக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன. ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி போன்றவைகள் துணை நிறுவனங்கள் மூலம் வங்கி சேவை வழங்குகின்றன. அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்குவது கிடையாது.  தாற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்கின்றனர்.

தனியார் கம்பெனிகள் நியமிக்கும் வணிக முகவர்கள் மூலம் வங்கி சேவைகள் வழங்கப் பட்டு வணிக முகவர்கள் சுரண்டப் படுகின்றனர். வணிக முகவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடையாது. ஒரு பரிவர்த்தனைக்கு இவ்வளவு கமிஷன் என நிர்ணயிக்கப் படுகிறது. தனியார் கம்பெனிக்கு 20-40%, வணிக முகவருக்கு 80-60% கமிஷன் என வழங்கப் படுகிறது. விடுப்பு, கொள்ளைக் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம்,  பணிக் கொடை என எதுவுமே கிடையாது.

தனியார் வங்கிகள் செய்வதைப் போலவே, பொதுத்துறை வங்கிகளும் கொள்கை முடிவு எடுக்கும் உயர் பதவிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊதியத்தில் வேண்டப்பட்டவர்களை ஒப்பந்தப் பணியில் அமர்த்துகின்றன. இதனால் ஊழல் மலிகிறது.

ஒன்றுபட்டு போராடுவோம்

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் கோரிக்கைகள் நியாயமானவை. வங்கித் துறையிலும் நிரந்தர வேலை, உத்திரவாதமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவை மறுக்கப் படுகின்றன. இந்த இயக்கத்தின் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் வெல்வதற்கு வங்கி ஊழியர்களும் ஒன்றுபட்டு போராடுவோம், வெற்றி பெறுவோம்.

One comment

  1. MESS இயக்கத்தில் பங்கேற்பதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் சமூக நீதி மறறும் பாதுகாப்புக்கான போராட்ட தீபத்தை முன்கொண்டு செல்கிறது, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் !

Comment here...