சனாதன ஒழிப்பு மாநாடு

தலையங்கம்

சனாதனம் என்றால் என்ன?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் வைத்து ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், இடதுசாரிய இயக்கங்களின் தோழர்கள், அறிஞர்கள், முற்போக்கு ஆர்வலர்கள், களச்செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அம்மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சனாதனம் குறித்த தங்களின் கருத்துக்களை அதனால் இந்திய சமூகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக நிலவி வரும் சாதியப் பாகுபாடுகளை எடுத்துரைத்து பேசினர். அப்படி அம்மாநாட்டில் தி.மு.க வின் அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தன் கருத்துக்களை முன்வைத்து பேசினார்.

அவர் பேசும் போது, ‘இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச்சரியாக பெயர் இட்டுள்ளீர்கள். சனாதனம் எதிர்க்க பட வேண்டியதல்ல மாறாக டெங்கு, மலேரியா, கொரனா நோய்களைப் போல் அதனை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்.’ என அவர் பேசினார். அன்று அவர் மட்டுல்ல திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் அவருக்கு முன்னால் இதே கருத்தைத் தான் பேசி இருந்தார்.

இப்படி திரு.உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்களை தங்களின் கீழ்த்தரமான அரசியல் ஆதாயத்திற்காக பாஜகவினர் தவறாக சித்தரித்து அவர் ஏதோ இந்து மக்களை ஒழிக்க வேண்டும் என்று பேசியதைப் போல திசைதிருப்பி விட்டு தேசிய பேசு பொருளாக அவரது உரையை மாற்றி விட்டனர். அதேசமயம் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சாமியார் ஒருவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் பத்து கோடி வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவித்தார். இப்படி பாஜகாவினரால் நாடெங்கும் சனாதனத்தின் பேரால் விஷமத்தனமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சரி! அப்படி என்னதான் இவர்களுக்கு பிரச்சனை? சனாதனம் என்றால் என்ன?

சனாதனம் என்பது நிலையானது. காலங்களை கடந்து மாறாமல் நிலைத்து நிற்க கூடியது. முதலும் முடிவும் அற்ற தொன்மையானது என அதற்கு பொருள் சொல்லப்படுகிறது.

அப்படி என்ன தான் நிலையானது? மாறாதது? எனப் பார்த்தால் சனாதனம் மனிதர்களை பிரிக்கும் நான்கு வர்ணக் கோட்பாடுகளை நிலையானது என்கிறது. அது மாறாதது என்கிறது. அதாவது பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் பிரிந்து இருப்பதே அது சரி என்கிறது. அவரவர் வர்ணத்துக்கு/ சாதிகளுக்கு ஏற்றபடி வேலைகளை பிரித்துக் கொண்ட சமூகமாக காலங்கள் கடந்து இயங்குவதே சரி என்கிறது சனாதனம்.

இந்த சனாதன தர்மத்தின் படி சூத்திரர்கள் ஏனைய வர்ணத்தார் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வாழ்நாள் எல்லாம் தொண்டூழியம் செய்ய வேண்டும் என சொல்கிறது.

நவீன விஞ்ஞானம் மாறாதது என்று உலகில் எதுவும் இல்லை மாற்றங்கள் ஒன்றே நிலையானது என நிறுவிய பிறகும் சாதியத்தை தூக்கி பிடித்துக் கொண்டு சனாதனத்தை காப்போம் என பேசுவது எத்தனை வேடிக்கையானது? சனாதனம் சாதியத்தை மட்டும் தூக்கிப் பிடிக்கவில்லை. அது பெண்ணடிமைத்தனத்தை சரி என்கிறது. எதையும் கேள்விகளற்று பிறப்பின் வினை என ஏற்றுக்கொள்ள சொல்கிறது. அதன்மூலம் சாதிய ஒடுக்குமுறைகளை கேள்விகளற்று ஏற்றுக்கொண்டு காலகாலத்திற்கும் அடிமைச் சமூகமாகவே வாழச் சொல்கிறது. இப்படி மனிதகுலத்திற்கு விரோதமான ஒரு சமூக கருத்தியலை நாங்கள் ஒழிக்க விட மாட்டோம் என ஒரு சிலர் சொல்லித் திரிவது கொடுமையின் உச்சம்.

’சனாதன தர்மம் தான் எங்கள் வாழ்வியல் முறை. சனாதனம் தொன்மையானது. அதனை  எவராலும் அழிக்க முடியாது. நாங்கள் அழிக்க விட மாட்டோம்’ என சொல்லித் திரிபவர்கள் யார்? என்று பார்த்தால் இவர்கள் தான் அன்றாடம் தங்களின் வாழ்வில் சனாதனத்தை எதிர்த்தே பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எதை தங்கள் வாழ்வியல் முறை என்கிறார்களோ அவர்களே அதற்கு நேரெதிர்மறையான வாழ்வை கொண்டவர்களாக இருப்பதே வேடிக்கையின் உச்சம்!

ஏனெனில்…

எவரால் எல்லாம் படிக்கவும் எழுதவும் முடிகிறாதோ அவரெல்லாம் சனாதன எதிர்ப்பாளர்கள் தான்!

யார் யார் வீடுகளில் எல்லாம் பெண் பிள்ளைகள் படித்துன் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சனாதன எதிர்ப்பாளர்கள் தான்!

இந்திய எல்லை கடந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்-செல்ல முயற்சிப்பவர்கள் எல்லாம் சனாதன எதிர்ப்பாளர்கள் தான்!

உடன்கட்டை ஏறாத பெண்கள், தங்கள் வீட்டுப்பெண்களை உடன்கட்டை ஏறச் சொல்லாதவர்கள் எல்லாம் சனாதன எதிர்ப்பாளர்கள் தான்!

தேவதாசியாக மறுக்கும் பெண்கள் எல்லாம் சனாதனத்தின் எதிர்ப்பாளர்கள் தான்!

யாரெல்லாம் அவரவர்க்கான குழத்தொழிலை செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் சனாதனத்தின் எதிர்ப்பாளர்கள் தான்!

இப்படி சனாதனம் என்பது என்னவென்றே அறியாமல் ஒருபக்கம் அதற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு மறுபக்கம் அதனை அன்றாடம் எதிர்ப்பவர்களாகவே இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஒரு மாநாடு என்ன செய்ய வேண்டுமோ அதனை த.மு.எ.க.ச தோழர்கள் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ மிகச்சரியாக செய்துள்ளது. அவர்களுக்கு நம் செவ்வணக்கங்கள்! சனாதனத்தின் அறியாமை இருளில் மூழ்கி கிடக்கும் இவர்களை மீட்டெடுக்க இன்னமும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதை காலம் இந்த விவாதத்தின் மூலம் நமக்கு வெளிச்சம் இட்டு காட்டியுள்ளது. மாற்றங்கள் ஒன்றே நிரந்தரமானது. சனாதனம் ஒழியும்!

3 comments

  1. இந்த காலகட்டத்தில் தமுஎகச கையில் எடுத்த முக்கியமான சமூகப் பிரச்சனைகளில் ஒன்று சனாதனம் குறித்த பார்வை. மிக முக்கியமான பிரச்சனையை தங்கள் பத்திரிகையில் எழுதி இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.

Comment here...