பாஜக அரசே வன்முறை நிகழ்த்துகிறது

பி.கே.ஸ்ரீமதி

நமது நிருபர் 

கெடுவாய்ப்பாக 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று மாற்றப் பட்டு வருகிறது.  நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இந்துக்கள் மட்டுமே சகோதர சகோதரிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் நமது சகோதர சகோதரிகள் அல்ல என்று இந்துக்களிடம் பாஜகவும் அதன் அமைச்சர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ்  ஒருபடி மேலே சென்று இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்றால் இந்து கலாச்சாரம், நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்க மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று கூறுகிறது. இந்த வகையான வெறுப்பு பேச்சு ஒன்றியத்தை ஆளும் பாஜக தலைவர்களிடமிருந்து நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது.  பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள்  மக்களை பிளவு படுத்த  வன்முறையை ஏவி விடுகின்றன. பெண்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுகின்றன. மோடி அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு அல்ல, மக்களுக்கு எதிரான அரசு. அதுமட்டுமல்ல மோடி அரசு பெண்களுக்கும் எதிரான அரசு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களையும் பெண் குழந்தைக ளையும் பாதுகாப்போம். அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. ஆனால் அப்படித்தான் அக்கட்சி செயல்படுகிறதா? இல்லை.

கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பெருமளவிலான வன்முறைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் எதிர் கொண்டனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசே முன்னின்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை நடத்தி வருகின்றன.  இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பாஜக ஆளும் உத்தர்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். புதிய  தேசிய கல்விக் கொள்கை இந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான ஆரம்பப்பள்ளிகள்  மூடப்பட்டுவிட்டன. இதற்கு என்ன அர்த்தம் என்றால் பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்ற நிலையை நோக்கி நாட்டை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். உத்தர்கண்ட் மாநிலத்தில் மட்டும் 4ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன என்று நமது சகோதரிகள் சொல்கிறார்கள்.

தண்ணீரில் எழுதப்படும் வாக்குறுதிகள்

கடந்தாண்டு 76வது சுதந்திர தினத்தை கொண்டாடிய போது பெண்களுக்காக நாடு பீடுநடை போடப்போகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த வாக்குறுதி கள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள்.  அவற்றை நிறைவேற்றவேண்டும் என்ற மன உறுதியும்  ஆற்றலும் ஆட்சியாளர்களிடம் இல்லை. பிரதமரின் வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீரில் எழுதப்பட்டவை.  உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் சரி பாதிப்பேர் பெண்கள். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து  76 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் நிலை என்ன? அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமஉரிமை கிடைத்துள்ளதா? இல்லை. அரசும் இந்த அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உறுதிகளை நிறைவேற்றுவதாக இல்லை. சில அரசுத்துறை நிறுவனங்களில் மட்டும் பெண்கள் சமவேலைக்கு சம ஊதியம் வாங்குபவர்களாக இருக்கலாம். ஆனால் அமைப்பு சாரா துறை மற்றும் இதர துறைகளில் பெண்கள் இன்றும் ஆண்களை விட  மிகக்குறைந்த அளவிலான ஊதியமே பெறுகிறார்கள். இது பாகுபாடு இல்லையா? ஒரே வேலைக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம்பளம் வேறுபடுகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகாலம் இந்த கொடுமையை பேசிக் கொண்டிருக்கப்போகிறோம்.  சமவேலைக்கு சம ஊதியம் சட்டத்தை  அமல்படுத்த ஒன்றிய அரசு  தயாராக இல்லை.  மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் அமைந்த முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியது. அந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தின. இதன் பின்னரே பல்வேறு தடைகளை தாண்டி பெண்கள் கணிசமான அளவுக்கு வேலை பெற்றுள்ளனர். 

30 விழுக்காடு நிதி குறைப்பு

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடக்கிறது. கடந்தாண்டு மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 30 விழுக்காடு குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கிராமப்புறங்களில் அந்த பணிகளை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தும் எண்ணம் பாஜக அரசுக்கு இல்லை.  இதை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.  அங்கன்வாடி உள்ளிட்ட திட்ட ஊழியர்களின் நிலை என்ன? மதிய உணவுத்திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், ஆஷா திட்டத்தில் பணிபுரியும் நமது சகோதரிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம் உறுதி செய்யப்படவில்லை. பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று நிதி நிலை அறிக்கையில் நீட்டி முழங்கிய பாஜக அரசு நடைமுறையில் அந்த குழந்தைகளுக்கான நலத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு உரிய சம்பளத்தை கூட வழங்கவில்லை.  இவர்களுக்கான திட்டங்களுக்கு ஒரு பைசா கூட அதிகரிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. மோடி அரசு பெண்களுக்கு எதிரான அரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

பெண்களுக்கு எதிரான அரசு

மகளிருக்கு நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் 33  விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தையும் நிறைவேற்ற பாஜக அரசு தயாராக இல்லை. ஆனால் அவர்களது தேர்தல் அறிக்கையில் மகளிர் இட ஒதுக்கீடு என்பது மகளிருக்கான உரிமை. சரியான கோரிக்கை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மக்களவையில் அவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தயாராக இல்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற நிர்ப்பந்தம் அளிக்க ஸ்மிருதி இரானியும் தயாராக இல்லை, அந்த கட்சியில் உள்ள மற்ற பெண் தலைவர்களும் தயாராக இல்லை. எனவே தான் தற்போது மத்தியில் உள்ள அரசு பெண்களுக்கு எதிரான அரசு என்று  சொல்கிறோம். இது மட்டுமல்ல ஜனநாயகத்திற்கு விரோதமான மதச்சார்பின்மைக்கு விரோதமான கூட்டாட்சிக்கு எதிரான அரசுதான் பாஜக அரசு.

கிரிமினல்களை பாதுகாக்கும் அரசு

மணிப்பூரில் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. அங்கு ஆட்சி செய்யக்கூடிய பாஜக அரசு இதை தடுக்க தவறி விட்டது. இவ்வளவு நடந்த பிறகும் பாஜக முதல்வர் ராஜினாமா செய்யவில்லை. அவரை பதவி விலகும் படி ஒன்றிய பாஜக அரசும் கோரவில்லை. இதுதான் பாஜக. கிரிமினல்களை பாதுகாக்கும் அரசுதான் பாஜக. ஒன்றிய உள்துறை அமைச்சர் தலைநகர் இம்பாலுக்கு மட்டுமே சென்றார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை ஏன் பிரதமர் மணிப்பூர் செல்லவில்லை? நமது சகோதரிகள் தாக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இல்லையா? மணிப்பூர் சம்பவங்கள் நமது தேசத்திற்கே அவமானம்.  மனுவாத சித்தாந்தங்களை அமல்படுத்துவதே தற்போதுள்ள ஆட்சியாளர்களின் நோக்கம். அதற்காக மணிப்பூர் மாநிலத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் ஒற்றுமை அவர்களுக்கு அவசியம் இல்லை. மத ரீதியாக மக்கள் பிளவுபட்டு நின்றால் தான் தங்களது நோக்கம் நிறைவேறும் என்று நினைக்கிறார்கள். இந்துக்களை தவிர மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லையென்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. 

கோவா மாடலின் கொடுமை

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக பாஜக கூறுகிறது. பெரும்பாலான சட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை. எனவே இந்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். கோவாவில் அமல்படுத்தும் போது ஏன் நாடு முழுவதும் இதை அமல்படுத்த முடியாது என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்கிறார். கோவாவில் திருமணமான பெண் ஒருவர் 25 வயதிற்குள் குழந்தை பெறவில்லை என்றால் அந்த பெண்ணின் கணவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அதேபோல் பெண் 30 வயதுக்குள்  ஆண் குழந்தையை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். இது தான் கோவா மாடல் பொது சிவில் சட்டம்.   வடகிழக்கு மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவோம் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் கூறுகிறார்கள். அந்த மாநிலங்களில் கிறிஸ்துவர்கள் கணிசமாக வாழும் பகுதிகள் அதிகமாக உள்ளன. அங்கு பொது சிவில் சட்டம் அமல் படுத்தப் பட்டால் கடுமையான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தக்கூடாது என்று நாம் சொல்கிறோம். 

கேரள அரசின் சாதனை

நான் கேரளாவில் இருந்து வருகிறேன். எங்களது மாநிலத்தில் உள்ள இடதுஜனநாயக முன்னணி அரசு இதர மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளிடமிருந்து வேறுபட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பெண்களுக்கு ஆதரவான மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின்பற்றும் அரசு அங்கு உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதி உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர் சம்மேளன  அகில இந்திய மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகள்:  தமிழில்: அ.விஜயகுமார்

Comment here...