நம்பிக்கையூட்டும் பிஇஎப்ஐ (BEFI) அகில இந்திய மாநாடு

நமது நிருபர்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (Bank Employees Federation of India – BEFI) 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடை பெற்றது.

அகில இந்திய பங்கேற்பு

இயற்கைச் சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹிமாசல் பிரதேசம், மத்திய மாநில அரசுகளின் குறுகிய நோக்கத்தால் இனக்கலவரம் வெடித்துள்ள மணிப்பூர், இடதுசாரிகளின் மண்ணாகிய திரிபுரா, மேற்கு வங்கம், கேரளம் மேற்கு மாநிலமான குஜராத், வடக்கு மாநிலமான பஞ்சாப் உள்ளிட்டு 23 மாநிலங்களிலிருந்து 600 பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI) 11வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 75 பெண் தோழர்கள் உள்ளிட்டு 300க்கும் கூடுதலான இளைஞர்கள் பங்கேற்றனர். 

பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளைக் காப்போம் 

2019ல் திருவனந்தபுரத்திற்கு பிறகு நான்காண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த மாநாட்டில் பொதுத்துறை, கிராம, கூட்டுறவு வங்கிகளை பாதுகாப்போம் என்று ஒருமித்த குரலில் அனைத்து பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் சூளுரைத்தனர். பெருமுதலாளிகளுக்கு சாதகமான பொருளாதார கொள்கையை கைவிட்டு மக்கள் சார்பு கொள்கையாக மாற்ற வேண்டும், மக்களை சாதி, மத ரீதியில் பிளவுபடுத்தும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கை கைவிடப்படவேண்டும், 12வது இருதரப்பு ஒப்பந்தம் ஊழியர்களுக்கு சாதகமாக உடனடியாக முடிக்கப்பட வேண்டும், பெண் ஊழியர்களுக்கான பிரத்யேக கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும், புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்படவேண்டும், பழைய பென்ஷன் திட்டம் மேம்படுத்தப்படவேண்டும், அயல்பணி முறை முற்றிலும் கைவிடப்படவேண்டும், தற்காலிக ஊழியர்கள், அயல்பணித் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படவேண்டும், தேவையான ஆட்கள் நியமிக்கப்படவேண்டும், ரிசர்வ் வங்கி, நபார்ட் – ஆகியவற்றின் தனித்தன்மை காப்பாற்றப்படவேண்டும், வராக்கடன் கராறாக வசூல் செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஒருமனதான விவாதங்கள் 

மத்தியகுழு அறிக்கை, நான்காண்டு வரவு-செலவு கணக்கு, இரண்டு விதித்திருத்தங்கள் ஆகியவை ஒருமனதாக ஏற்கப்பட்டன. முன்னதாக விவாதத்தில் பங்கேற்ற 68 தோழர்களும் சர்வதேச நிலைமை, ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை, தனியார் வங்கி நிர்வாகங்களின் அராஜகம், அரசு வங்கிகளின் முக்கியத்துவம், பணி நிலைகளில் முன்னேற்றம், வாரம் ஐந்து நாட்கள் வங்கிப் பணி, விடுப்பெடுக்க முடியாத சூழல், வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை மதிக்காத நிர்வாகங்களின் போக்கு, வெளிப்பணியால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஒன்று பட்ட போராட்டத்தின் தேவை, தொழிலாளர் நலச் சட்டங்களில் புகுத்தப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சரத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டனர். மாநாட்டை தோழர் தபன் சென் (சிஐடியு) துவக்கி வைத்தார். சகோதர சங்க தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். 

சிறப்பு கருத்தரங்குகள்

முன்னதாக நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் தோழர்கள் அசோக் தாவலே (அகில இந்திய விவசாயிகள் சங்கம்), பேராசிரியர் தேஜல் கனிட்கர், கே.சுவாமிநாதன் (ஏஐஐஇஏ) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அசிஷ்சென் நினைவு சொற்பொழிவாற்றினார் தோழர் ஆர்.கருமலையான் (சிஐடியு). 

சிறப்பு பெண்கள் மாநாடு

250 பெண்கள் பங்கேற்ற சிறப்பு மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் தோழர் ஸ்ரீமதி பங்கேற்று சிறப்புரையாற்றினர். விவாதத்தில் பங்கேற்ற 21 பெண் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்தனர். தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பகிராத விஷயங்களைக் கூட மாநாட்டில் சங்கத்தின் சக தோழர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பணிச் சூழல், தனிக் கழிப்பறை, குழந்தை காப்பகம், தலைமைப் பொறுப்பில் பெண்கள், சிறப்பு விடுப்பு, சட்டமன்ற நாடாளுமன்றங்களில் இட ஒதுக்கீடு இப்படி அனைத்து பிரச்சனைகள் பற்றியும் விவாதித்தனர்.

நம்பிக்கை ஊட்டும் மாநாடு 

மாநாட்டின் நிறைவாக தோழர் எஸ் எஸ் அனில் தலைவராகவும், தோழர் தெபாசிஸ் பாசு சவுத்திரி பொதுச் செயலாளராகவும், தோழர் சந்திப் பால் பொருளாளராகவும் மற்றும் 16 நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல இளம் தோழர்களை உள்ளடக்கிய நிர்வாகக்குழு வங்கித்துறையில் எதிர்வரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் என்ற நம்பிக்கையை தரும் மாநாடாக அமைந்தது.

One comment

Comment here...