இலங்கைப்பொதுவுடைமை இலக்கியச்செம்மலர்

கே டானியல்:  

எஸ் வி வேணுகோபாலன் 

“மிக இளம் வயதிலேயே தீவிரமாக இலக்கிய படைப்புகள் எழுதத் தொடங்கிய அந்த மூவருமே மார்க்சிய சிந்தனையாளர்கள், ஒருவர் டொமினிக் ஜீவா, மற்றவர் எஸ் பொன்னுத்துரை. இன்னொருவர் யார்? கே டானியல்! தனது இறுதி மூச்சுவரை சிந்தித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த டானியல், வர்க்க பேதமும் வருண பேதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தெளிவான மார்க்சியப் பார்வையைக் கடைசிவரை கொண்டிருந்தவர். ஒடுக்கப்பட்ட சாதியினரில் கடைச்சாதியாகக் கருதப்படும் அருந்ததியர் பற்றி முதலாக நாவல் படைத்தவர் டானியலாகத் தான் இருக்க முடியும். தீண்டாமைக்கு எதிராக, சாதீய இழிவுக்கு எதிராகத் துணிந்து தொடர்ந்து களத்திலும் எழுத்திலும் இயங்கிவந்தவர் டானியல். 

“1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது,  தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கையில் வழி மறித்து அவர்கள் புத்தகங்கள் பிடுங்கிக் கிழித்து எறியப்பட்ட கொடுமை இந்த நூலக எரிப்புக்குக் குறைந்தது அல்ல என்று  அதனால் தான் எழுதினார் டானியல். இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டக் குழுக்கள் தோன்றியபிறகு, சாதீய பிரச்சனைகள் பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைமை உருவானது.  அப்படிப் பேசினால் தமிழர்களுக்குள் பிரிவினை உண்டாகும் என்பதாக அவர்களுக்குப் புரிதல் இருந்தது. டானியலுக்கு மிரட்டல் கடிதம் கூட அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் துணிந்து இயங்கினார், சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, உண்மையைச் சொல்வேன் என்று நின்றார். ஆனால் தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் செயல்பட முடியாமல் போயின. 

“இங்கே வெளியிடப்பட்ட சாநிழல் நாவல், அவர் 1962 யிலேயே சிறுகதையாக எழுதி வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் நோய்வாய்ப்பட்டு, சரியாக எழுத இயலாமல் தொடர்ந்து பேசக்கூட இயலாமல் இருக்கையில் அந்தச் சிறுகதையை விரித்து நாவலாக எழுதி முடித்தார். ஆனால், அதை அச்சிடும் முன்னரே மறைந்துவிட்டார். அதற்கு முன்னரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்த போது வேறு ஒரு படைப்பை எழுதி முடித்த போது, தான் மரணத்தை வென்று விட்டோம் என்று சொல்லவில்லை, நாவல் மரணத்தை வென்றது என்றுதான் சொன்னார். இப்போதும் அதையே சொல்ல முடியும், 1926இல் பிறந்து 1986இல் மறைந்துவிட்ட அவரது நாவல் பிரதி கைவிட்டுக் காணாதுபோய்க் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியாவது, நாவல் மரணத்தை வென்று விட்டது என்றே கொள்ள வேண்டியது. 

“சாநிழல் நாவலில் சுடலை ஒரு பாத்திரம்.  தனது வாழ்க்கைத் துணையைக் கூட அவன் இங்கே வந்து தமிழகத்தில் திருமணம் செய்துகொண்டு இலங்கைக்குப் போவது சொல்லப்படும். அவன் மனைவி காளி. அவன் கோயிலுக்குப் போக அழைக்கிறான், அவளோ மறுக்கிறாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் முக்கியம், பாப்பாரப் பய தூக்கி வீசுற பிரசாதம் வேண்டாம்  என்கிறாள். அப்போது கதையில் வரும் டாக்டர் கேட்கிறார், நீ சுயமரியாதை இயக்கமா என்று.  இல்லை என்கிறாள். உங்க ஊர்ல தாடி வச்சுக்கிட்டுப் பெரியார் என்பவர் இருக்கிறாரே, அவரைப் பின்பற்றித் தான் இப்படி பேசுகிறாயா என்று கேட்க, அதெல்லாம் எனக்கு தெரியாது…எங்க கிராமத்துக்கு உயரமா கறுப்பா மீசை வச்ச ஒருத்தரு வருவாரு….ஜீவான்னு சொல்வாங்க…அவரத் தான் தெரியும் என்பாள்.  தனக்கு ஜீவா மீதுள்ள மரியாதையைக் கதையில் படைக்கிறார் டானியல்.

“ரசனை இலக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கின்றனர், மக்கள் வாழ்க்கையை அவர்களது மொழியில் அவர்களுக்காகப் படைப்பேன் என்று நின்ற டானியல் இன்றும் பேசப்படுகிறார், இதெல்லாம் இலக்கியமா என்றவர்கள் காணாமல் போனார்கள் …….”

நீங்கள் மேலே காண்பது, அப்படியே ஒன்றிக் கேட்க வைத்த ஓர் உரையின் மிகச் சுருக்கமான பதிவு. பேசியவர் எழுத்தாளர் ஷோபா சக்தி ! 

ஒரு சிற்றரங்கில் கட்டிப்போட்டது போல் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஓர் எளிமையான நூல் வெளியீட்டுக் கூட்டம் தான், ஆகஸ்ட் 22 அன்று சென்னையில் நடந்தது. ஆனால், மிகவும் கவன ஈர்ப்பாக அமைந்த அடர்த்தியான உரைகள் ஒவ்வொன்றும். 

தொடக்க உரையாற்றிய பேராசிரியர் அ மார்க்ஸ், எப்படி எழுத்தாளர் டானியல் தான் தலித் சமூகத்தில் பிறந்தவராக இருப்பினும் சுய சாதி பற்றாளராக இராமல் சமூக மாற்றத்திற்கான தாகத்தைத் தோழர் ஜீவானந்தம் தனக்குக் காட்டிய வழியில் பற்றிக் கொண்டு செயல்பட்டவர், இறுதிக் காலத்தில் தஞ்சையில் தனது வீட்டில் தங்கி இருந்து இந்த சாநிழல் நாவலை எழுதி முடித்தார், அவர் மறைந்தபோது தஞ்சையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், இடதுசாரிகள் குழுமி நின்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர், அப்போதைய இலங்கை அரசியல் சூழலில் குடும்பத்தார் வரமுடியாத நிலையில் தஞ்சையிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது என்பதையும் விளக்கினார். 

பேராசிரியர் லெனின், டானியல் குறிப்பிடும் துரும்பர் சாதி என்பது இங்கே புதிரை வண்ணார் என்று சொல்லப்படுவது. எங்கள் கல்லூரியில் அந்த வகுப்பைச் சார்ந்த மாணவருக்கு சீட் கொடுக்க நான் சண்டை போட்டேன், தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களில் சிலர் அதை எதிர்த்தனர். அவர்களுக்குப் புரியவில்லை, துரும்பர் என்பதே கேள்விப்பட்டது இல்லை. அந்த மாணவர் இப்போது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் சிறப்பான பணியில் இருக்கிறார். சாதீயம் இன்றும் தொடரும் கொடுமைகள் பார்க்கிறோம். சாநிழலில், ஷோபா சக்தி குறிப்பிட்டதுபோல், சாமி இல்லை என்ற குரல் ஒரு பெண் பாத்திரத்தின் மூலம் 1962யிலேயே டானியல் பேச வைத்தது புரட்சிகரப் பார்வை என்றார்.

டானியல் அவர்களுடைய மகன் டானியல் வசந்தன் பேசுகையில், தந்தையை இறுதிக்காலத்தில் பார்த்துக் கொண்ட பேராசிரியர் மார்க்ஸ், எல்லாப் பணிவிடைகளை செய்த அவருடைய இணையர் ஜெயா இருவருக்கும் நன்றி பாராட்டினார். சிதிலம் அடைந்திருந்த தந்தையின் சமாதி , அண்மையில் தமுஎகச அமைப்பு புதுப்பித்தது, இங்கே நூல் வெளியிட்டது…இவற்றுக்காக கம்யூனிஸ்ட் அமைப்புக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார். பேரா மார்க்ஸ் சாநிழல் நாவலைப் பதிப்பிக்க ஒருவரிடம் கொடுத்து பின்னர் அது நிகழாமல் பிரதி எங்கிருக்கிறது என்றே அறியமுடியாமல் போனபோது, தற்செயலாக பிரான்ஸ் தேசத்துத் தமிழர் ஒருவரோடு பேசுகையில் அவரிடமிருக்க, அதை வாங்கிப் பதிப்பித்து உள்ளோம் என்றார் வசந்தன். 

சாதீயம் மறையவில்லை என்ற வசந்தன், இப்போது தமிழகத்தில் குடிதண்ணீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமையைப் பார்த்தோம். அந்தக் காலத்தில் குடி தண்ணீர்க் கிணற்றில் நஞ்சு கலந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தண்ணீர் அருந்த வந்து இறந்த கொடுமையைத் தான் தண்ணீர் என்ற நாவலாக்கினார் தந்தை என்றார். இப்போது திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் எப்படி நன்றாகப் படிக்கலாம், அவனை எப்படி முன்னுதாரணம் சொல்லலாம் என்று போய் அடித்துள்ள செய்தியும் பாக்கிறோம் என்றார். அண்மையில் இலங்கையில் ஒரு பெண்மணி தனக்குப் பள்ளியின் முதல்வர் பொறுப்பு மறுக்கப்படுகிறது என்று வழக்கு தொடுத்து 14 லட்சம் செலவு செய்து போராடினார், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக மறுக்கப்பட்டது அது, நீதிபதி உடனே கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் போனபோது, நிர்வாகத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது குறிப்பிட்ட மனுதாரரின் வழக்கறிஞர், அடுத்த 14 நாட்களில் அந்தப் பெண்மணிக்கு வயது 60 நிறைவடைந்துவிடும், அதற்காகவே கால அவகாசம் கேட்கின்றனர், அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார், பின்னர், நீதிபதி அடுத்த சில நாட்களில் முதல்வர் பதவி வழங்கப்பட்டே ஆகவேண்டும் ன்று தீர்ப்பு அளித்தார், 14 நாட்கள் பதவிக்கு 14 லட்சங்கள்! இந்த வழக்கு விவரம் இலங்கையில் ஊடகங்கள் எதிலும் வரவே இல்லை என்று முடித்தார் வசந்தன்.  தன்னுடைய சகோதரி டானியல் தாரகாவோடு இந்த நூல் வெளியீட்டுக்காகவே இலங்கையில் இருந்து வந்தோம் என்றார்.

நிறைவாகப் பேசிய தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், இலங்கைப் பொதுவுடைமை இலக்கியத்தின் ஆதி விதைகளில் ஒருவர் கே டானியல் என்று வருணித்தார். மாஜிகல் ரியலிசம் என்கின்றனர், சாநிழல் பிரதி தொலைந்து கிடைத்த கதையே அப்படித்தான் இருக்கிறது. மக்கள் இலக்கியம் இது. சாதீய கொடுமைகள், தீண்டாமை இவற்றைக் காலம் முழுக்க எதிர்த்து இயங்கி இருக்கிறார். தமுஎகச செப்டம்பர் 2 அன்று நடத்த உள்ள சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியைக் கொள்ள முடியும் என்றார்.

தமுஎகச மத்திய சென்னை செயலாளர் ராஜ சங்கீதன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சியை அருந்தமிழ் யாழினி ஒருங்கிணைத்தார். மாவட்டத் தலைவர் அருண் கண்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சாநிழல் புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும். நூறு பக்கங்கள். விலை நூறு ரூபாய்.

One comment

 1. சேற்றுக்குள் அமிழ்ந்த முத்து
  மீட்டெடுத்து கையில் கொடுத்த சொத்து
  சாநிழல் நாவல் மீட்பு கதை.
  சோக நிழலாக ஆசிரியர் டேனியல்
  வாழ்வும் நாவலும்..
  எங்கள் கண்ணீர் அஞ்சலி 😢

Comment here...