நமது நிருபர்
இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு ஆக.14 அன்று சென்னை யில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பெபி ஸ்தாபக பொதுச் செயலாளர் அசீஸ் சென் நினைவு – நூற்றாண்டு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. அதில் ஆர்.கருமலையான் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஓய்வூதியத்தை ஒழித்துக் கட்ட நிர்ப்பந்திக்கும் உலக வங்கி சதிகளை ஒன்றுபட்ட வலுவான போராட்டங்களால் முறியடிப்போம். முதியோர் யாவருக்கும் உத்தரவாதமான ஓய்வூதிய உரிமையை வென்றெடுப்போம் என்று சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் கூறினார்.
தோழர் அசீஸ் சென் வங்கி ஊழியர் இயக்கத் தலைவர் மட்டு மல்ல, உழைப்பாளி வர்க்க நலனுக்கான மகத்தான அர்ப்பணிப் போடு இடையறாது பேரார்வத்தோடு இயங்கிய அருமையான செயல் வீரர். அவரது நினைவை ஏந்தி, நமது கடமைகளை அவரின் சீரிய சிந்தனை களோடு முன்னெடுப்போம். உலகமய பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்டது என்கிற கருத்தாக்கமே செல்லாது. எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கிறது. மணிப்பூர் பிரச்சனை குறித்து பேச அவைக்கு வர மறுத்த பிரதமரை, கூட்டத்திற்கு வர வைக்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் ஒற்றை விவாதம் கூட நடத்தாமல் 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விஷயங்கள் தொடர்பான பல மசோதாக்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி உள்ளனர்.
பொருளாதார ரீதியில் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் மக்களது வாழ்க்கை, மிகுந்த போராட்டங்களுக்கு ஆட்பட்டுள்ளது. மக்களின் சமூக பாதுகாப்பு பற்றிய ஒன்றிய அரசு சிந்தனையின்றி உள்ளது. முதுமையில் பரிதவிப்போர் கண்ணியமான வாழ்க்கை வாழ யார் பொறுப்பு? 2040இல் இந்தியாவில் மிகப் பெரிய எண்ணிக்கையில் முதியோர் இருப்பார்கள். ஆனால், முதியோர் நலனுக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒரு பைசா கூட ஒதுக்குவதில்லை. ஒட்டுமொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 12 விழுக்காட்டினருக்குதான் ஏதேனும் ஒரு வகையில் ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஆனால், ஓய்வூதிய திட்டம், ‘நிதி ஒழுங்கீனம்’ என்று ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி அமைப்புகள் வர்ணிக்கின்றன.
ஓய்வூதிய சீர்திருத்தங்களை உலக வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் நோக்கம், அதை ஒழிக்க வேண்டும் என்பதுதான். புதிய ஓய்வூதிய திட்டம் சந்தையின் தயவில் இயங்குகிறது. ஏற்கெனவே தொழிலாளர்களது சேம நல நிதியை முதலாளிகள் முறைப்படி செலுத்தாமல், மடைமாற்றியதால், தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். இதில் மிகப் பெரிய மோசடியே நடந்திருக்கிறது. எனவேதான், உத்தரவாதமான ஓய்வூதியம் தேவை. ஒன்றிய பாஜக ஆட்சியில், கடந்த 9 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெரும் பணக்காரர்களின் வராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. ஆனால், பணியாளர்களுக்கு உத்தரவாதமான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கோரினால், நிதியில்லை என்கின்றனர். போதிய நிதி இல்லை என்பதல்ல பிரச்சனை, சமூக பாதுகாப்பு உறுதி செய்ய மனமற்ற புதிய தாராளமய நிர்ப்பந்தச் சூழலே காரணம். அரசியல் உறுதி இருந்தால் நிச்சயம் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். வலுவான போராட்டங்களால் உலக வங்கி சூழ்ச்சிகளை முறியடிப்போம், நியாயமான ஓய்வூதியத்தை வென்றெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.