வங்கிக் கடனை செலுத்தாத கார்ப்பரேட் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தேவை

நமது நிருபர்

வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத கர்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர்  சம்மேளன 11வது அகில  இந்திய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட் தீர்மானம் வருமாறு:   பொதுத்துறை  வங்கிகள் அவற்றின் இருப்புநிலைக் குறிப்பில் பெரிய அளவில் செயல்படாத சொத்துக்கள் என்ற பெயரில் வராக் கடன்களை   குவித்து வைத்துள்ளன. இதனால் வங்கிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.  2017-18, 2018-19 நிதியாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில், கிட்டத் தட்ட ரூ.1.78 லட்சம் கோடி  வராக்கடன்கள் மொத்தமாக  பொதுத்துறை வங்கி களுக்கு இழப்பை  ஏற்படுத்தின. 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் இந்த இழப்புகள் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ லாபமாக மாற்றப் பட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய இந்த கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து அவர்களை காப்பாற்றும் நடவடிக்கை யில் இறங்கின.

 2021-22 நிதியாண்டில் வணிக வங்கிகள் வராக் கடன்களில் ரூ. 174966 கோடி களை தள்ளுபடி செய்ததாகவும், தள்ளுபடி செய்யப் பட்ட கணக்குகளில் இருந்து வெறும் ரூ.33534  கோடி மட்டுமே திரும்ப வங்கி களுக்கு செலுத்தப்பட்ட தாகவும் மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறினார். 2017-18 முதல் 2021-2022 வரையிலான நிதியாண்டுகளில் ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பொதுத்துறை வங்கி களில் பெரிய தொகையை கடனாக பெற்று அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் திருப்பி செலுத்துவதில்லை.  இது  வங்கிகளின் நிதி  ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  எனவே வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான வராக்கடன் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்,  கார்ப்பரேட் முதலாளிகள்- மற்றும் கடன்களை முழுமையாக மீட்டெடுப்பதை உறுதி செய்யும் வகையில் வெளிப் படையான கொள்கையை வெளியிடவேண்டும். கடனை திருப்பி செலுத்தாத பெரு நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெபி மாநாடு கோருகிறது. பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் மற்றும் தவறிழைக்கும் நபர்களுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் உறுதியுடனும் தொடரவும் மாநாடு தீர்மானித்துள்ளது. 

இதர தீர்மானங்கள் 

வங்கிகளில் பணிபுரியும் அனைத்து தற்காலிக மற்றும் கேசுவல் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,12வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்கவேண்டும், ரிசர்வ் வங்கி சுயேட்சையான சாசனங்களுடன் தன்னாட்சியுடன் செயல்படுவதை உறுதிப் படுத்தவேண்டும், மக்களுக்கு தடையின்றி சேவையாற்ற வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களை வலுப்படுத்த புதிய  கொள்கைகயை ரிசர்வ் வங்கி உருவாக்கவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, அனைவருக்கும் சுகாதாரமும் கல்வியும் கிடைக்கச் செய்யவேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான தொகையை அதிகரிக்கவேண்டும்.

அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச சம்பளத்தை ரு26ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், மகளிருக்கான மகப்பேறு விடுமுறையை இரண்டு வருடமாக உயர்த்த வேண்டும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல் வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும், மாதவிலக்கு  காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Comment here...