பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் – சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம்

நமது நிருபர்

பெபி அகிலஇந்திய மாநாட்டில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பேச்சு

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் என்பது சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா ளர்  தபன் சென் கூறினார். சென்னையில்  சனிக்கிழமையன்று (ஆக.12) இந்திய வங்கி ஊழியர் சம்மேளன 11வது அகில இந்திய மாநாட்டை  தொடங்கிவைத்து அவர் பேசியது வருமாறு; 1991 ஆம்  ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகளை எதிர்த்து இந்திய  தொழிற்சங்க இயக்கம் தொடர்ச்சியாக போராடி வருகிறது. சர்வதேச நிதி மூல தனத்திற்கு ஆதரவான பொருளாதார கொள்கைகள் தொழிற் சங்க இயக்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளன. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமைகளையும், சுயசார்பு பொருளாதாரத்தை சீர்குலைக்கக் கூடிய வேலைகளையும் பெரு நிறுவனங்களுடன் இணைந்து ஒன்றிய அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. வங்கிகள் எதற்காக தேசிய மயமாக்கப்பட்டனவோ அந்த உன்னதமான நோக்கத்திற்கு எதிராக தற்போதுள்ள அரசு செயல்பட்டு வருகிறது.

1930 ஆம் ஆண்டு உலகில் மிகப்பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர் அரசுத்துறைகள் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவில் பொதுத்துறை நிலக்கரி சுரங்கங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டன. சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன்கள் வழங்கப்பட்டன. வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் பசுமை புரட்சி உருவானது. இதனால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது. ஆனால் புதிய தாராளமய தனியார்மய பொருளாதார கொள்கைகள் இந்த சாதனைகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1995ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க இயக்கம் முதலாவது வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அதற்கு பின்னர் இதுவரை நாடு தழுவிய 21 பொதுவேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இவை தவிர துறை வாரியாக ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. வங்கிகள் தனியார் மயத்திற்கு எதிராகவும் பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை கண்டித்தும் வங்கி கிளைகள் மூடப்படுவதை எதிர்த்தும் வங்கி அரங்கில் உள்ள தொழிற்சங்கங்கள் மகத்தான வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியுள்ளன.

வங்கி ஊழியர்களின் போராட்டம் என்பது ஏதோ பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதற்கான போராட்டமல்ல; சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டமும் ஆகும். சர்வதேச நிதி மூலதனம் தங்கு தடையின்றி பாய்கிறது.  பன்னாட்டு பெருநிறுவனங்கள் இநதியாவில் பல ஆயிரம் கோடி ருபாய்  முதலீடு செய்கின்றன. ஆனால் அதனால் உருவான வேலை வாய்ப்புகள் சொற்பமாக உள்ளன. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலுக்கு வந்த பின்னர் வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள நாசகரமான விளைவுகளை வங்கி ஊழியர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வங்கிகள் இணைக்கப்படுகின்றன. வங்கிக்கிளைகள் மூடப்படுகின்றன. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் அதிகளவில் இது நடைபெறுகிறது.  இதுகுறித்து இந்த மாநாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். பிரச்சனையின் தீவிரத்தை நாம் உணர்ந்தால் தான் எதிர்ப்பு இயக்கங்களை வலுவாக கட்டமைக்க முடியும்.

சட்டவிரோத செயல்களை சட்டப்படி செய்வதற்கு மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது. வங்கி திவால் நடைமுறைகளை எளிமைப் படுத்தவும் விரைவுபடுத்தவும் ஐபிசி கோடு என்ற பெயரில் ஒரு விரிவான சட்டத்தை 2016  பாஜக அரசு நிறைவேற்றியது. அப்போது நாடாளுமன்றத்தில் இருந்து இடதுசாரி கட்சி  உறுப்பினர்கள் மட்டுமே இதற்கு எதிராக குரல் எழுப்பினர். பொதுத்துறை வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள் பெருமளவு ஏமாற்றப்பட்டுள்ளன. இது மக்களுடைய பணம். பெரு நிறுவனங்களை ஊக்கவிக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை கொண்டுவந்தார்கள். உள்நாட்டு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலிருந்து அதிகரிக்கும் விற்பனையில் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும் இது. மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வழித்தடங்கள்,  பெட்ரோலியம் விநியோகம், எரிவாயு குழாய், ரயில்வே, தொலைத்தொடர்பு என இவை அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு   30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கிட்டத்தட்ட இலவசமாக ஒப்படைக்கப் படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று பணமாக்கும் அரசின் மோசமான அணுகு முறையை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கம் மக்களை திரட்டி போராடி வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய அரக்கத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக சிஐடியு மற்ற அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்துகிறது. இதர தொழிற் சங்கங்களை திரட்டி மக்களை பாதுகாப்போம் தேசத்தை பாதுகாப்போம் இயக்கத்தை சிஐடியு நடத்துகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால் போதாது கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கடைபிடித்து வரும் மக்களுக்கு விரோதமான, தேச நலனுக்கு எதிரான  நவீன தாராளமய தனியார்மய பொருளாதார கொள்கைகளும் தோற்கடிக்கப் படவேண்டும். எனவே அத்தகைய போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநாடு அமையும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இவ்வாறு தபன்சென் பேசினார்.

மாநாட்டு துவக்க நிகழ்ச்சி 

முன்னதாக டவுட்டன் ஒய்எம்சிஏ வளாகம் அருகிலிருந்து மாநாட்டு திடல் வரை வங்கி ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. மாநாட்டு துவக்க நிகழ்ச்சிகள் தோழர் எஸ்.பரதன் வளாகம், தோழர்கள் எஸ்.ஆர்.பால், ஜெ.பி.தீக்ஷித், ஏ.ரெங்கராஜன் நினைவரங்கில்  தொடங்கியது. அங்கு மாநாட்டு கொடியை சங்கத்தின் தலைவர்  சி.ஜெ.நந்தகுமார் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமாநாட்டிற்கு சி.ஜெ.நந்தகுமார் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் உரையை சிஐடியு மூத்த தலைவர் ஆர்.சிங்காரவேலு வாசித்தார்.

வாழ்த்துரை

இதனைத்தொடர்ந்து பிஎஸ்என்எல்இயு அகில இந்திய உதவிபொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர்  ஸ்ரீகாந்த் மிஸ்ரா, தோழமை வங்கி ஊழியர் சங்கத் தலைவர்கள் எஸ்.கே.பந்தலிஷ், எஸ்.டி.சீனிவாசன், ஆர்.கே.சாட்டர்ஜி,  ரகுராம், வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். பெபி பொதுச்செயலாளர் தேபாசிஷ் பாசு  நன்றி கூறினார்

Comment here...