ஊழியர்களின் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்த உரிமை

தலையங்கம்

சுதந்தர இந்தியாவின் 76 வது சுதந்தர தினத்தை சமீபமாக கொண்டாடினோம். அதாவது நாம் சுதத்திர காற்றை 76 ஆண்டுகளாக சுவாசித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் பெயரளவில் இல்லாமல் முழு சுதந்திரம் அடைந்துவிட்டோமா? யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஏனென்றால் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சமீபத்தில் நாம் பெற்றோம்.(RIGHT TO VENT- உள்ளத்து உணர்வுகளை வெளிகாட்ட முழு சுதந்திரம் உண்டு) என்று அந்த தீர்ப்பை பெறுவதற்கு முன்னால் நாம் சுதந்திரமாக நம் கருத்தை பொது வெளியில் சொல்ல முடியாது, சொல்ல கூடாது என்பது தானே அர்த்தம். அதற்கேற்றாற்போல தான் தமிழ்நாடு கிராம வங்கியில் நடந்தது. 

கடந்த ஆண்டு நிர்வாகம் பணிமாறுதல்கள் போடும் அதிகாரத்தை அதன் மண்டல அலுவலர்களுக்கு வழங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பொதுவாக அதிகாரப் பரவலை கோரும் அதன் சங்கத்தினர் அந்த வங்கியின் மண்டல மேலாளர்களின் எதேச்சதிகாரப் போக்கினை கணக்கில் கொண்டு நிர்வாகத்தின் முடிவு சரியானதல்ல என்பதன் அடிப்படையில் ஒரு செய்தியை வெளியிட்டது.

அந்த செய்திக்கு பல தோழர்கள் அவர்களின் ஆதரவான கருத்துக்களை அவர்களது சங்க  வாட்ஸ்-அப் குழுவில் தெரிவித்து இருந்தார்கள். அதில் தோழர்கள் லட்சுமிநாராயணன் மற்றும் ரகுகோபாலும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். 

அப்படி  அவர்களது தனிப்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டிருந்த தகவலை எவரிடமோ இருந்து பெற்றுக்கொண்டு அதனடிப்படையில் தோழர்கள் லட்சுமிநாராயணன் மற்றும் ரகுகோபாலை சஸ்பெண்ட் செய்தது அந்த நிர்வாகம். 

உடனடியாக கருத்துரிமை மீதான அந்த நிர்வாகத்தின் தாக்குதலை கண்டித்து அலுவலர் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தம் உட்பட தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக நிர்வாகம் இரு சங்கங்களோடு  பேச்சுவார்த்தைக்கு வந்தது. அதேசமயம் மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளைகளில் இருவரின் சஸ்பென்ஷனுக்கும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில்   இருவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இப்படி இருதரப்பும் பேசி முடித்துக்கொண்ட பிரச்சனையில் பின்னர் அச்சுறுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் இருவருக்கும் சார்ஜ் ஷீட் வழங்கியது. அந்த சார்ஜ் ஷீட்டை  ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்கள்.

தற்போது அந்த சார்ஜ் ஷீட் ரத்து செய்யக்கோரிய வழக்கில்  தோழர். லட்சுமிநாராயணனின் சார்ஜ் ஷூட்டை ரத்து செய்து  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் நீதியரசர் திரு. G.R.சுவாமிநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இந்த மகத்தான தீர்ப்பிற்கு காரணமான  வழக்கறிஞர் தோழர்.கீதா வைத்த சில முக்கியமான வாதங்களையும்- தீர்ப்பின் அம்சங்களையும் பார்ப்போம்…

* Article 19(1)(a) –ன் படி இந்திய அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதே.  அதேசமயம் ஒரு அரசு ஊழியர் சாமான்ய மனிதரைப் போல் தன் பேச்சுரிமையை பயன்படுத்தி விட முடியாது என்பதும்  அவர் ஒரு குறிப்பிட்ட Conduct Rules-கு கட்டுப்பட்டவர் என்பதும் உண்மைதான். 

ஆனால் அதேசமயம் சிறையில் உள்ள ஒருவருக்கு கூட அடிப்படை உரிமைகளை உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் அடிப்படையில் உறுதி செய்கிறது , அதனை சிறை கம்பிகளால் கூட தடுத்து நிறுத்தி விட முடியாது.  இப்படி ஒரு சிறைக் கைதிக்கே இத்தனை அடிப்படை உரிமைகள் இருக்கும் போது ஒரு வங்கி ஊழியருக்கு Article 19(1)(a) –ன் படி இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் பேச்சுரிமையை எவரும் பறித்து விட முடியாது.

* ஒரு தனிப்பட்ட விவாதத்தை நிர்வாக ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுக்குள்   வர முடியாது. 

The concept of privacy is now a recognized fundamental right (AIR 2017 SC 4161 ( Justice K.Puttaswamy (Rtd) vs. Union of India). தனிநபர்களுக்கு மட்டுமல்ல குழுக்களுக்கும் Privacy Rights உண்டு. சங்கம் தன் உறுப்பினர்களை ஒன்றிணைக்க ஒரு வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கியுள்ளது. அதில் நிர்வாகத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் பார்வையில் விமர்சனங்களை முன் வைத்து உள்ளார். அவரது மொழி நடை சிலருக்கு கசப்பாக இருக்கலாம் ஆனால் அது அவரது தனிப்பட்ட நடை.

^The Honb’le high court of kerala (The Hon’ble Mr.Justice A.Muhamed Mustaque) observed in WP(C) No.27355 of 2018 dated 28/09/2018 (Anilkumar A.P vs Mahatma Gandhi University and ors) கீழ்கண்டவாறு கூறுகிறது…

அதிருப்தி அடைந்த ஒருவர் தன் உணர்ச்சி வெடிப்பால் சமூக ஊடகத்தில் உரத்த குரலில் பதிவிடுவது என்பது கருத்துரிமையின் வெளிப்பாடே…”

அடிமைத்தனம் குறித்த ஒருவரின் கண்னோட்டத்தை அரசாங்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது. ஒழுக்கம் என்பது ஒரு விதிமுறைதான். அதேசமயம் ஒழுக்கத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இங்கு வேறுபாடுகள் உண்டு. ஒருவேளை ஒரு அரசாங்க ஊழியர் சமூக ஊடகத்தில் தன் பொதுவான பார்வையை பதிவு செய்யும் போது அது அந்த நிறுவனத்தின் கூட்டுணர்வுக்கு எதிராக இருந்தாலும் அது அவரது பேச்சு உரிமையாகவே கருதப்பட வேண்டும். எந்தவொரு அதிகாரியும் அவர் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. ஒரு பொதுநிறுவனத்தின் ஆயுள் என்பது அது எந்தளவிற்கு ஜனநாயக மாண்புகளை மதிக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. சுதந்திரமான கருத்துரிமையே மதிப்புமிக்க ஜனநாயகத்தின் மூலக்கல். பொது அதிகாரத்தின் வெளிப்பாடு என்பது தன் மக்களின் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும்.”

* The Hon’ble High Court of kerala in WP (C) No.21994 of 2020 dated 26/03/2021 (Retheesh P.V vs Kerala State Electricity Board Ltd)  கீழ்கண்டவாறு கூறுகிறது..” ஒருவர் தன் தனிப்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் (without any public access) இழிவான சொற்களில் ஒன்றை பதிவிட்டாலும் அதன் காரணமாகவே அவர்மீது ஒழுங்கு மீறல் நடவடிக்கையை எடுக்க முடியாது…”

* “ஒரு டீக்கடையில் நடக்கும் விவாதங்களின் மீது எப்படி நிர்வாகம் கவனத்தில் கொள்ள முடியதோ அதேபோல் தான் ஒரு தனிப்பட்ட குழுவில் நடக்கும் விவாதங்களின் மீதும் இருக்க முடியும் ஏனெனில் இரண்டிற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை”

* ஒருவருக்கு தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. மேலும் அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அது ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்கள் கொண்ட வாட்ஸ்-அப் குழுவில் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டது. மேலும் அந்தப் பதிவு எந்தவகையில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என நிர்வாகம் கூறவில்லை. மேலும் அந்த கருத்தால் நிர்வாகத்தின் நன்மதிப்பு எந்தவகையில் பாதிக்கப்பட்டது என்பதையும் அவர்கள் நிறுவவில்லை….”

இப்படியாக பல்வேறு தீர்ப்புகள், வழக்குகள் என சுட்டிக்காட்டியும் வலிமைமிக்க தன் வாதங்களை முன்வைத்தும் கருத்துரிமைக்கு எதிராக தோழர்.லட்சுமி நாராயணனுக்கு வழங்கப்பட்ட சார்ஜ் ஷுட்டை ரத்து செய்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை நமக்கு பெற்று தந்துள்ளார் தோழர்.கீதா அவர்கள். 

இங்கு நிர்வாகங்கள் ஒன்றும் வானளாவிய அதிகாரங்கள் கொண்டவை அல்ல. அவைகள் ஊழியர்களின் உரிமைகளை பறிக்கத் துடிக்கும் போது அவர்களுக்கு எதிராக வெகுண்டு எழுந்து கேள்விகள் எழுப்ப வேண்டியது ஊழியர்கள் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். 

நாடு முழுவதுமே இன்று கருத்துரிமை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் ஒரு காலக்கட்டத்தில் இப்படியான தீர்ப்புகள் பெரும் நம்பிக்கையை நம்மைப் போன்றவர்களுக்கு கொடுக்கிறது. அந்தவகையில் இந்த தீர்ப்பு நம் சமகாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இதுபோன்ற தீர்ப்புகள் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். இன்று மதுரையில் தரப்பட்ட இந்த நீதி நாளை காஷ்மீரின் தோழர்களை கருத்துரிமைக்கு ஆதரவாக காப்பாற்றும். 

உலகின் சிறந்த சொல் ‘செயல்’- நாம் தொடர்ந்து செயல்படுவோம்….

One comment

Comment here...