இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஸ்டேட் வங்கியின் அப்ரெண்டிஸ் பணியிட அறிவிப்பு

க.சிவசங்கர்

ஸ்டேட் வங்கியின் அப்ரெண்டிஸ் பணியிட அறிவிப்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரியதும், நாடு முழுவதும் சுமார் 22,000 க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதுமான இந்திய ஸ்டேட் வங்கி 2023 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டீஸ் வேலைக்கான (Apprenticeship) அறிவிப்பானையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 6160 பணியிடங்களுக்கும், தமிழகத்தில் மட்டும் 648 பணியிடங்களுக்கும் இந்த அறிவிப்பின் மூலமாக ஆள்சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடைநிலை ஊழியர் பணியிடங்கள்

பொதுவாகவே இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடைநிலை ஊழியர்களுக்கான பணியிடங்கள் கடந்த சில பத்தாண்டுகளாகவே முறையாக நிரப்பப்படுவது இல்லை. அந்த இடங்களில் இளைஞர்கள் தற்காலிக ஊழியர்களாக மிகக் குறைந்த தினக்கூலிக்கு பணியமர்த்தப்படுகின்றனர். தற்போதைய நிலையில் நம் நாட்டில் சுமார் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வங்கியிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் எந்த முறைப்படுத்தப்பட்ட பணி நிலைமைகளும், பணிப் பாதுகாப்பும் இல்லாமல் அத்துக்கூலிகளுக்கு பணிபுரிந்து வருகின்றனர்.

மெல்லச் சாகும் ஐ பி பி எஸ் (IBPS) அமைப்பு

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் மற்றும் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் ஐபிபிஎஸ் அமைப்பின் மூலமும், ஸ்டேட் வங்கி தனியாகவும் தேர்வுகள் நடத்தி ஊழியர்களைப்  பணியமர்த்தி வருகின்றன. எனினும் இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. பணி உயர்வு மற்றும் பணி ஓய்வுகள் மூலமாக உருவாகும் காலி இடங்கள் முறையாக நிரப்பப்படுவதில்லை. இதனால் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ஆயிரக்கணக்கான ஊழியர் பற்றாக்குறைகளோடு இயங்கி வருகின்றன. மறுபுறம் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையின்மையினால் தவித்து வருகின்றனர். சில ஆயிரம் வங்கிப் பணியிடங்களுக்கு போட்டியிடும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து லட்சக்கணக்கில் இருந்து வருகிறது.

ஊழியர்களை பணியமர்த்தும் முறையில் பெரும் (ஏ)மாற்றம்

பொதுவாக அப்ரண்டிஸ் பணியிடங்கள் என்பது உற்பத்தி தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும். தொழிற்கல்வியைப் படித்து முடித்து ஏட்டுக்கல்வியை மட்டும் பெற்றிருக்கும் மாணவர்கள் அவை நடைமுறையில் ஒரு தொழிற்சாலையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கற்றுக் கொள்ள வழங்கப்படும் ஒரு பயிற்சியாகவே இந்த அப்ரெண்டிஸ் முறை பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் வங்கிகள் போன்ற சேவைத் துறைகளில் இது போன்ற பயிற்சிகளுக்கான தேவை என்பது நடைமுறையில் அவசியம் இல்லை. மேலும் அப்ரண்டிஸ் என்பது மிகச் சிறிய எண்ணிக்கையில் ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் நிரப்பிக் கொள்ளும் ஒரு நடைமுறையாகும். ஸ்டேட் வங்கி போன்று ஆயிரக்கணக்கில் எந்த ஒரு நிறுவனமும் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் ஸ்டேட் வங்கி 6160 பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் பணி சேர்ப்பிற்கான அறிவிக்கையை தற்போது வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதில் நிரப்பப்படும் பணியிடங்கள் ஒரு வருடம் மட்டுமே ஆயுட்காலம் கொண்டது. சரியாக ஒரு வருடம் முடிந்த பிறகு இந்த 6000 இளைஞர்களும் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தவித பணிப்பயன்களும் இவர்களுக்கு அளிக்கப்படாது. வங்கி நிர்வாகம் ஒரு வருடம் பணி முடிந்து இவர்களை அனுப்பிய பிறகு அடுத்த ஒரு வருடம் மீண்டும் இது போன்று வேறு சில ஆயிரக்கணக்கான இளைஞர்களை பணியமர்த்திக் கொள்ளும். இவ்வாறு ஆண்டுதோறும் இது தொடர்ந்து நிரந்தரப் பணி என்ற அம்சத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

மேலும் இவ்வாறு பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்கள் மிகத் தீவிரமான உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நிரந்தர ஊழியர்களுக்கு இருப்பது போன்ற வரையறுக்கப்பட்ட வேலை நேரம், வரையறுக்கப்பட்ட வேலை ஒதுக்கீடுகள் (Described Work Allocations) என்பன இவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. மாறாக உயர் அதிகாரிகள் சொல்லும் அனைத்து வேலைகளையும் எந்த நேரத்திலும் செய்ய இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

சமூக பொறுப்பு துறப்பு?

ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒன்றாகும். எனவே இந்நிறுவனங்கள் மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரி நிறுவனமாக (Model Institution) செயல்பட வேண்டும். மாறாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி அப்ரெண்டிஸ் பணி என்ற  ஒரு தவறான முன்னுதாரணத்தை வங்கித்துறையில் உருவாக்குகிறது. மிக விரைவிலேயே இந்த திட்டம் பிற பொதுத்துறை வங்கிகளுக்கும் பரவும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஒன்றிய அரசின் கடமை

“அக்னிபாத்” திட்டம் மூலம் இராணுவத்தில் நான்கு வருடத்திற்கு இளைஞர்களை பணியமர்த்துவதை ஒன்றிய அரசு முன்னுதாரனமான திட்டமாக பறைசாற்றுகிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த இளைஞர்களில் பலரின் எதிர்காலம் என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதன் மற்றொறு வடிவமாகத்தான் வங்கிகளில் அப்ரெண்டிஸ் முறை. இது மற்ற துறைகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்தும் உள்ளது. எனவே, ஒன்றிய அரசு, தனது இத்தகைய கொள்கைகளில் மாற்றத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்.  தங்களின் தேர்தல் வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேளை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பொதுத்துறைகளும் தங்களது சமூக பொறுப்பிலிருந்து செயலாற்ற வேம்டும். 

மாணவர், இளைஞர் அமைப்புகளின் போராட்டமே இன்றைய தேவை

வரும்காலங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கக் கூடிய பேரபாயம் மிகுந்த ஒரு நடைமுறையாக மாறக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட இந்த அறிவிப்பினை நாட்டின் ஜனநாயக சக்திகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்திட வேண்டும். நாட்டு நலன் மற்றும் நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்டேட் வங்கி இந்த அப்ரெண்டிஸ் அறிவிப்பினை ரத்து செய்து இதில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக அறிவித்து மாற்று அறிவிப்பானையை உடனடியாக வெளியிட வேண்டும்.

3 comments

  1. வங்கிகளில் முதலில் கடைநிலை ஊழியர்கள் அத்து கூலி ஆனார்கள். இப்போது எழுத்தர்கள். இதை எப்படியாவது தடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது.

  2. வங்கிகளில் முதலில் கடைநிலை ஊழியர்கள் அத்து கூலி ஆனார்கள். இப்போது எழுத்தர்கள். இதை எப்படியாவது தடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது.

  3. உண்மையான ஆபத்து இது.
    பணியில் இருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் போராட்டங்களே.
    இந்த அப்ரன்டீஸ் முறை மூலம் தொழிற்சங்கமாக திரளுவதே ஆபத்துக்கள் ஆகிறது.
    ஆகையால் பணியில் இருக்கும் நிரந்தர ஊழியர்கள் இது எதிர்த்து போராட முன்கை எடுக்க வேண்டும்!

Comment here...