இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய மாநாட்டு கருத்தரங்க உரைகள்

சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டை ஒட்டி சிறப்பு கருத்தரங்கம் ஆகஸ்ட் 11, அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் தேஜல் கனிட்கர், டாக்டர் அசோக் தாவலே, தோழர் கே. சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

தொகுப்பு எஸ்.வி.வேணுகோபால் 

டாக்டர் அசோக் தாவ்லே உரை

அரசியல், அறிவியல், கருத்தியல் போராட்டத்தை வலுப்படுத்துவோம்!

வகுப்புவாதத்தை எதிர்கொள்ள உழைப்பாளி மக்களை அணி திரட்டி மிகவும் வலுவான பிரம்மாண்ட மான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்  என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் தலைவர் அசோக் தாவ்லே கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 11ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஆக.11 அன்று சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசுக்குப் பெரும் ஆபத்து விளைவிக்கும் வகுப்பு வாதம்’ எனும் பொருளில் உரையாற்றிய தாவ்லே,  மூட நம்பிக்கை, பழமை வாத கற்பிதங்கள், போலி வதந்தி கள் இவற்றை முறியடிக்கும் வண்ணம் அரசியல் கருத்தியல் போராட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். உறுதிமிக்க ஜனநாயக அமைப்பு களை உருவாக்க வேண்டும் என்றும் பதினெட்டு வயதில் இந்திய  விடுதலைப் போராட்டத்தில் இளம் போராளியாகத் துணிந்து களமிறங் கிய குதிராம் போஸ். 1908இல் தூக்கி லேற்றப்பட்ட தியாக தினத்தில் பேசு வதைப் பெருமையோடு குறிப்பிட்டு,  சுதந்திரப் போரில் எந்த விதத்திலும்  பங்கு பெறாதவர்கள் வகுப்புவாதி கள் என்பதை சுட்டிக் காட்டினார்.

இலக்கு வைத்து தாக்குதல் 

சமூகப் பாகுபாடுகள், எல்லா வற்றையும் பயன்படுத்திப் பெரி தாக்கிப் பிரிவினை ஏற்படுத்தும் நஞ்சி னை மிக ஆழமாக மக்கள் நெஞ்சில் விதைக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தலில் இயங்கும் ஒன்றிய ஆட்சியாளர்கள் செய்கின்ற னர். அதனால்தான் பெண்கள், தலித் பகுதியினர், சிறுபான்மையினர் எல்லோரும் இலக்கு வைத்துத் தாக்கப்படுகின்றனர். மணிப்பூர் இதன் மிக அண்மைக்கால எடுத்துக் காட்டு என்று குறிப்பிட்ட அவர், சரிந்து வரும் பொருளாதாரம், பெருகும்  சமூகத் தீங்குகள், நலிவடையும் மக்கள் உடல் நலம், குழந்தைகள் ஊட்டச்சத்து, விரிந்துகொண்டே போகும் ஏற்றத் தாழ்வு, பட்டினிக் கொடுமை இவற்றைப் புள்ளி விவ ரங்களோடு அம்பலப்படுத்தினார்.

ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை 

ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடன் தொல்லையை சமாளிக்க முடி யாமல் தற்கொலை செய்துகொண்ட தை அரசு புள்ளி விவரமே கூறுகிறது என்று குறிப்பிட்ட அவர், இதே காலத்தில் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளையும் எடுத்துரைத்தார். ஓராண்டுக்கு மேலான போராட்டத்தில் விவசாயி கள் ஒன்று கலந்து நின்ற ஆவேச மிக்க அந்த நாட்களில் அவர்களுக் கிடையே பாகுபாடுகள் துடைத் தெறியப்பட்டு இருந்தன என்பதை யும் சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிய ஆட்சியாளர்களது பிரித்தாளும் சூழ்ச்சிகளை முறியடிக்க சாதா ரண மக்களது வாழ்வாதார பிரச்ச னைகளை முன்வைத்து ஒன்றுபட்ட பெரும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார். ஆகஸ்ட் 24 அன்று தில்லி தல்கதோரா அரங்கில் மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சங்கங்கள் இவற்றோடு விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் இணைந்து நடத்த உள்ள கூட்டத்தில் எழுச்சிமிகு போராட்டங்களுக்கான அறிவிப்பு கள் வரும், அவற்றில் வங்கி ஊழியரும் முக்கிய பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். 

டாக்டர் தேஜல் கனிட்கர் உரை

 

அறிவியலின் முக்கியப் புள்ளி எது?

அறிவியல் மனப்பான்மை சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறித்து உரையாற்றிய பெங்களூரு உயர் கல்வி நிறுவனத்தின் இணை பேராசிரியர் தேஜல் கனிட்கர், அறிவு என்பது கள உழைப்பின் அனுபவங்களில் இருந்தே பெறப்படுவது. அறிவியல் என்பது மதம் போல் மற்றுமோர் அதிகார பீடமல்ல. எதையும் கேள்விக்கு உட்படுத்தும், பரிசோதித்தபின் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு ஆகும் என்று விளக்கினார். நாம் அறிந்தது, அறியாதது, அறியாதது என்றே அறிந்திராது இருப்பது என உலகில் எத்தனையோ விஷயங்கள் உண்டு, அவற்றைக் கண்டறியும் முயற்சிதான் அறிவியல். உழைப்பின் வழியே பெரும் கண்டுபிடிப்புகளும், சாதனங்களும் உருவானாலும் அவை உழைப்பாளி மக்கள் உடைமையில் இருப்பதில்லை என்பது தான் நாம் வாழும் சமூக அமைப்பின் முரண்பாடு.   எல்லோருக்குமான சமூக அமைப்புக்கான சிந்தனைப் போக்குதான் அறிவியலின் முக்கியப் புள்ளி என்றும் குறிப்பிட்டார்.

சுற்றுச் சூழலை நாசப்படுத்தும் முன்னேறிய நாடுகள்

கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உருவாகி மாசுபடுத்துவதால், உலகம் வெப்பமடைகிறது என்றால், எளிய மக்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நாம் எல்லோரும் ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு மூச்சில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றுகிறோம்.  மலிவான எரிபொருள் பயன்படுத்துவதால்தான் பூமி சூடேறுகிறது என்கிறோம். உண்மையில் எல்லாப் பழியையும் மூன்றாம் உலக நாடுகள் மீது பழிபோடும் முன்னேறிய நாடுகளே சுற்றுச் சூழலுக்கான ஆகப்பெரும் தீங்கு விளைவிக்கின்றன.  அமெரிக்காவில் ஒரு குளிர்பதனப் பெட்டி எடுத்துக் கொள்ளும் மின்சார சக்தி, ஓர் ஆப்பிரிக்கக் குடிமகன் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதைக் காட்டிலும் அதிகம். எளிய உழைப்பாளி மக்களது வாழ்வாதாரம், வாழ்வுரிமை பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களை நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தும் தீர்வுகள் முன்வைப்பதைப் பார்க்கிறோம்.

பொறுப்பை தட்டிக்கழிக்கும் போக்கு 

30 ஆண்டுகளாக சுற்றுச் சூழல் பற்றிய மாநாடுகளும், விவாதங்களும் ஓயாது நடந்தாலும், பெரும் பணக்கார நாடுகள் தங்கள் பொறுப்பைக் கைகழுவி விடுகின்றன. முக்கியமாக அமெரிக்கா உடன்பாடுகளை ஏற்பதில்லை. அவர்களைக் காட்டி வேறு சில நாடுகளும் விலகி நிற்கின்றன. பிரச்சனை அரசியல் ரீதியாக அணுக வேண்டியது. தீர்வுகளும் அரசியல் ரீதியாகவே வந்தடைய வேண்டியது. ஆனால், அதில் நாம் வலியுறுத்த வேண்டிய செய்தி, அந்தத் தீர்வுகள் சமத்துவ நோக்கில் மனித குலத்தைப் புரிந்து கொள்ளும் போக்கில் இருந்தே கண்டடைய வேண்டும் என்பதே என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார் தேஜல். கருத்தரங்கத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் டி ரவிக்குமார் தலைமை தாங்கினார். தலைவர் சுனில்குமார் நன்றி கூறினார். முன்னதாக செயலாளர் சர்வேசன் வரவேற்றார்.

தோழர் கே. சுவாமிநாதன் உரை 

வலுவான பொதுத்துறையும்  விழிப்பான தொழிற் சங்கங்களும்

நிதித்துறை சீர்திருத்தங்கள், இந்திய பொருளாதாரத்தில் அவற்றின்  பாதிப்புகள் எனும் பொருளில் உரை யாற்றிய தென்மண்டல காப்பீட்டு ஊழியர்  சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் கே.சுவாமிநாதன், நிதித்துறை சீர்திருத்தங்கள் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுவதை வரைந்து  காட்டினார். முதலாம் கட்டம், வர்த்த கத்திற்கு சுதந்திரமாகக் கதவுகள் திறந்து  விடுவது, இரண்டாவது கட்டுப்பாடு களைத் தளர்த்துவது, மூன்றாவது அரசு தன்னை விடுவித்துக் கொள்வது. வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி இரண்டு  துறைகளிலும் இதே மூன்று கட்டங்கள்  எப்படி ஒன்றுபோல் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பதை விளக்கி னார். எப்போதும் நிலைகொள்ளாது இருப்பதே மூலதனத்தின் சிறப்பு என்று சந்தைக் கொள்கை சொன்னாலும், அதற்கு ஒரு தாயகத் துடிப்பு எப்போதும் இருக்கும் என்பதை பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் சொல்வதை சுட்டிக்காட்டிய சுவாமிநாதன், எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும், தனது சொந்த நாட்டினுள் பிரச்சனை என்றாலும் மூலதனம் உடனே தாயகம் நோக்கி ஓட்டம் எடுக்கும். ஆனால், 2008இல் உலகப் பெருமந்தம் ஏற்பட்ட காலத்தில் இந்திய வங்கித் துறை பாதுகாப்பாக இருந்ததற்குக் காரணம் இந்தியாவில் வலுவான பொதுத்துறையும், விழிப்பான தொழிற்சங்கங்களின் எதிர்ப்பினால் முழு மூலதன பரிமாற்றம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட முடியாதிருந்ததும் தான் என்று நினைவூட்டினார்.

வீழ்ச்சியின் கதைகள் 

அரசின் பங்குகளை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு  வெளியேறிவிட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் கொள்கை. இன்சூரன்ஸ் துறையிலும் தனியார் மயம், அந்நிய முதலீடு என்று தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு துறைகளின் மீது எய்யப்படும் அம்புகள் வேறு வேறானாலும், அம்பறாத்தூளி ஒன்றுதான் என்ற சுவாமிநாதன், தனியார்மயம் எத்தனை கேடானது என்பது அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியின் கதைகள் சொன்னாலும் நம் ஆட்சியாளர்கள் கேட்பதாக இல்லை என்றார். சிலிகான் வேலி வங்கியோ, சிக்னேச்சர் வங்கியோ வீழ்ந்ததில் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது அரசு, ஆனால், அந்த பாதிப்பு ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் பறிபோவதில் பிரதிபலித்து வருகிறது என்றார்.

Comment here...