புதிய நம்பிக்கைகளை விதைக்கும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு

தலையங்கம்

தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பின் தேவை

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் மூலம் அவை தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளன. மறுபுறம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட தெற்கு உலக நாடுகள் இத்தகைய சவால்களை சமாளித்து தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை சுயமாக வளர்த்திடும் விதமாக வளரும் நாடுகளை ஒன்றிணைத்து “தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பு” என்ற கருத்தாக்கத்தை உருவாக்கின.

பிரிக்ஸ் (BRICS)உருவாக்கம்

ஜிம். ஓ. நெய்ல் என்ற பொருளாதார அறிஞர் “சிறப்பான உலகப் பொருளாதாரம்” என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் “பிரிக்” என்ற சொற்றொடரை முதன் முதலாக பயன்படுத்தினார். பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளின் ஆங்கிலப் பெயர்களில் உள்ள முதல் எழுத்தை வைத்து அவர் இந்த பதத்தை உருவாக்கினார். உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் என்ற அடிப்படையிலும், 2050 ஆம் ஆண்டிற்குள் உலக அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக விளங்கும் என்ற வகையிலும் அவர் இந்த நாடுகளைக் கணித்தார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவின் முன்னெடுப்பில் 2006ஆம் ஆண்டு முதல் முறையாக ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நான்கு நாட்டுத் தலைவர்களும் ஒன்று கூடி பிரிக் என்ற அமைப்பினை அதிகாரப்பூர்வமாக உருவாக்கினர். 2009 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இதன் முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2010 ஆம் ஆண்டு பிரிக் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா தன்னையும் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து இதன் பெயர் பிரிக்ஸ் என்று மாற்றம் பெற்றது. இந்த நாடுகள் தங்கள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய வளர்ச்சி வங்கி (NDB) என்ற ஒன்றையும் உருவாக்கியது. அது முதல் ஒவ்வொரு வருடமும் பிரிக்ஸ் அமைப்பின் ஒரு நாட்டில் இதன் உச்சி மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு உலக அரங்கில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை முறியடிப்பதையே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு தெற்குலக நாடுகளின் ஒருமித்த குரலாக உருவானதே பிரிக்ஸ் அமைப்பு. துவங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு உள்ளாகவே பிரிக்ஸ் அமைப்பு உலக அளவில் தவிர்க்க முடியாத கூட்டமைப்பாக உருவாகியுள்ளது. உலகின் 26 சதவீதம் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிக மக்கள் தொகை என்பது இயல்பாகவே அதிக உற்பத்தி சக்தியைப் பெறுவதால் இவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து தற்போது சுமார் 31 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

பிரிக்ஸ் 15 வது உச்சி மாநாடு

இத்தகைய பல முக்கியத்துவங்களைக் கொண்ட இந்த கூட்டமைப்பின் 15 வது உச்சி மாநாடு கடந்த 24 முதல் 26 ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம், உலக அமைதி, நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல பொதுவான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவற்றைத் தாண்டி இந்த 15 வது மாநாடு குறிப்பான சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஒற்றை ஆதிக்கப் போக்கை எதிர்க்கும் வகையில் டாலரற்ற வர்த்தகத்தை உருவாக்கிடவும், ப்ரிக்ஸ் நாடுகளுக்கு என்று ஒரு பிரத்தியேக நாணயத்தை உருவாக்குவது தொடர்பாகவும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இந்த மாநாட்டில் நடைபெற்றுள்ளன. உலக அளவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் சுயமான வளர்ச்சிக்கு உதவுவது தொடர்பான முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் உலக அளவில் பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தன. இவை 15 வது உச்சி மாநாட்டில் பரிசீலிக்கப்பட்டு முதற்கட்டமாக ஆறு நாடுகளை இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த இணைப்பு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் இந்த இணைப்பு உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் G20 அமைப்பிலும் உள்ளன. மேலும் புதிதாக இணைந்துள்ள நாடுகளில் அர்ஜென்டினா மற்றும் சவுதிஅரேபியா ஆகிய நாடுகள் G20 அமைப்பில் உள்ளன. இதன் மூலம் வரும்காலங்களில் பிரிக்ஸ் நாடுகள் G20 நாடுகளின் கூட்டமைப்பில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு G20 நாடுகளின் கூட்டம் இந்தியாவில் இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

இக்கூட்டங்களில், இந்தியா தனது இறையான்மை, அணி சேரா கொள்கை ஆகியவற்றோடு உலக அமைதி, சீரான வளர்ச்சி குறித்தும் தனது வாதங்களை கொண்டு முன்னேற்றம் கான வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

One comment

  1. ஒரு துருவ ஆட்சி மாறி எல்லா நாடுகளுக்கும் சமமான வளர்ச்சி என்ற நோக்கங்களை நோக்கி நகரும்பிரிக்ஸ் நாடுகளுக்கு வாழ்த்துக்கள்

Comment here...