மணிப்பூர் ஏன் தொடர்ந்து பற்றி எரிகிறது?

ஜேப்பி

2023, மே மாதம் 3ம் தேதி துவக்கப்பட்ட குக்கி இனத்தவருக்கு எதிரான இனக் கலவரம் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. மேலும் தீவிரமடைந்து வருகிறது. இரட்டை என்ஜின் சர்க்கார் இருந்தால், அதாவது ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாஜக அரசாண்டால், மாநில போலீசும் ஒன்றிய இராணுவமும் இணைந்து மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவோம், மக்கள் பிரச்சனைகளை எளிதாக, முழுதாகத் தீர்ப்போம் எனக் கதை கட்டுகிறது பாரதிய ஜனதா கட்சி.  இது பொய், குக்கி இனத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்தக் கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என பாதுகாப்பு வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக தொடரும் இணையத் தடையானது ஆதாரமற்ற வதந்திகளுக்கு உதவுகிறது, ஏற்கனவே இருக்கும் அவநம்பிக்கைக்கு உரம் போடுகிறது. பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய மாநில அரசு இந்தக் கலவரத்தை முதலில் இரண்டு இனங்களுக்கு இடையேயான இன மோதல் என வர்ணித்தது. பின்னர், இது தீவிரவாத இயக்கத்தின் வேலை என்கிறது.

வரலாறு காணாத வன்முறை

6000க்கும் மேற்பட்ட வீடுகள், மாதாக் கோவில்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளன.  200க்கும் மேற்பட்ட குக்கி இனத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.  500க்கும் மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப் பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குக்கி இன மக்கள் உடைமைகள் இழந்து 400க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் அல்லது சாரிசாரியாக மணிப்பூரில் இருந்து மிசோரம் நோக்கி அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிவாரண முகாம்களில் அவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. மருத்துவ வசதி இல்லை. கழிப்பிட வசதி இல்லை. சில இடங்களில் குடிநீர், உணவு கூடக் கிடைக்கவில்லை.  குக்கி இனத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி முடமாக்கப் பட்டுள்ளார். குக்கி இனத்தைச் சேர்ந்த பாஜக மாநில மந்திரியின் வீடு தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்கள்

மணிப்பூர் மாநிலத்தின் காவல்துறையினர் எண்ணிக்கை, மாநில மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால், நாகாலாந்துக்கு அடுத்த படியாக இந்தியாவிலேயே மிக அதிகம் – (தேசிய சராசரியான ஒரு லட்சம் மக்களுக்கு 152.51 காவலர்கள் என்ற எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகம் – மணிப்பூரில் ஒரு லட்சம் மக்களுக்கு 917.60 காவலர்கள் – ஆதாரம் Data on police organisations of BPRD as on 1st Jan 2021). இது தவிர ஏகப்பட்ட துணை இராணுவப் படைகளும், 50 கம்பெனி CRPF படைகளும் மணிப்பூரில் முகாம் இட்டு இருக்கின்றன. இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தும் கலவரங்கள் அடங்கவில்லை. வன்முறைகள் நித்தம் தொடர்கின்றன.

மலைவாழ் மக்களைப் பாதுகாக்க இராணுவத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படவேண்டிய அவலம் நிகழ்ந்தது. மலைவாழ் மக்களின் பாதுகாப்புக்கு ஆவன செய்யுமாறு உச்சநீதிமன்றம் மாநிலத்திற்கு அறிவுறுத்திய பின்பும் கலவரம் அடங்கவில்லை.

பாதுகாப்பு வல்லுனர்களின் கருத்துக்களின் படி ஒரு அரசு நினைத்தால் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இராணுவம் கொண்டு எந்தக் கலவரத்தையும் ஒரிரு நாட்களில் அடக்கி விட முடியும். அவ்வாறு அடக்கப்படவில்லை என்றால் அரசே அக்கலவரத்திற்கு உடந்தையாக உள்ளது எனப் பொருள் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அரசு ஆயுதக் கிட்டங்கிகள் மெய்டேய் இன வெறியர்களால் சூறையாடப்படுகின்றன மற்றும் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. புத்தம் புது நவீன ஆயுதங்கள் அவர்கள் வசம் உள்ளது. இவை எல்லாம் எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுகிறது.

பாலியல் கொடூரங்கள்

மணிப்பூர் கலவரங்கள் வெடித்த அடுத்த நாளே, அதாவது மே மாதம் 4ம் தேதி அன்று, காங்போக்பி மாவட்டத்தில் மெய்டேய் ஆண்களின் ரௌடிக் கலவரக் கும்பலால் இரண்டு குக்கி இனப் பெண்கள் பொது வெளியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப் பட்டு,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமான வன்முறை நிகழ்ந்தது. இதை வீடியோ எடுத்து ஜூலை 20ம் தேதி சமூக ஊடகங்களில் பரப்பவும் செய்தனர்.

இந்தக் கொடுமை பெண்களை போகப் பொருளாகக் கருதும் ஆணாதிக்க வெறி மட்டுமல்ல, உங்கள் நிலங்கள், வீடுகள், கடைகள், பெண்கள் அனைத்தும் எங்கள் உரிமை, இந்த இடத்தை விட்டு நீங்கள் ஓடினால் உங்கள் பெண்களையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என குக்கி இன மக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயின் கருகிய சடலத்தின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மோதல் பகுதிகளில் பெண்களின் உடல்கள் மீண்டும் மீண்டும் கலவரங்களின் களபூமியாக மாறுகின்றன.

மூன்று மாதங்களாக நடக்கும் இந்தக் கொடூரங்களை மாநில, ஒன்றிய அரசுகள் (இரட்டை இயந்திர சர்க்கார்) அறிந்திருக்கவில்லையா? வீடியோ வெளியான பின்னர் மட்டும் இந்தியப் பிரதமர் மௌனம் கலைப்பது ஏன்?

ஜூலை 20, 2023 அன்று பாலியல் கொடூர வீடியோ வெளியாகி வைரலாவதற்கு முன்  மாநில முதல்வர் ஏன் செயலாற்றவில்லை என அவரிடம் ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பிய போது, மணிப்பூரின் பல்வேறு காவல் நிலையங்களில் இது போன்ற நூற்றுக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் வெட்கமின்றி இச்செயலை நியாயப்படுத்தினார்.

குக்கி இன மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிவதைத் தடுக்க இணையத்தை தடை செய்வதே மாநில முதல்வரின் ஒரே நடவடிக்கையாக இருந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் ஏகே ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர், இன்சாஸ் மற்றும் .303 துப்பாக்கி போன்ற அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. மணிப்பூரின் பல்வேறு காவல் நிலையங்களில்  குறைந்தது 157 குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஒரு அறிக்கை கூறுகிறது.  பிரேன் சிங்கின் அரசாங்கம் வேண்டுமென்றே மெய்டேய் ஆதிக்க சமூகத்தை ஒரு கலவரக் கும்பலாக மாற்றியுள்ளது என்பது தெளிவாகிறது.

வளங்களை வளைப்பதில் குறி

ஜம்மு காஷ்மீரில் பிரிவினை ஊக்குவிக்கப்பட்டு, பின்னர் 370 ரத்து செய்யப் பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப் பட்டு ஒன்றிய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது என்பது அங்கே உள்ள நில வளங்களை, இயற்கை வளங்களை கார்பரேட் நிறுவனங்கள் அபகரிக்கத்தான். தற்போது வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் மூலம் வனங்களை மலை வாழ், பழங்குடி மக்கள் இடமிருந்து பறித்து கார்பரேட் கம்பெனிகள் வசம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மணிப்பூரின் நிலம், மலைகள் மற்றும் காடுகளில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்கள் மீது கண் வைத்து இந்திய அரசு மெகா கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த தாக்குதல்கள் “இன மோதல்” என்று அழைக்கப்படுவது சிறிய தற்செயல் நிகழ்வு அல்ல.

மணிப்பூரில் பழங்குடி இனத்தவரின் நில வளங்களை மற்றவர்கள் அபகரிப்பதை தடுக்கும் சிறப்பு 371C சட்டம் அமலில் உள்ளது.  இதை ரத்து செய்தால் சிறப்பு சட்டங்கள் 371A (நாகாலாந்து), 371B (அஸ்ஸாம்), 371F (சிக்கிம்), 371G (மிசோரம்), 371H (அருணாசலப்பிரதேசம்) அமலில் இருக்கும் பிற மாநில மக்கள் விழித்துக் கொள்வார்கள். எனவே 371C சிறப்பு சட்டத்தை ரத்து செய்யாமலே, நில அபகரிப்பு செய்ய குக்கி இனமக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்திரபூர் மாவட்டத்தில் உள்ள 32 கிராமங்களில் அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியுள்ளார்கள்  என்றும் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப் பட்டு அகற்றப்பட்டனர். மெய்டேய் இனத்திற்கு பழங்குடி அந்தஸ்து கோரப்பட்டது. பழங்குடிகளை விரட்டுவதற்கு பெரும்பான்மை மெய்டேய் இனமக்கள் தூண்டி விடப்பட்டு இனப்படுகொலை நடத்தப்படுகிறது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்

பெரும்பான்மை இனவாதத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம், பயங்கரவாதம் மற்றும் அச்சுறுத்தல் சூழலை உருவாக்குவதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தினர் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது. சமூகப் பிரச்சனைகளை இராணுவமயமாக்கல் மூலம் தீர்க்க முடியாது. ஜம்மு காஷ்மீர்,  மணிப்பூர் என மாநிலம் வாரியாக சிறுபான்மை இனத்தவர் மீது கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய வன்முறைகள் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானவை.  கூட்டாட்சி தத்துவத்தை மறுத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவின் போக்கும் ஜனநாயக விரோதமானது.  வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப் படவேண்டும். பெண்களின் குடியுரிமை உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். சிறுபான்மை, பழங்குடி இன மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

===============================================================

2 comments

  1. கார்ப்பரேட் பேராசைக்கு மத்திய அரசு வழி வகுக்கும் விதமாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் அரசியல் செய்கிறது மத்திய அரசு

Comment here...